காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என்ற முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், கூட்டணியை முறிக்கும் முடிவை இப்போது எடுப்பது நல்லதல்ல என்ற நிலையில் மத்திய அமைச்சர் அழகி்ரி உள்ளதாகத் தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை காங்கிரஸ் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், குறி வைத்துத் தாக்கி வருவதாகவும் திமுக கருதுகிறது. இதையடுத்து கூட்டணியை மறுபரிசீலனை செய்ய இன்று மாலை உயர் மட்டக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டத்தையொட்டி இன்று காலை முதல் மூத்த தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், இனியும் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கக் கூடாது என்று கருணாநிதி கூறியதாகவும் அதை அழகிரி உள்ளிட்டோர் எதிர்த்து வருவதாகவும் தெரிகிறது.
இப்போதைய நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறுவது நமக்கு மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று அழகிரி தரப்பு கூறுவதாகத் தெரிகிறது. அழகிரியின் கருத்தை மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், பழனிமாணிக்கம் உள்ளிட்டோரும் வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது.
இதனால் கூட்டணியை முறிக்காமல் மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறலாம் என்று சில தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து கனிமொழியிடமும் கருணாநிதி ஆலோசனை கேட்டுள்ளார். நேற்று டெல்லி திகார் சிறைக்குச் சென்ற திமுக மூத்த தலைவரான துரைமுருகன் இது குறித்து கனிமொழியுடன் பேசியுள்ளார்.
ஆனால், தன்னை மையமாக வைத்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும், கட்சியின் எதிர்காலம்-நலனுக்கு எது சரியான முடிவாக இருக்குமோ அந்த முடிவை எடுக்குமாறு துரைமுருகனிடம் கனிமொழி கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது, வெளியிலிருந்து ஆதரிப்பது என்ற முடிவையே திமுக எடுக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரசுடன் கூட்டணியை திமுக முறிக்காது என்றே தெரிகிறது.
திமுக-காங்கிரஸ் இடையே 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக