ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

காந்திதேசத்தின் மறுபக்கம் 24

24

புளொட்டினது தள (தமிழீழம்) அமைப்புக்கும் பின்தள அமைப்புக்கும் இடையில் சுழிபுரம் படுகொலைகள், ஒரத்த நாடு படுகொலைகள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக 1985இல் யாழ்ப்பாணத்தில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது.

இது புளொட்டினது முதலாவது தள மாநாடு என்று அழைக்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் உமாமகேஸ்வரனது தவறுகள் புளொட்டினது தவறுகள் எல்லாம் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராயப்பட்டு விமர்சிக்கப்பட்டன. இந்த மாநாட்டிற்கு சென்னையில் தங்கியிருந்த உமாமகேஸ்வரனது சார்பில் அவரது பிரதிநிதிகளாக சென்று கலந்து கொண்ட வாசுதேவா, கண்ணன் (கேதீஸ்வரன்) ஆகியோர் கூட அங்கே கிளம்பியிருந்த எதிர்ப்புக்களுக்கும், வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் முகங்கொடுக்க முடியாமல் தங்களைக் காத்துக் கொள்ளும் நோக்கில் உண்மைகளை ஒத்துக்கொண்டு உமாமகேஸ்வரனுக்கு எதிராகவும், புளொட்டினது பின் தள செயற்பாடுகளுக்கெதிராகவும் விமர்சனத்தை முன்வைத்தனர். இத்தனைக்கும் அவர்கள் இருவரும் அக்கால கட்டத்தில் புளொட்டினது பின்தள நிர்வாகத்தில் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்தவர்கள். (வாசுதேவா, அரசியல் பிரச்சார செயலர், கண்ணன் படைத்துறை செயலர்).

உமாமகேஸ்வரன் இந்த மாநாட்டின் தீர்மானங்களையோ அல்லது இந்த மாநாட்டில் வைக்கப்பட்ட விமர்சனங்களையோ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் இயக்கத்தை உடைக்க நினைக்கும் குளப்பவாதிகளின் பொறுப்பற்ற செயல் என்று அவர் அப்போது அதற்கு விளக்கம் சொல்லியிருந்தார். ஆனால் அவரது இந்த உதாசீனப் போக்கு தான் விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்ள அவருக்கிருந்த வழியை அடைத்தது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து அதே தவறுகளைச் செய்யவும் அமைப்பைத் தொடர்ந்து வழக்கமான தவறுகள் நிறைந்த ஒரு வழிப்பாதையிலே வழிநடத்திச் செல்லவும் வழிவகுத்தது.

குறிப்பாக எண்னாயிரத்துக்கு அதிகமான இளைஞர்களை (மகளிர் பிரிவும் அடக்கம்) பின்தளப் பயிற்சி என்ற பெயரில் தகுந்த வேலைத் திட்டம் எதுவும் இன்றி தமிழக முகாம்களில் இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைத்திருந்த செயல் அவரது தலைமைத்துவத்தின் வழிநடத்தலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

புலிகளினது கெரில்லா யுத்த தந்திரப் பாதையை அடித்து விட்டு ஓடும் போர்முறை என விமர்சித்துவிட்டு பரந்துபட்ட மக்கள் யுத்தப் பாதையே தன் வழி என்று சொன்ன உமாமகேஸ்வரன் மக்கள் யுத்தப் பாதைக்கு வேலை செய்த தள அமைப்புக்களின் விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் நிராகரித்ததன் மூலம் கெரில்லா போர் முறையும் அல்லாமல் மக்கள் யுத்தப் பாதையும் அல்லாமல் எதிர்காலம் தொடர்பான ஒரு சூன்ய நிலைக்கு அமைப்பை தள்ளியிருந்தார்.

இந்த சூன்ய நிலை என்பது நாட்டின் விடுதலைக்காக போராடுவதற்கென்று புறப்பட்டு வந்த இளைஞர்களை தங்களுடைய விடுதலைக்கு போராடும் நிலைக்குத் தள்ளியது.

1986ன் நடுப்பகுதியில் உமாமகேஸ்வரனின் தலைமைத்துவத்திற்கெதிரான அதிருப்தி புளொட்டின் தமிழக முகாம்களில் பகிரங்கமாக வெடித்து பல முகாம்கள் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றன. பிரச்சினைக்குரிய ஓரத்தநாடு பி முகாமின் சித்திரவதைக் கூடங்கள் தகர்த்தெறியப்பட்டன.


இத்தகைய குழப்ப நிலையை முன்கூட்டியே எதிர்பார்த்து காத்திருந்த றோ புளொட்டை உடைத்து பரந்தன் ராஜனை தலைமைத்துவத்துக்கு கொண்டு வர முனைந்தது. இது தன்னுடைய தலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தவிர்க்கமுடியாதபடி பின்தளத்தில் ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டிய நிலைக்கு உமாமகேஸ்வரனைத் தள்ளியது. இந்த மாநாடு தஞ்சை மாவட்டம் திருவாரூரில் நடந்தது. இந்தக் காலகட்டத்தில் புளொட் உமாமகேஸ்வரனின் ஆதரவாளர்கள் அணி, எதிர்ப்பாளர்கள் அணி என்று இரண்டாக பிரிந்தது. எதிர்பார்ப்பாளர்கள் அணியில் ஒன்று சேர்ந்து ENDLF என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போதிருந்த குழப்ப நிலையில் உமாமகேஸ்வரனைக் கொல்வதற்கான முயற்சியும் நடந்தது.


இத்தகையதொரு குழப்பமான சூழ்நிலையே வில்பத்து மாநாட்டில் தோற்றுவிக்க வசந்தன் குழு முயன்றது. முன்கூட்டியே திட்டமிட்டு உமாமகேஸ்வரன் மீதான அதிருப்தியை கீழ்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் பரப்பி மாநாட்டில் பாலபுத்தரின் கையை ஓங்குமாறு செய்யும் போது அதற்கு மாறாக உமாமகேஸ்வரன் ஏதாவது செய்ய முற்படுவார் என்றும் அப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக தன்னிச்சையாக அவர் நடவடிக்கை எடுக்க முற்படும் போது உருவாகும் அதிருப்தி நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அவரைக் கொன்றுவிட அவர்கள் திட்டமிட்டனர்.

ஆனால் உமாமகேஸ்வரனுக்கு இவர்களது சதித்திட்டம் ஓரளவு முன்கூட்டியே தெரிந்திருந்ததால் நன்கு திட்டமிட்டு பாதுகாப்பு அரசியல் வியூகங்களை வகுத்து அவர்களது முயற்சிகளை முறியடித்துவிட்டார். இது அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. எனவே அவர்கள் உமாமகேஸ்வரனது மாநாட்டு பாதுகாப்பு வியூகத்தை உடைப்பதற்காக முள்ளிக்குளத்திற்கு புலிகள் வந்த கதையை கிளப்பிவிட்டார்கள். புலிகளை எதிர்கொள்ள சங்கிலி தலைமையில் தனக்கு கவசமாக இருக்கும் பாதுகாப்புக் குழுவில் முக்கியமானவர்களையே முள்ளிக்குளத்திற்கு அவர் அனுப்புவார் என அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் உமாமகேஸ்வரனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் இது வசந்தன் குழுவின் புரளியாக இருக்கும் என்றும் சந்தேகம் வந்தது. உடனே மாணிக்கதாசன் தலைமையில் ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து வசந்தனையும் சேர்த்து முள்ளிக்குளத்திற்கு அனுப்பிவிட்டார்.

முhணிக்கதாசனது பாலியல் விவகாரங்கள் தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததால் தன்னுடைய தவறுகளிலிருந்து தப்பிக் கொள்ள மாணிக்கதாசன் கிளப்பிவிட்ட வதந்தி இது என்றே கீழ் மட்ட உறுப்பினர்கள் கூறிக் கொண்டார்கள்.

வசந்தன் எதிர்பாhத்தபடி எதுவும் நடக்கவில்லை. முள்ளிக்குளம் சென்ற (புலி எதிர்ப்புக் குழு) அவர்கள் அங்கு புலிகள் இல்லை என்று சொல்லிக் கொண்டு திரும்பி வந்தனர்.

மாநாட்டு பிரதிநிதிகளில் இந்தச் செய்திபற்றியும், இதைக் கொண்டுவந்தவர்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்கள். அப்போது உமாமகேஸ்வரன் குறுக்கிட்டு அதுபற்றி விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாட்டை நீண்ட நேரம் நடத்த முடியாதென்றும் விரைவில் தீர்மானங்களை நிறைவேற்றி மாநாட்டை முடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதைத் தொடர்ந்து மாணிக்கதாசன் விவகாரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு அவரை இயக்கத்தின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கி ஒரு சாதாரண உறுப்பினர் போல அவர் முகாமில் இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடனே மாணிக்கதாசன் அனைத்து முகாம்களின் பொறுப்பாளர் என்ற நிலையில் இருந்த தான் சாதாரண உறுப்பினராக முகாமில் இருப்பது தனது மனநிலையைப் பாதிக்கும் என்றும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் தான் முகாமில் தொடர்ந்து இருந்தால் தான் செய்யும் எல்லாக் காரியங்களும் குற்றக்கண் கொண்டே பார்க்கப்படும் என்றும் அதனால் தான் ஒரு சாதாரண உறுப்பினராக கொழும்பில் சென்று தங்கியிருக்க அனுமதி தர வேண்டும் என்று கேட்டர். இதற்கு மாநாட்டு பொதுக்குழு ஆட்சேபம் தெரிவித்தது. அவர் முகாமிலேயே இருக்க வேண்டும் என்று பெரும்பாலனவர்கள் கூச்சல் போட்டனர்.

இதனால் எரிச்சலடைந்த உமாமகேஸ்வரன் இது கூச்சல் போடும் நேரமில்லை புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதும் அந்த நிர்வாகம் கூடி இந்த விவகாரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் சொன்னார். அதன்பின் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக அவர் முன்வைத்த திட்டப்படியே உயர் குழுவுக்கு (பொலிட் பீரோ) மூவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடந்தது. அதில் உமாமகேஸ்வரனும், பாலபுத்தரும், காண்டீபனும்(மன்னார்) தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தத் தெரிவு உமாமகேஸ்வரன் முன்வைத்த அமைப்பு வடிவத்திற்காக நடந்தாலும் பாலபுத்தர் அந்த அமைப்புக்கு தெரிவு செய்யப்பட்டது அவருக்கு அவ்வளவு திருப்தியைத் தரவில்லை. சங்கிலியை அழைத்து வசந்தனை கண்காணிக்கும்படியும் கொழும்புக்குப் போனதும் அவனை தண்டிப்பதற்கான தீர்மானத்தை பாலபுத்தர் மூலமாகவே நிறைவேற்றி அனுப்புவதாக சொல்லிவிட்டு ராபனையும் வேறு மூவரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

வில்பத்து காட்டு கடற்கரையில் இருந்து படகு மூலம் புத்தளம் கரையை அவர்கள் அடைந்த போது அங்கே ரோந்து வந்த கரையோர ரோந்து பொலிஸார் கடத்தல் கோஸ்டி என நினைத்து அவர்களை கைது செய்து சென்று புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சிறை வைத்தனர்.

உமாமகேஸ்வரனை பெரும் கடத்தல் புள்ளியாகவும் ராபினையும் மற்றவர்களையும் அவர்களது அடியாட்களாகவும் நினைத்து அவர்கள் விசாரணை நடத்தினர்

கருத்துகள் இல்லை: