வெள்ளி, 19 செப்டம்பர், 2008

காந்தி தேசத்தின் மறுபக்கம்-06

06
கராச்சிக்குச் செல்லும் தனது திட்டத்தின் முதல் நடவடிக்கையாக உமாமகேஸ்வரன் தனது பெயரை முஹமட் இப்ராஹிம் என்று வைத்துக் கொண்டார்.
தான் கல்முனையைச் சேர்ந்த நகை வியாபாரி என்றும் தனது நகைக் கடையின் பெயர் பரீதா ஜுவலறி என்றும் சொல்லிக் கொண்டார். அதற்கு அத்தாட்சியாக, அரசு முத்திரை பதித்த வர்த்தக அனுமதி சான்று முதல் அடையாள அட்டையும் தயாரித்துக் கொண்டார்.
தன்னுடைய உருவ அமைப்பும் மற்றவர்களின் பார்வைக்கு அசல் முஸ்லிம் வர்த்தகர் போல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது சுருண்ட அடர்த்தியான தலைமயிரை கட்டையாக வெட்டி மீசையையுமழித்துவிட்டார். கிழக்கு மாகாண இஸ்லாமிய வட்டார வழக்கு தமிழ்ச் சொற்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு அது போல் பேசவும் பழகிக் கொண்டார்.
திருகுர்ரானைப் பற்றியும் மற்றும் இஸ்லாமிய மதச் சடங்குகள், தொழுகை முறை பற்றியும்கூட வேண்டிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டார். அடுத்து தனது நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக இருந்த ராபினுடைய பெயரையும் அப்துல் ரஹீம்; என்று மாற்றி அவரை கல்முனை பரீதா ஜுவலறி உரிமையாளர் இப்ராஹிமினுடைய உதவியாளர் என்று சொல்லும்படியும் அவ்வாறே கொழும்பிலுள்ள முஸ்லீம் பகுதிக்குச் சென்று அங்குள்ள முஸ்லீம் இளைஞர்களை சிநேகிதம் பிடித்து அவர்களுடைய பேச்சுவழக்கு, மத விவகாரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி சென்னார்.
ராபின்சனுக்கு இது சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல் இருந்தது. உம்மா, வாப்பா, நிக்கா.. முதற் கொண்டு ஜாதி வேலையில்லையா நீங்க செஞ்சிருக்கிறது என்கின்ற தொனியிலான இஸ்லாமியத் தமிழ் வழக்கு அவனது வாய்க்குள் நுழைய மறுத்தது. இந்த மனுசன் சரியான லொள்ளுப் பிடிச்ச மனுசன். கிழக்கு மாகாணப் பெடியள் எத்தனை பேர் இருக்க, யாழ்ப்பாணக்காரனான (அச்சுவேலி) என்னைப் போய் முஸ்லீம் தமிழ் படிக்கச் சொல்கிறார். என்று புறுபுறுத்துக் கொண்டான்.
ராபின் இவ்வாறு முஸ்லீம் தமிழுடன் மாரடித்துக் கொண்டிருந்த நேரத்தில் உமா தனது நம்பிக்கைக்குரிய மற்றொரு மெய்க்காப்பாளரான சக்திவேல் மூலம் தனக்கும், ராபினுக்கும் முஹமட் இப்ராஹிம் அப்துல் ரஹீம் என்ற பெயர்களின் கடவுச்சீட்டு எடுப்பித்துக் கொண்டார். டிசம்பர் மாதம் 12ம் திகதி உமாவினுடைய பலஸ்தீன நண்பர் ஹமால்தீன் கராச்சிக்கு வருவதாகவும், உமாவை அங்கு வந்து தன்னைச் சந்திக்கும்படியும் தகவல் வந்திருந்தது. 1988 டிசம்பர் மாதம் 11ம் திகதி தான் நுவரெலியாவிற்கு JVP தலைவர்களை சந்திக்கச் செல்வதாக மற்றவர்களுக்குத் தகவல் வெளியிடும்படி சத்திவேலிடம் சொல்லிவிட்டு உமாமகேஸ்வரன் இல்லை முஹமட் இப்ராஹிம், அப்துல் ரஹீமுடன் கராச்சி புறப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இப்ராஹிமுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை கடவுச்சீட்டு, விசா, கடவுச்சீட்டிலுள்ள படம், நேரில் வந்திருக்கின்ற ஆள் எல்லாம் சரியென்று குடியகல்வு அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக் கொண்டு அவர் உள்ளே போய்விட்டார்.
ஆனால் அப்துல் ரஹீம் விடயத்தில் குடியகல்வு பகுதியில் இருந்த ஒரு அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது. ரஹீம் என்ற பெயரில் வந்திருக்கும் இளைஞருடைய தோற்றமும் பேச்சும் உண்மையான முஸ்லீமுக்கு உரியது போல் இல்லை என்பதை அவர் கண்டுகொண்டார்.
இந்த ஆளை மிரட்டினால் ஒரு பெரும் தொகையை இலஞ்சமாகக் கறக்கலாம் என்று அவர் திட்டமிட்டார். எனவே, அவர் ராபினை தனிப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று உண்மையைச் சொல் நீ முஸ்லிம் இல்லை. கராச்சிக்கு எதுக்குப் போகிறாய்? உன்னுடைய உண்மையான பெயர் என்ன? என்று அதிகாரமாகக் கேட்டார்.
ராபினுக்குப் பயம் வந்துவிட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. இல்லை நான் முஸ்லிம் தான்., இதுதான் என்னுடைய உண்மையான பெயர் என்று அவன் அடித்துச் சொன்னான். ஏய் பொய் சொல்லாதை நான் ஒரு முஸ்லிம். நீ சுன்னத்து செய்திருக்கிறாயா என்று பார்த்தால் உண்மையை என்னால் கண்டுபிடிக்கமுடியும். நான் விசயத்துக்கு வாறன். நான் உன்னைப் போக விடுறன், நீ எனக்கு எவ்வளவு தருவாய்? என்று நேரடியாகக் கேட்டார் அந்த அதிகாரி.

மறுத்தால் பிரச்சினையை அவர் பெரிதாக்கி விடுவார், அதனால்தான் மட்டுமல்ல உமாமகேஸ்வரன்கூட பிடிபட நேரும் என்று கருதிய ராபின் நான் 100 டொலர் தாறன் என்று ஒப்புக் கொண்டான்.
சீ.. உதென்ன பிச்சைக் காசு என்று அந்த அதிகாரி சொல்ல சரி எவ்வளவு கேக்கிறியள்? ராபின் திருப்பிக் கேட்டான்.
எனக்கு 500 டொலர் வேண்டும் என்று அந்த அதிகாரி மீண்டும் சொல்ல, ராபின் குறுக்கிட்டு என்னட்டை 1000 டொலர் ரவலர் செக் தான் இருக்குது. காசு அவ்வளவு இல்லை. என்றான்.
உடனே அந்த அதிகாரி அவனை உள்ளே அழைத்துச் சென்று அங்கிருந்த தீர்வையற்ற வர்த்தக நிலையத்தைக் காட்டி அங்கே ஏதாவது சாமான்களை வாங்கி, ரவலர் செக்கை மாற்றி பணத்தை டொலராக வாங்கி வரும்படி சொன்னார்.
ராபின் அங்கே 500 டொலர் செக்கை கொடுத்து, 80 டொலருக்கு கைக்கடிகாரம் ஒன்றை வாங்கிக் கொண்டு மிகுதி 420 டொலரையும் பணமாகப் பெற்று வந்து அந்த அதிகாரியிடம் கொடுத்தான்.

எங்கே மிச்சம்? என்று அந்த அதிகாரி கேட்க ராபின் தான் வாங்கிய கடிகாரத்தையும் மிகுதி 100 டொலர் பெறுமதியாக இருந்த 5 செக்குகளையும் காட்டி இதை மாற்ற முடியவில்லை என்றான்.
கிடைத்தது லாபம் என்று திருப்திப்பட்டுக் கொண்ட அந்த அதிகாரி ராபினுடைய அதாவது அப்துல் ரஹீமினுடைய கடவுச்சீட்டில் குடியகல்வு முத்திரையைப் பதித்து அவனை மேற்கொண்டு செல்ல அனுமதித்தார்.
அவனை குடியகல்வு பகுதியில் தடுத்து வைத்திருப்பதையும் பின்பு தனி அறைக்கு அழைத்துச் செல்லப்படுவதையும் பார்த்து, சிக்கல் ஏதாவது வந்துவிடுமோ என்று பயந்து போய் இருப்புக் கொள்ளாமல் அந்த தரிப்பிட மண்டபத்தில் தவித்துக் கொண்டிருந்த உமாமகேஸ்வரனுக்கு ராபின் உள்ளே வருவதைக் கண்ட பின்புதான் நிம்மதி வந்தது. தன்னை நோக்கி வந்த அவனை கண் ஜாடையால் என்னிடம் வரவேண்டாம் என்று காட்டினார்.

இரவு 8.40ற்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தைவிட்டு விமானம் புறப்படும் வரை அவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசவே இல்லை. விமானத்துக்குள் வைத்துத்தான் ராபின் நடந்த விடயத்தை உமாமகேஸ்வரனிடம் சொன்னான்.

அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உனக்கு நான் எத்தினைதரம் சொன்னனான் முஸ்லிம்பகுதிக்குப் போ, அங்கேயுள்ள பெடியளோட பழகு என்று. உன்னைப் பார்க்க முஸ்லிம் மாதிரியா இருக்குது என்று கடிந்து கொண்டார்.
அதற்கு நான் என்ன பெரியய்யா (அவ்வாறுதான் உமாவை இயக்கதிலுள்ளவர்கள் அழைப்பது வழக்கம்) செய்யிறது? மூண்டு கிழமைக்குள்ள எப்படி அது முடியும் என்றான்?
நான் எத்தினை கிழமைக்குள்ள பழகினனான் என்னை அவங்கள் கண்டு பிடிக்கேல்லை உங்கட முழியும், மூஞ்சையும் சரியில்லை எனக்கு பாதுகாப்புக்கென்று உங்களை கூட்டிக்கொண்டு வந்தால் உங்களால்தான் எனக்கு பிரச்சினை என்று உமா தொடர்ந்து சீறிவிழ ராபின் எதுவும் பேசவில்லை.

நள்ளிரவு விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது திடீரென்று அதன் முன்பக்கச் சில்லு கிழே இறங்க மறுத்துவிட்டது. விமானி மீண்டும் விமானத்தை மேலே எழுப்பிப் பறந்து அதிலுள்ள எரிபொருள் கணிசமான அளவில் தீர்க்க முயற்சிசெய்தார். விமானத்தில் உள்ளவர்கள் என்ன நடக்குமோ என்று பயந்து போயிருந்தனர்.

உமாமகேஸ்வரன் சகுணங்களை நம்புவதில்லை. ஆனாலும் இதென்ன, புறப்பட்ட நேரத்திலிருந்து எல்லாம் தடையாக இருக்கின்றது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
இவர் விமானத்திற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தைவிட தான் ஈடுபடப்போகின்ற காரியம் தன்னைப் பெரிய சிக்கலில் மாட்டிவிடுமோ என்று பயப்பட்டார்

கருத்துகள் இல்லை: