வியாழன், 28 ஏப்ரல், 2011

ஐநா செயலர் விசாரணைக்குழு அமைக்க முடியும்'

ஐநா செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐநா செயலருக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும் கூறிய அவர அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்புச் சபையின் அனுமதி தேவை என்று கூறியுள்ள ருத்திரகுமாரன்ஆனால் அங்கு அது குறித்து புலனாய்வு செய்வதற்கு சட்டவாதிகளுக்கு பரிந்துரைப்பதை ஐநா செயலர் தானே செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக நாடு கடந்த அரசாங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐநா செயலாளரின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையானது இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடந்திருக்கீறது என்பதை பல வகைகளிலும் உணர்த்துவதாகக் கூறிய அவர் அது குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட்டாலே மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.


எல்லாம் வெல்லும்




பிரிகேடியர் துர்க்கா, பூமியில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றாவது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்கமாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S 97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்தார். முந்தைய நாள் போரில் மிஞ்சிய புகை மணம் காற்றிலே நிறைந்து கிடந்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவர் முள்ளிவாய்க்காலில் இருந்ததை நினைத்துப் பார்த்தார். இத்தனை அழிவு இவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிட்டது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.
முள்ளிவாய்க்காலில் காலையில் எழும்பியதும் துர்க்காவின் கண்ணில் படுவது அகிலா என்ற சிறுமிதான். வழக்கம்போல் அரை மணி நேரம் யோகாசனம் செய்த பின்னர், மேஜர் சோதியாவின் படத்துக்கு மெழுகுத்திரி கொளுத்தி வணங்குவார். ஒரு சுற்று நடந்து கூடாரங்களைப் பார்வையிடுவார். சிலர் இன்னமும் தூக்கத்தில் இருப்பார்கள். சிலர் எழுந்து தேநீர் தயாரிப்பார்கள். அகிலாவுக்குக் குண்டு விழுந்து ஒரு கை போய்விட்டது. அதிலே கட்டுப் போட்டு இருந்தார்கள். அவள் ஒருவிதக் கவலையும் இல்லாமல், குனிந்து புற்களுக்கு இடையில் ஏதோ ஒரு பூச்சியைத் துரத்திக்கொண்டு இருந்தாள். துர்க்காவைக் கண்டதும் விறைப்பாக நின்று, 'துர்க்காக்கா' என்று மகிழ்ச்சி பொங்கக் கத்தி, மிஞ்சி இருந்த இடது கையால் ஒரு சல்யூட் அடித்தாள். 'இங்கே நிற்கக் கூடாது. ஓடு ஓடு' என்றார். 'எல்லாம் வெல்லும், அக்கா' என்றாள் உற்சாகமாக. 'எல்லாம் வெல்லும்' என்று துர்க்காவும் ஒரு சல்யூட் வைத்தார்.
அகிலா, நித்தியா, அபிராமி, சுகன்யா, கன்னிகா, குழலி எல்லோரும் காயம்பட்டவர்கள். கை இல்லாமலும், கால் இல்லாமலும், கண் போயும் கட்டுக்களோடு வாழப் பழகிய சிறுமியர். அவர்கள் போர் முனையில் தங்கக் கூடாது. மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை அங்கே இருக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. குண்டு வீச்சில் பெற்றோரை இழந்தவர்கள். உறவு என்று சொல்ல ஒருவருமே இல்லை அவர்களுக்கு. நித்தியாவுக்கு இரண்டு கண்களிலும் கட்டுப் போட்டு இருந்தது. குண்டு வீச்சும், எறிகணையும், துப்பாக்கிச் சூடும் ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்து நடந்து அப்போதுதான் ஓய்வுக்கு வந்திருந்தது. தினம் இரண்டு மணி நேரம் ஜெனரேட்டர் போடப்பட்டு, அந்த நேரம் சனங்கள் அத்தியாவசியமான காரியங்களைச் செய்யப் பழகிக் கொண்டார்கள்.
சில வேளைகளில் துர்க்கா நினைப்பது உண்டு, குண்டுகள் விழும்போது நேராகப் பதுங்கு குழிகள் மேல் விழுந்தால் நல்லாஇருக்கும் என்று. ஒரு பிரச்னையும் இன்றி இறந்துபோகலாம். அந்தப் பதுங்கு குழியைச் சிறுமியர்தான் நிறைத்திருந்தனர். இரண்டு கைகள் போன மேனகாவும் அங்கேதான் இருந்தாள். ஒரு முறை கிபீர் இரைந்துகொண்டு தாழப் பறந்து வந்தது. மூன்று வயதுக் குழந்தைகூட அது கிபீர் விமானம் என்று சத்தத்தை வைத்தே சொல்லிவிடும். அதனுடைய வேகம் ஒலியின் வேகத்தைப்போல இரண்டு மடங்கு. விமானம் போன பின்னரே அதன் ஒலி வந்து சேரும். விமானத்தின் பேரிரைச்சலில் கத்திப் பேசினாலும், கேட்காது. சிறுமிகள் பதுங்கு குழிகளுக்குள் நீச்சல் குளத்துக்குள் குதிப்பதுபோலப் பாய்ந்துவிட்டார்கள். பக்கத்தில் குண்டு விழுந்து மண் எல்லாம் சரிந்து மூடிவிட்டது. ஆழமான குழி அது. நாலு பேர் அவசர அவசரமாகக் கிண்டியதில் உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. அப்படியும் சுவர்ணலதா மூச்சுத் திணறி இறந்துவிட்டாள். எப்பவும் திருநீறு பூசி, பொட்டுவைத்து, இரட்டைப் பின்னலுடன் சிரித்தபடி இருக்கும் சிறுமி அவள். காலையில் எழுந்தவுடனேயே சீப்பைத் தூக்கிக்கொண்டு, 'அக்கா... அக்கா' என்று யாராவது பெரிய பெண்ணைத் தேடித் திரிவாள், தலையை இழுத்துவிடச் சொல்லி.
தினம் மின்சாரம் வேலை செய்யும் இரண்டு மணி நேரத்தில் முக்கியமான செய்திகளை மக்களுக்காக ஒலிபரப்பினார்கள். வெளிநாடுகளுக்குச் செய்திகளும், தகவல்களும், படங்களும் அனுப்பப்பட்டன. பதுங்கு குழியில் காயம்பட்டு வேதனையோடு முனகிக்கொண்டு இருந்த குழந்தைகள், விஜய் நடித்து வெளிவந்த 'சிவகாசி' படத்தை டி.வி-யில் பார்த்தார்கள். பசியையும் வேதனையையும் மறந்து, அவர்கள் படத்தில் ஆழ்ந்துபோய் இருந்ததைப் பார்த்தபோது, துர்க்காவுக்கு மனதைப் பிசைந்தது. எந்தத் தாய்மார் பெற்ற பிள்ளைகளோ... அவர்களுக்கே தாயின் முகம் மறந்துவிட்டது. அடுத்த நேர உணவு என்னவென்று தெரியாது. அது எங்கே இருந்து கிடைக்கும் என்பதும் தெரியாது. குண்டு எங்கே விழும், அப்போது யார் யார் மிஞ்சுவார்கள் என்பதும் தெரியாது. இரண்டு கைகளும் போய் மெலிந்து, இழுத்து இழுத்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் கன்னிகா சொல்கிறாள், 'அக்கா, தள்ளி நில்லுங்கோ, படத்தை மறைக்காமல்!'
துர்க்கா வானத்தை நிமிர்ந்து பார்த்தார். சூரியன் அன்றைய நாளைத் தயக்கத்துடன் துவங்கினான். மரங்கள் புகைமூட்டமாகத் தெரிந்தன. காலநிலை, பகல் மப்பாகவும், பின்நேரம் மழையாகவும் இருக்கும் என்று அவருக்குப் பட்டது. முழங்காலை மடித்து சப்பாத்துக் கயிற்றை இழுத்துக் கட்டினார். இடைப்பட்டியை மூன்றாவது ஓட்டை மட்டும் இறுக்கிய பின்னர் தொப்பியைத் தலை மேல் அணிந்தார். கைத் துப்பாக்கியை உறையினுள் செருகினார். 'ரெடியாக இரு' என்று சொல்வதுபோல, செக்கண்டுக்கு 700 மீட்டர் வேகத்தில் சுடக்கூடிய ஷி 97 யப்பான் துப்பாக்கியை ஆதரவாகத் தொட்டுத் தன் இருப்பை உணர்த்தினார்.
குறிசுட்டுத் திறனில் அவர் பல முறை பரிசு பெற்றவர். தீச்சுவாலை நடவடிக்கையின்போது வயிற்றிலே குண்டுபட்ட பிறகும் அந்தத் துப்பாக்கி அவரைக் கைவிடவில்லை. அந்த நிலையிலும் 1,500 மீட்டர் தூரத்தில் அவருடைய துப்பாக்கி பல தடவை குறி தப்பாமல் சுட்டது. இரண்டு வார காலமாக அரிசிக் கஞ்சியை மாத்திரம் சாப்பிட்டு வந்ததில், அவர் உடல் மெலிந்து போய் இருந்தது. ஆனால், வலிமை குன்றவில்லை. அண்ணாந்து பார்த்தபோது, ஒரு பறவையைக்கூடக் காண முடியவில்லை. ஒரு பறவையின் சத்தமாவது கேட்கிறதா என்று காது கூர்ந்து கேட்டார். போர் தொடங்குவதற்கு முன்னால் அந்த நேரம் எத்தனை பறவைகளின் ஒலி வானத்தை நிரப்பியிருக்கும்! எல்லாமே இடம் பெயர்ந்துவிட்டன என எண்ணினார். முதலில் இடம்பெயர்வது பறவைகள், பின்னர் மிருகங்கள், கடைசியில்தான் மனிதர்கள்.
அவரிடம் இருந்த நைக்கான் கேமராவினால் துர்க்கா நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளைப் படம் பிடித்திருந்தார். தன்னுடைய மடிக் கணினியில் படங்களைச் சேமித்து, அவற்றைப் பற்றிய விவரமான குறிப்புகளையும் எழுதியிருந்தார். பறவைகளின் நிறங்கள், ஒலிகள், பழக்கவழக்கங்கள், உணவு என அவர் அவதானித்த அத்தனை தகவல்களையும் எழுதிப் பாதுகாத்தார். இந்தத் தகவல்களையும், படங்களையும், ஒலிகளையும், ஒரு நாளைக்கு காணொளித் தகடாக வெளியிட வேண்டும் என்பது அவருடைய திட்டம். அவ்வப்போது கம்ப்யூட்டரில் பதிந்துவைத்தவற்றை வெளிநாட்டுக்குப் பாதுகாப்புக்காக அனுப்பவும் அவர் தவறவில்லை.
அருள்மதி போராளியாக விருப்பப்பட்டு, ஒருநாள் தானாக வந்து அவர்களுடன் சேர்ந்தாள். அவளைப் பார்த்தபோது துர்க்காவுக்குச் சிரிப்பாக வந்தது. 20 வயது இருக்கும். உருண்டையாக இருந்தாள். உடம்பில் எந்தப் பாகத்தை எவ்வளவு ஆழமாகக் கிள்ளினாலும், அவள் எலும்பைத் தொட முடியாது. மூன்று மாதக் கடும் பயிற்சியில் தசைகள் கரைந்து உடம்பு முறுகிவிட்டது. அவளைப் போர்க்களத்துக்கு துர்க்கா அனுப்பியது இல்லை. அருள்மதியின் அம்மா ஆங்கில ஆசிரியை. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அருள்மதிக்கு நல்ல புலமை. கணினியில் பயிற்சி இருந்ததால், அவளைத் தகவல் தொழில்நுட்பத்தில் துர்க்கா பயன்படுத்தினார். கணினி மூடியில் தன் தாயிடம் இருந்து வந்த கடிதத்தின் ஒரு வசனத்தை வெட்டி ஒட்டி இருப்பாள் அருள்மதி. தாய்க்கு அவள் ஒரே ஆசை மகள். 'Please come home. There is only one you!’' கணினியைத் திறக்கும்போது எல்லாம் தாயின் ஞாபகம் வரும்.
தாயைப் பிரிந்த கடைசி நாள், தாயின் வயிற்றில் குறுக்காகத் தலைவைத்துப் படுத்து இருந்ததை நினைப்பாள். தாய் அவளைக் கொஞ்சுவது இல்லை. கழுத்தை ஆழமாக முகர்ந்து பார்ப்பதோடு சரி. போர்ச் செய்திகளைத் தினமும் கணினி மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புகையில், தாயின் நினைவு வந்து விடும். அத்துடன், வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்ற விவரங்களை அன்றாடம் திரட்டித் தருவது அவள் பொறுப்பு. ஒரு வாரத்திலேயே காட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டாள். நடக்கும்போது ஒரு சருகு அசையாது, சுள்ளி முறியாது. துர்க்கா ஓய்வாக இருக்கும் சமயங்களில், முக்கியமான மொழிபெயர்ப்புகளை அருள்மதி எடுத்து வருவது உண்டு. பின்னர், அதுபற்றிப் பேசுவார்கள். முடிந்ததும் பாம்பு சுருள் அவிழ்ப்பதுபோல, ஓசையின்றி எழுந்து அருள்மதி செல்வாள்.
சிறு வயதிலேயே துர்க்காவுக்கு, மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள் என்று இயற்கையில் ஓர் ஈர்ப்பு. தாவரவியல் பாடங்களை முதலிலேயே படித்து, ஆசிரியையிடம் வகுப்பில் கேள்விகளாகக் கேட்டபடி இருப்பாள். பறவைகளில், அவளுக்கு ஆர்வம் அப்போதே தொடங்கிவிட்டது. மருத்துவம் படிப்பது என்று தீர்மானித்தாள். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது, பஸ்ஸில் இருந்து இறங்கியவள் வீட்டுக்கு வரவில்லை. எல்லோரும் தேடினார்கள். அடுத்த நாள் என்ன பாடம் என்று ஆசிரியையிடம் கேட்டு அதைப் படிப்பதற்கான புத்தகங்களுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டவள், என்ன ஆனாள் என்பது தெரியவில்லை. பிறகுதான் செய்தி பரவியது. அவள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள் என்று! யாரோ அவளிடம் கேட்டபோது அவள் சொன்ன பதில், 'எல்லோரும் பந்தியில் உட்கார்ந்தால், பரிமாறுவதற்கு யாராவது வேண்டாமா?'
கிளிநொச்சி விழுந்த அன்று, துர்க்கா, அருள்மதிக்குச் சொன்னது நினைவுக்கு வந்தது. 'நீ ஆயுதத்தைத் தொடக் கூடாது. வரலாற்றைச் சொல்வதற்கு எங்களுக்கு ஒருவர் வேண்டும்!' அருள்மதி, 'இதற்குத்தானா இவ்வளவு பயிற்சி எடுத்தேன்?' என்றாள். ஒரு பாறையில் இருந்து இன்னோர் ஆபத்தான பாறையின் மேல் பாய்வதற்கு முன்னர் ஆயத்தம் செய்வதுபோல துர்க்கா தயங்கினார். 'நான் போரில் இறந்தால், என் உடல் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது. உயிருடன் என்னைப் பிடித்தால், என்னை எப்படிப் பாதுகாப்பது என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய இறந்த உடல் அவர்கள் கையில் அகப்பட்டால், அதற்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியும். என் உடலின் மேல் அவர்கள் கைகள் ஊர்வதை, என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. நீ எப்படியாவது என்னைப் புதைத்துவிடு. அல்லது எரித்துவிடு. எது அந்த நேரத்துக்குச் சுலபமோ... அதைச் செய்!'
போரிலே பங்கு பெறக்கூடாது என்று துர்க்கா சொன்னது அருள்மதிக்குப் பெரிய ஏமாற்றதைத் தந்தது. 'சரி, ஆனந்தபுரம் போர் திட்டத்தையாவது சொல்லுங்கள். விவரம் எனக்குத் தெரிய வேண்டாமா?' என்றாள் அருள்மதி. 'உரிய நேரம் வரும்போது, நீயாகவே தெரிந்துகொள்வாய். அவசரப்படாதே'. 'கிழக்குப் பக்கம் என்று கூறுகிறீர்கள். எவ்வளவு தூரம் கிழக்குப் பக்கமாக முன்னேற வேண்டும்?' என்று கேட்டாள் அருள்மதி. 'கிழக்குப் பக்கம் முடியும் மட்டும். அல்லது அவர்கள் எங்களை நிறுத்தும் மட்டும்!'
அந்த நேரம் பார்த்து கை ரேடியோ சடசடவென ஒலித்தது. சங்கேத வார்த்தைகள். அருள்மதிக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்கா கோபமானது மட்டும் தெரிந்தது. பின்பக்கத்தைக் காட்டிக்கொண்டு துர்க்கா விடைபெறாமல் நடந்தார். அதுவே கடைசிச் சந்திப்பு!
ஜெயதீசனை, துர்க்காவால் மறக்க முடியாது. அவரைப் பார்த்தவுடனேயே சிரிப்பு வரும். காலையில் முதல் வேலையாக ஒரு கையால் கீழே நழுவும் கால்சட்டையைப் பிடித்தபடி, மறு கையில் பனம் பழங்களை எங்கேயோ போய் பொறுக்கிக்கொண்டு வருவார். அவை சிறுமிகளுக்கு. ஜெயதீசனுடன் யாருமே கோபிக்க முடியாது. எங்கே எல்லாம் போகக் கூடாதோ, அங்கே எல்லாம் போவார். அவருடைய நாடு ஆஸ்திரேலியா. தன்னுடைய நாட்டைவிட்டு வந்து, அநாதைக் குழந்தைகளுக்காக அவர்களுடன் வாழ்ந்தார். எல்லோரும் கழித்துவிட்ட ஒரு பழைய காரில் மாற்றங்கள் செய்து, அதை ஆமணக்கு விதை எண்ணெயில் ஓடுகிற மாதிரி தயாரித்து இருந்தார். அதற்காகவே இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆமணக்கு செடிகளைப் பயிரிட்டு வளர்த்தார். அவர் பெரிய விஞ்ஞானி, சேவையாளர், பரோபகாரி, குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நேரம் ஒதுக்கி, ஆடல் பாடல் என்று அவர்களைச் சந்தோசப்படுத்தினார். கடந்த இரண்டு வாரங்களாக அவரைப்பற்றிய ஒரு தகவலும் இல்லை. குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு முள்ளிவாய்க்காலை விட்டு நகர்ந்தாரா என்பது தெரியவில்லை.
நாலு வருடங்களுக்கு முன்னர் தலைவருடைய 51-வது பிறந்த நாள் வந்தபோது, துர்க்கா ஆச்சர்யமான ஒரு பரிசு தந்தார். 16 வருடங்களாகக் காடுகளில் அலைந்து திரிந்து எடுத்த 100 விதமான பறவைகளின் படங்களை அச்சடித்து தட்டியில் ஒட்டி, அதன் கீழே பறவைகளின் பெயர்களை எழுதி, 'ஈழத்துப் பறவைகள்' என்று தலைப்பிட்டு தலைவரிடம் நேரே கொடுத்தார். அந்தத் தடவை தலைவர் துர்க்காவையும் விசேடப் பயிற்சியில் இருந்த சில பெண் போராளிகளையும், சந்திப்புக்கு அழைத்திருந்தார். பயிற்சியில் இருந்த ஓர் இளம் பெண், அவளுடைய பெயர் மாலதியோ என்னவோ, வெகுவான கூச்சத்துடன் அமர்ந்திருந்தாள். ஒரு பூனை வந்து, அவ்வளவு பேர் இருக்க, மாலதியின் மடியில் ஏறி உட்கார்ந்தது. மாலதி பயத்தில் நெளிந்துகொண்டு இருந்தாள். தலைவர் பார்த்துச் சிரித்துவிட்டு, 'புலி பூனைக்குப் பயப்பிடுவதா?' என்று சொன்னார். பின்னர், பூனையை வாங்கி கூட்டம் முடிவுக்கு வரும் வரை, தன் மடியில் வைத்துத் தடவியபடியே இருந்தார்.
துர்க்கா கொடுத்த பரிசைத் திறந்து பார்த்ததும் திடுக்கிட்டார். 'நன்றி... நன்றி. இத்தனை பறவைகளா? எனக்குத் தெரியவில்லையே?' என்று தலைவர் வியந்தார். ஒவ்வொரு பறவையின் பெயரையும் உரத்துச் சொன்னார். மைனா, வாலாட்டி, தையல்காரி, பிலாக்கொட்டை, சிட்டுக்குருவி, தகைவிலான், புளினி, வானம்பாடி, புறா, குயில், மரங்கொத்தி, கரிக்குருவி, குக்குறுப்பான், செண்பகம், நாகணவாய் என்று அவர் சொல்லிக்கொண்டே வர... எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். '100 பறவைகளை மாத்திரம்தான் நான் படம் பிடித்து இருக்கிறேன். ஆனால், 240 பறவை வகைகள் இருக்கின்றன' என்றார் துர்க்கா. தலைவர், 'இவை எல்லாம் எங்கள் பறவைகள். சுதந்திரமானவை. தடையின்றி அவை எங்கேயும் பறக்கலாம்' என்று பெருமையோடு சொன்னார். சிறிதேவி குறுக்கிட்டு ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி, 'இது என்ன பறவை? புதுசாக இருக்கிறதே' என்றாள். துர்க்கா பதில் சொல்வதற்குள், தலைவர் சிறிதேவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு 'இது தெரியாதா? 6 மணிக் குருவி, காலை 6 மணிக்குச் சத்தம் போடும்' என்றார். எல்லோர் கண்களும் தலைவர் பக்கம் திரும்பின. 'சிறிதேவி காலை 6 மணிக்கு எழும்பினாத்தானே தெரியும்!' என்று அவர் சொன்னதும், எல்லோரும் சிரித்து அந்த இடம் கலகலப்பானது. எத்தனையோ சந்திப்புகள். ஆனால், அந்தச் சம்பவத்தை மாத்திரம் துர்க்காவினால் மறக்க முடியவில்லை.
ரேடியோவில் அறிவிப்பாளராகச் செயல்பட்டவர் இறைவன். தினம் அவருக்குக் கிடைக்கும் இரண்டு மணி நேரத்தில், செய்தி வாசிப்பதோடு சுவையான தகவல்களையும் கூறி, அந்த ரேடியோ நேரத்தை உபயோகம் உள்ளதாக மாற்றிவிடுவார். அவருக்கு இஸ்ரேல் நாட்டு முன்னாள் போர்த் தளபதி மோசே தயான் மீது அளவற்ற பற்று. அவரைப்பற்றிய ஏதாவது கதை ஒன்றைச் சொன்ன பிற்பாடுதான், இறைவன் அன்றைய நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவார். மோசே தயான், ஓர் இளைஞனாக பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றியபோது, ஒரு கண்ணை இழந்தவர். ஒருநாள் விதிக்கப்பட்ட வேகத்துக்கு மேலாக கார் ஓட்டிக்கொண்டு போனபோது, போலீஸ் அவரைப் பிடித்துவிட்டது. அவர் சொன்ன பதில், 'எனக்கு ஒரு கண்தான் இருக்கிறது. நான் எதைப் பார்ப்பது ரோட்டையா அல்லது வேகம் காட்டும் கருவியையா?' போலீஸ் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது. இப்படி சின்னச் சின்ன தகவல்களைத் தருவார்.
சில போராளிகள் இறைவனைப் பரிகசிப்பார்கள். 'இஸ்ரேல் தளபதி பற்றி புகழ் பாடுகிறீர்கள். இஸ்ரேலின் கிபீர் விமானம்தான் இரண்டு மடங்கு ஒலி வேகத்தில் பறந்து குண்டுகளைப் போட்டு எங்கள் மக்களைக் கொல்கிறது. கிபீர் என்றால், இளம் சிங்கம் என்று பொருள். சிங்கக் கொடி ராணுவம் இளஞ் சிங்கங்களை எங்கள் மீது ஏவிவிடுகிறது. நீங்கள் அவரைப் போற்றுகிறீர்கள்!' அதற்கு இறைவன் சொல்வார், 'உங்கள் கேள்விக்குப் பதிலும் மோசே தயான் சொன்னதுதான். ஒரு ராட்சத கோலியாத்தை வெல்ல சிறு பையன் தாவீது போதும்!'
முள்ளிவாய்க்காலில் அன்று மறுபடியும் அகிலாவைப் பார்த்ததும் துர்க்கா திடுக்கிட்டார். அவள் சொல்வழி கேட்காதவள். எவ்வளவு சொல்லியும், அவள் கூடாரத்துக்குத் திரும்பிப் போகவில்லை.
'அக்கா, 6 மணிக் குருவியைப் பார்த்தேன்' என்றாள். 'பொய் சொல்லாதே. அது வலசை போற குருவி. இந்த மாதம் அது இங்கே இருக்க முடியாது!'
'இல்லை அக்கா. எனக்குத் தெரியும் வாருங்கோ' என்று கூட்டிப்போனாள். அவள் சொன்னது உண்மைதான். கட்டையான நீல வால் குருவி. மேலுக்கு பச்சை, கீழுக்கு சிவப்பு உடம்பு. வெள்ளைக் கழுத்து, சப்பாத்து லேஸ் துளைபோல சின்னக் கண்கள். அத்தனை அழகான குருவியை மரத்திலே கண்டதுதான். நிலத்திலே அவ்வளவு சமீபத்தில் துர்க்கா பார்த்தது இல்லை. அது இலைகளைத் தள்ளி புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டு இருந்தது.
'ஏன் அக்கா திகைச்சுப்போய் நிற்கிறீங்கள்?'
'பாவம் இது. தவறிப்போய்விட்டது. இதன் ஆங்கிலப் பெயர் Indian Pitta. ஒவ்வொரு வருடமும் இமயமலைக்குப் பறந்து, அங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பின்னர் பனிக் காலம் ஆரம்பிக்கும்போது, இங்கே வந்துவிடும். இந்த வருடம் எப்படியோ அது தனித்துவிட்டது.' 'கூட்டத்தோடு பறக்கவில்லையா? அப்ப என்ன நடக்கும்?'
'இந்த நிலத்தில் அப்படி ஒரு பற்று ஆக்கும். பார், எங்களைவிட்டுப் போக விருப்பம் இல்லை. ஓடிப் போய் என்னுடைய கேமராவை எடுத்து வாறியா?'- துர்க்கா பேசி முடிக்குமுன்னர், அகிலா எடுத்தாள் ஓட்டம். அவள் திரும்பி வந்தபோது குருவி பறந்துவிட்டது.
'எங்கே அக்கா குருவி?'
'இங்கேதான் எங்கேயோ... அது தனியா மாட்டிவிட்டது. இந்த வெயில் சூட்டில் அது நிச்சயம் செத்துப்போகும். ஐயோ பாவம்' என்றார். இரண்டு இமைகளும் சந்திக்கும் இடம் ஈரமாகியது. 'அது தப்பிவிடும் அக்கா. பயப்பிடாதையுங்கோ' என்றாள் அகிலா, எதோ பெரிய ஆள்போல.
ஒவ்வொருவராகத் தன் அணியில் இருந்தவர்களை, துர்க்கா இழந்துகொண்டு வந்தார். ஒரு கணினி செய்ய வேண்டியதை அகல்மதி செய்வாள். கழுத்து எலும்பு தெரியும் ஒல்லியான தேகம். அதிவேகமாக ஓடக்கூடியவள். சொற்களைக் கையினால் மறைத்துக்கொண்டு தான் பேசுவாள். அந்தக் காலத்து விதூஷகன் போல துர்க்காவுக்கு சிரிப்பு மூட்டுவதுதான் அவள் வேலை. அவள் சிரித்தால் போதும், விடிவதைப்போல அந்த இடத்தில் ஒளி உண்டாகும்.
திட்டத்தை துர்க்கா விளக்கியதும், போராளிகள் தங்கள் தங்கள் கடிகாரங்களைச் சரிபார்த்துக் கொண்டார்கள். ஒரு ரகசியப் பொறியை நோக்கி ராணுவக் கவச வாகனங்களைத் திருப்பிவிடுவதுதான் உத்தி. பீரங்கிக் குண்டுகள் வந்து விழும் திசையையும், அவற்றின் இரைச்சலையும், வேகத்தையும் வைத்து எவ்வளவு தூரத்தில் ராணுவம் நகருகிறது. எந்தத் திசை நோக்கிச் செல்கிறது, இலக்கை அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் போன்ற விவரங்களைக் கணிப்பதில் அகல்மதி தேர்ச்சி பெற்றவள். அன்று இரண்டு கவச வாகனங்களை அழித்து இருந்தார்கள். எந்த நேரமும் உற்சாகமாக இருப்பவள் அன்று என்னவோ மாதிரி இருந்தாள். 'அக்கா, வெற்றி கிட்டுமா?' என்றாள். தொண்டையில் நிறையச் சொற்கள் சேர்ந்துவிட்டதால், அது அடைத்துப்போய்க் கிடந்தது. துர்க்கா அவளை உற்றுப் பார்த்து அடிக்கடி தலைமைப் பீடம் சொல்லும் வாசகத்தைச் சொன்னார். 'வெற்றி முக்கியம் இல்லை. அவர்கள் தோல்விதான் முக்கியம்!' துர்க்கா வாய் திறந்து பேசி முடிந்ததும், கிபீர் விமானத்தில் இருந்து குண்டு வெளிச்சமாக வந்து விழுந்தது. ஒரு கணத்துக்கு முன்னர் அகல்மதி கையில் ஏ.கே 47 துப்பாக்கியுடனும், தூரக் கண்ணாடியுடனும் நின்றாள். அடுத்த கணம் பெரும் குழிதான்கிடந்தது. அவள் இருந்த சுவடு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. சூழ்ந்த புகை மூட்டத்தில் சதை எரியும் மணம் ஒன்றே துர்க்காவுக்கு மிஞ்சியது.
அடுத்த பெரிய இழப்பு, செவ்வானம். அவளும் மற்றவர்களைப்போல வெளிநாட்டுக்குப் போயிருந்தால், இன்றைக்கு ஒரு புகழ்பெற்ற மருத்துவராகி, நிறையப் பணம் சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பாள். எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் போக மறுத்து, போரிலே காயம்பட்டவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகத் தங்கிவிட்டாள். அவளுக்கு மிஞ்சிப்போனால், 27 வயதுதான் இருக்கும். கெக்கரிக்காய் போன்ற நேரான உடம்பு. ஒரு வளைவுகளும் இல்லை. காதிலே ஓட்டை உண்டு, தோடு கிடையாது. மூக்கிலே துளை உண்டு. மூக்குத்தி கிடையாது. விரலிலே நகம் உண்டு. பூச்சு பூச மாட்டாள். ஒரு நாளில் 18 மணித்தியாலத்துக்குக் குறையாமல் வேலை செய்தாள். நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பி அவளுக்கு ஒரு மடிக்கணினி அனுப்பி இருந்தான். ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல அதைத் தூக்கிக்கொண்டு, இரண்டு நாட்களாக அலைந்தாள். எப்படித் திறப்பது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை.
ஒருநாள் அருள்மதியிடம் இரவு 10 மணிக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள வந்தாள். எல்லா விசயங்களையும் ஒரே நாளில் கற்றுவிட வேண்டும் என்ற அவா. கம்ப்யூட்டரில் அவள் எழுதிய முதல் கடிதத்துக்கு இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. ஜெனரேட்டர் நேரம் முடிந்து விட்டபடியால், கடிதத்தை அடுத்த நாள் அனுப்பலாம் என்று மூடிவைத்தாள். அவள் அடித்த கடிதம் கம்ப்யூட்டரில் கிடந்தது. அதிகாலை ஆஸ்பத்திரிக்கு உடுத்திப் போனாள். போன சிறிது நேரத்திலேயே கொத்துக் குண்டு ஒன்று ஆஸ்பத்திரியின் மேலே விழுந்து 40 பேர் பலியானார்கள். அதில் செவ்வானமும் ஒருத்தி. ஒரு மரக்கொப்பு முறிந்ததுபோல நடுவிலே முறிந்துபோய்க் கிடந்தவளைப் பார்க்க முடியவில்லை. இறந்தவர்களில் 20 பேர் குண்டு விழாவிட்டாலும், இறந்துபோயிருப்பார்கள் என்று பேசிக் கொண்டார்கள். செவ்வானம் இறந்த செய்தியைத் தொலைபேசியில் நோர்வேயில் இருந்த அவளுடைய தம்பிக்கு அறிவித்தார்கள். இரண்டு நாள் கழித்து அவள் எழுதி கம்ப்யூட்டரில் சேமித்துவைத்த கடிதத்தை மின்னஞ்சலில் அவனுக்கு அனுப்பிவைத்தாள் அருள்மதி.
பிரிட்டிஷ் ராணுவத்தின் விசேடப் பிரிவில் பணியாற்றி அதி உயர் விருதுகளைப் பெற்றவர் ஆண்டி மக்நாப். அவருடைய இரண்டு புத்தகங்களை மொழிபெயர்ப்பில் தலைமைப் பீடம் படித்திருந்தது. ஒன்று, Bravo two Zero. அடுத்தது, Immidiate action. துர்க்காவும் இயன்ற மட்டும் அவற்றை இரவிரவாகப் படித்து முடித்து விடுவார். ஆண்டி மக்நாபில் பற்று அப்படித்தான் ஏற்பட்டது. அருள்மதி பகுதி பகுதியாக மொழிபெயர்த்தது, Col. James Mrazek என்ற அமெரிக்கர் எழுதிய The Art of Winning Wars என்ற புத்தகத்தைத்தான். அதன் 5-வது அதிகாரத்தை மொழிபெயர்க்கச் சொல்லி, அவசர கட்டளை ஒரு நடு இரவில் வந்தது. அருள்மதி இரவிரவாக மொழிபெயர்த்து, கையினால் எழுதி அதை கம்ப்யூட்டரில் அச்சடிக்கக்கூட நேரம் இன்றி அப்படியே சுரேஷ் மாஸ்ரரிடம் கொடுத்து அனுப்பினாள். அந்த மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்ட ஒரு வசனம் துர்க்காவினால் மறக்க முடியாது. 'போர்கள், ஆயுத பலத்தினால் அல்ல, புத்தியினால் வெல்லப்படுகின்றன!'
20 வருடப் போர் வாழ்க்கையில் துர்க்கா பல போராளிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் லெப். கேர்ணல் மொழியரசி போன்ற ஒரு போராளியைக் கண்டது கிடையாது. அபூர்வமானவர். அழகான தோற்றம்கொண்ட அவருக்கு ஒரு கால் கிடையாது. பதிலுக்கு கரடுமுரடான ஒரு மரக்கால் பொருத்தி இருந்தது. போர்க்களத்திலோ, தனிப்பட்ட வாழ்க்கையிலோ தான் எந்த விதத்திலும் குறைவுபட்டதாக அவர் உணர்ந்தது இல்லை. குளிக்கப் போனால், ஒரு மணித்தியாலம் மற்றவர்கள் அவருக்காக ஒதுக்குவது வழக்கமாகிவிட்டது. ஒட்டி வெட்டி மிச்சமாய் இருந்த கூந்தலை எண்ணெய்வைத்து ஊறவிட்டு, சீயக்காயுடன் செவ்வரத்தம் பூக்களையும் அரைத்துப் பூசி ஒரு பாட்டம் முழுகிவிட்டு, பின்னர் வாசனை சோப் போட்டு மீண்டும் ஒரு தடவை குளிப்பார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல முகத்தை ஒப்பனை செய்வார். 'சாம்பிராணிப் புகை வேண்டுமா, அக்கா' என்று யாராவது இளம் பெண் சீண்டினால், மரக்காலைக் காட்டுவார். மற்றவர்கள் ஞாபகப்படுத்தினால் ஒழிய, அவருக்கு தான் போராளி என்பது மறந்துபோகும். விடிந்து, அன்றைய நாள் தொடங்கிய பிறகு ஒரு தடவையாவது தன் அம்மாவின் றால் குழம்பைப்பற்றிப் பேசாமல் அவரால் இருக்க முடியாது.
ஒருநாள் துர்க்கா கேட்டார், 'மொழி, என்ன அலங்காரம் உச்சமாயிருக்கிறது. உம்முடைய எதிரிகளைத் துப்பாக்கியால் விழுத்தப் போகிறீரா அல்லது இமை வெட்டினால் சரிக்கப்போகிறீரா?'
'பாவம். என் அழகைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. என்னுடைய பிகே துப்பாக்கி 1,500 மீட்டர் தூரத்திலேயே அவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடும்.'
'அப்படியானால் இவ்வளவு செவ்வரத்தம் பூக்களை ஏன் வீணாக்குகிறீர்?'
'எனக்குத்தான். என் தலைக்காகத்தான் அவை பூக்கின்றன!'
போர் என்றதும் அங்கே ஏதோ றால் குழம்பு பரிமாறுகிறார்கள் என்ற நினைப்புதான். பாதி துள்ளுவார். மற்றவர்களைத் தள்ளிவிட்டு முன்னுக்கு நிற்பது மொழியரசிதான். போர் முடிவதற்கு முன்னர் இரவு தொடங்கிவிடக் கூடும் என்பதுபோலச் செயலாற்றுவார். துப்பாக்கியைத் தூக்கிச் சுடும் அந்த நேரத்திலும் விரலால் துப்பலைத் தொட்டு புருவத்தை நேராக்க மறக்க மாட்டார். எதையாவது அவசரமாகச் செய்துவிட்டுத்தான் மூளையைப் பாவிப்பார்.
'மொழி, எதற்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறீர்?' என்று துர்க்கா கோபிப்பார்.
'எதுக்குப் பயப்பட வேணும்? கடவுளுக்குத்தான் என்னைக் கூப்பிட வேண்டிய நேரம் தெரியும்!'
'அது சரி, நீர் ஏன் கடவுளுக்கு உதவி செய்கிறீர்?' என்று துர்க்கா கடிந்து கொள்வார்.
'எல்லாம் வெல்லும், அக்கா.'
'எல்லாம் வெல்லும்!'
லெப். கேர்ணல் மொழியரசி டக்டக்கென்று மரக்காலை நிலத்திலே உதைத்து நடந்து போவார். அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்டது.
ஆனந்தபுரம் போர் யுக்தியை இரண்டு வாரகாலமாகத் திட்டமிட்டார்கள். 1,000 போராளிகள் பங்கு பெற்ற இந்த நகர்வில், இடப்புற அணியின் பொறுப்பை பிரிகேடியர் துர்க்கா ஏற்றிருந்தார். அவருக்குத் துணையாக வாகை ஒன்று, வாகை இரண்டு போரணிகள் இருந்தன. இணைப் படையாக அவருக்குப் பின்னால் பிரிகேடியர் விதூஷாவின் படை நின்றது. வலப் பக்கத்து நுனியில் பிரிகேடியர் மணிவண்ணனும், பிரிகேடியர் தீபனும் இருந்தனர். நடுவில் பொறுப்பாக நின்றது கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும். போர் தொடங்கிய சிறிது நேரத்தில், கேர்ணல் அமுதாவும் கேர்ணல் தமிழ்ச் செல்வியும் உள்வாங்கும் அதே சமயம், இடம் வல அணிகள் மடிந்து எதிரியை வளைத்துப் பிடித்து விட வேண்டும். 2,200 வருடங்களுக்கு முன்னர் ஹனிபால் பயன்படுத்திய அதே யுத்தி. போர்த் தளவாடங்கள், 50 கலிபர்கள், உந்துகணை செலுத்திகள், ஆர்ட்டிலறிகள், மோர்ட்டார்கள், யந்திரத் துப்பாக்கிகள் எனச் சகலதும் தயார் நிலையில் இருந்தன.
துர்க்கா இடப்புறத்து முனையில் முன்னேறினார். அவருடைய துணைப்படைகள் அவரை ஒட்டியபடி நகர்ந்து பாரியத் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவுக்காகக் காத்து நின்றபோது, ராணுவத்தின் தாக்குதல்கள் தொடங்கின. ஆகாயத்தில் இருந்து குண்டுகள் விழுந்து அணியைச் சிதறடிக்க முயன்றன. அவற்றை எல்லாம் சட்டை செய்யாமல், துர்க்கா முன்னேறிக்கொண்டு இருந்தார். திடீரென்று சடசடவென இடப்புறம் இருந்து குண்டுகள் பாய்ந்து வந்தபோது, துர்க்கா துணுக்குற்றார். அவர் அதை எதிர்பார்க்கவில்லை. லெப். கேர்ணல் மோகனா, இடது புறத்தில் நின்றார். உடம்பின் ஓர் அங்கம் போலாகிவிட்ட மோகனாவின் துப்பாக்கி இலக்கில் அசையாமல் நேராக நின்றது. துர்க்கா திரும்பிப் பார்த்தபோது, மோகனாவின் பாதி தலையைக் காணவில்லை. இலங்கை ராணுவமும் பெரிய போர் திட்டத்தை வகுத்திருந்தது. இரவிரவாக நடந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு அது பெட்டியடித்திருந்தது. போராளிகளின் படை அதற்குள் சிறைபட்டிருப்பது அப்போது தான் துர்க்காவுக்குத் தெரிய வந்தது.
அருள்மதி 10 நாட்களுக்கு முன்னர் மொழிபெயர்த்து கையினால் எழுதி அனுப்பிய அமெரிக்க கேர்ணல் ரசேக்கின் ஐந்தாவது அதிகாரத்தை தலைமைப் பீடத்திடம் சுரேஷ் மாஸ்ரர் கொடுத்தாரா என்பது தெரியவில்லை. அது முக்கியமான மொழிபெயர்ப்பு. மோகனாவின் சிவப்பு ரத்தம் ஊர்ந்து வந்து துர்க்காவின் சப்பாத்தை நனைத்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தார். திசைகாட்டி பொருத்தப்பட்ட அந்தக் கஸியோ கைக்கடிகாரம், தலைமைப் பீடம் அவருக்குப் பரிசாகக் கொடுத்தது. இனியும் தாமதிக்க முடியாது. அவர்கள் தீர்மானித்த நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. அந்தத் திடல் 100 அடி உயரம்தான் இருக்கும். இரண்டே நிமிடங்களில் அதன் மீது ஏறிவிடலாம். 20 வருடப் பயிற்சி இந்தத் தருணத்துக்காகத்தான். ஒரேயரு கட்டளைதான் தேவை. எல்லோரும் பின்வாங்கி இன்னொரு சமருக்குத் தயார் செய்யலாம். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவை எதிரிகளுக்கு உண்டாக்கலாம்.
கை ரேடியோவில் அவ்வளவு நேரமாக எதிர்பார்த்திருந்த கட்டளை கடைசியில் வந்தது. மூன்றே மூன்று சங்கேத வார்த்தைகள்தான். 'அதிகம் இழந்தவர்கள் தோற்றவர்கள்!' சுருக்கமான, தெளிவான உத்தரவு. துர்க்காவின் உடலில் இதற்கு முன்னர் ஒரு முறையும் அனுபவித்திராத மாற்றம் நிகழ்ந்தது. அளவுக்கு அதிகமான அட்ரனலீன் அவர் உடம்பில் பாய்ந்து சுவாச வேகம் கூடி, அந்தரத்தில் மிதப்பதுபோல ஆனார். அவர் காதுக்குள் இருதயம் அடித்தது. ஆயிரம் யானை பலம் உண்டானது போன்ற உணர்வு. முன்னே கால் வைத்தால்போதும், ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு கட்டத்துக்குள் அவர் நுழைந்துவிடுவார். அவருடைய இருதயத்தின் இரண்டு துடிப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் பாய்ந்து, அவருடைய ஆயுளையும் 1000 போராளிகளின் ஆயுளையும், ஒரு தேசத்தின் ஆயுளையும் தீர்மானிக்கப்போகும் அந்த ஓர் அடியை துர்க்கா வைத்தார்.
எதிரிகளின் நாலு டாங்கிகளும் எட்டு கவச வாகனங்களும் புள்ளிகளாகத் தெரிந்தன. தனித்தனியாக ஆடிய கை விரல்களால் துர்க்கா ஷி 97 துப்பாக்கியைத் தொட்டுத் தூக்கினார். சற்று நிதானித்து, நேராக்கி குறிபார்த்து விசையை அமுக்கினார். எதிரிகள் விழுந்துகொண்டே இருந்தார்கள். இனி, அவர் நிறுத்தப்போவது இல்லை. யாராவது அவரை நிறுத்தினால் ஒழிய.
ராணுவத்தின் வலப்பக்க முனையும் இடப்பக்க முனையும் நகர்ந்து இடைவெளியைக் குறுக்கி வந்தபோது, இலங்கை ராணுவத்தினர் தங்கள் படையில் ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு மூடத்தனமான நகர்வு ஒருவரும் எதிர்பார்க்காதது. இதைச் சாதகமாக்காமல் விடுவது அதனிலும் கூடிய மூடத்தனம். ராணுவம், தங்கள் படையைக் கொல்லும் அதே வேகத்தில், போராளிகளையும் கொன்றது. எங்கேயோ இருந்து இலக்குவைத்து சுடப்பட்ட குண்டு ஒன்று துர்க்காவைத் தாக்கியது அவருக்குத் தெரியவில்லை. உதிரம் நெற்றியிலே வழிந்து, கழுத்திலே இறங்கி, நெஞ்சை நனைத்தபோது குனிந்து பார்த்தார்!
அன்றைய நாள் 2009... ஏப்ரல் 4-ம் தேதி. போர் நின்றபோது, போராளிகளில் 700 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இலங்கை ராணுவத்தின் இழப்பு 3000 பேருக்கு மேலாக இருந்தது. அந்த விவரம் துர்க்காவுக்கு என்றென்றைக்குமே தெரியப்போவது இல்லை.
அவர் துப்பாக்கியைக் கையிலே இறுக்கிப் பிடித்தவண்ணம் புரண்டு ஆகாயத்தைப் பார்த்தபடி கிடந்தார். அது சொல்ல முடியாத தூய வெண் நிறத்தில் காணப்பட்டது. ஓர் அபூர்வமான நறுமணம் மூக்கைத் துளைத்தது. மேஜர் சோதியாவும், லெப். கேர்ணல் செல்வியும் கண்களுக்குத் தெரிந்தனர். அருள்மதிக்கு விடை சொல்லாமல் புறப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது. வெகுதூரத்தில் பூட்ஸ் ஒலிகளும் மனிதக் குரல்களும் கேட்டன.
பிரிகேடியர் துர்க்கா மரணத்தைத் தழுவும் முன்னர் கடைசியாகப் பார்த்தது, ஆகாயத்தை மறைத்து 100 பறவைகள் சிறகடித்துப் பறந்த காட்சியை. அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தில் 6 மணிக் குருவியைத் தேடின!
அ.முத்துலிங்கம்
நன்றி: ஆனந்த விகடன்
ஓவியம்: ஸ்யாம்
NANRY PONGUTAMIL

அனைத்துலக நீதியினது ஒரு தோல்விக்குக்கூட அனைவரும்தான் பொறுப்பு: பிரித்தானிய நாளேடு

சிறிலங்காவினது விடயத்தில் அனைத்துலக நீதி முறைக்குத் தோல்வி ஏற்படுகிறதெனில் அது ஏனைய நாடுகளின் முரண்பாடுகளிலும் இதே நிலைமையினைத் தோற்றுவிப்பதற்கே வழிசெய்யும்.

இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட The Guardian Wednesday [27 April 2011] நாளேடு தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது
உண்மை மற்றும் பொறுப்புச்சொல்லும் செயல்முறை என்ற இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துவிடமுடியாது என்றும் அனைத்துலக நீதியினது ஒரு தோல்விக்குக்கூட அனைவரும்தான் பொறுப்பு எனவும் காசாவிற்கான ஐ.நாவின் தகவல் திரட்டும் குழுவிற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட நீதியாளர் வென் றிச்சட் கோல்ட்ஸ்ரோன் [When Richard Goldstone] குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தக் கருத்தினை குறிப்பிட்ட இந்த ஐ.நா அணியில் இருந்தவர்கள் நிராகரித்திருந்தார்கள். ஐ.நாவிற்கு எதிரான வாதமாக மேற்குறித்த இந்தக் கதை பயன்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பானது இஸ்ரேலுக்கு எதிராக இயல்பாகவே நீதியற்றமுறையில் நடந்துகொள்வதாகவும் பிராந்தியத்தில் இடம்பெற்றது எதுவோ அதனை விசாரிக்கும் தார்மீக அதிகாரம் எதுவும் இதனிடம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. சிறிலங்கா தொடர்பாக கோல்ட் ஸ்ரோனினது அறிக்கை எங்கே எனச் சிலர் கோருகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளின் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சிறிலங்கா அரச படையினர் இராணுவ ரீதியில் தோற்கடித்த போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஐ.நாவினது வல்லுநர்கள் குழு தனது அறிக்கையினைத் தயாரித்திருக்கிறது.

காசா தொடர்பாக கோஸ்ட்ஸ்ரோனின் தலைமையான குழு தயாரித்த அறிக்கையினைப் போலவே வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கையும் கடுமையானது.

ஆதலினால் காசா தொடர்பாக அறிக்கையினைப் போலவே எந்தவிதமான நடவடிக்கையுமின்றி இந்த அறிக்கையும் அவ்வாறே கிடப்பிலிருக்கும் என்ற எண்ணமே தோன்றுகிறது.

உண்மை, பொறுப்புச்சொல்லும் செயன்முறை மற்றும் அனைத்துலக நீதி ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துவிடமுடியாது என்ற செய்தியினையே இது தருகிறது.

போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நாட்டினது திறன் ஏனைய நாடுகளின் மோதல்களின்போது பொதுமக்கள் எவ்வாறு மோசமாக நடாத்தப்பட்டிருப்பார்கள் என்பதையே காட்டுகிறது.

சிறிலங்காவினது விடயத்தில் அனைத்துலக நீதி முறைக்குத் தோல்வி ஏற்படுகிறதெனில் அது ஏனைய நாடுகளின் முரண்பாடுகளிலும் இதே நிலைமையினைத் தோற்றுவிப்பதற்கே வழிசெய்யும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதி மாதங்களில் சிறிலங்கா அரச படையினர் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல்களை நடாத்தியிருக்கிறார்கள், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடாத்தியிருக்கிறார்கள் மற்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

அதே போலவே விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய அதேநேரம் மோதல் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து தப்பிச்செல்லமுற்பட்ட பொதுமக்களை இலக்குவைத்து குறுகிய தூரத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இந்த இரட்டைக் கொடூரங்களின் விளைவாக ஆியரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்டனர். போரின் இறுதி மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திய பாதுகாப்பு வலயங்கள் தினமும் கொடுமையும் காட்டுமிராண்டித்தனமும் கட்டவிழ்ந்துவிடப்பட்ட பிரதேசங்களாகின.

பொதுமக்களுக்கு எதிரான தாங்கள் ஒரு துப்பாக்கி ரவையினைக்கூட பயன்படுத்தவில்லை என அதிபர் மகிந்த ராஜபக்சவினது பணியகம் வாய்கிழியக் கத்திக்கொண்டிருக்க, உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களின் தலைகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.

தொண்டு நிறுவனப்பணியாளர்கள் எவருமில்லை, ஒரு ஊடகவியலாளர் கூட அங்கில்லை, இருப்பினும் அது போரற்ற பாதுகாப்பு வலயமாம்.

இந்தக் கொடூரம் அரங்கேறி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இடம்பெற்ற சம்பவங்களை விசாரிக்கும் வகையிலான சுதந்திரமான விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தவேண்டியதுதான் இன்றைய இலக்கு.

இதுவிடயம் தொடர்பாக ஐ.நாவின் முனைப்புக்களை சிறிலங்கா தொடர்ந்தும் எதிர்த்து வருகிறது. ஒருகட்டத்தில் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தின் முன்னால் பெருமெடுப்பிலமைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினைக்கூட அது ஒழுங்குசெய்திருந்தது.

இந்த நிலையில் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக தானே இரண்டு விசாரணை அலகுகளை அமைத்திருந்தது சிறிலங்கா. ஆனால் இடம்பெற்ற குற்றங்களுக்கு இவர் தான் பொறுப்பு என இன்னமும் இந்த அலகுகள் எவரையும் இனங்காணவில்லை.

இதுபோல இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான முன்னெடுக்கப்படும் முனைப்புக்கள் போரின் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்டிருக்கும் அமைதியினைச் சீர்குலைத்துவிடுமாம் என சிறிலங்காவினது ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கானதே இந்த வாதங்கள் என்பது தெளிவு.

சிறிலங்கா அரசாங்கத்தினது அனுமதியின்றி இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கான விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் தனக்கில்லை என செயலாளர் நாயகம் பன் கீ மூன் கூறுகிறார். இல்லையேல் இதுபோன்றதொரு விசாரணைக்கு பாதுகாப்புசபை அனுமதியளிக்கவேண்டும் என்கிறார் அவர். சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் அது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஒரு தரப்பாக இல்லை.

ஆனால் செயலாளர் நாயகத்தினது இந்த வாதத்தினை மனித உரிமைக் கண்காணிப்பகம் நிராகரிக்கிறது. எவ்வாறு கடுமையாகப் போராடி வல்லுநர்கள் குழுவினை அமைத்தாரோ அதே வேகத்துடன் செயலாளர் நாயகம் தான் ஆரம்பித்து வைத்ததை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என மனித உரிமைக் காண்காணிப்பகம் கூறுகிறது.
(புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.)

சாய்பாபா மரணம் இயற்கையானது; ஆந்திர அரசு அறிவிப்பு

சாய்பாபா கடந்த மாதம் 28-ந்தேதி புட்டபர்த்தி சத்யசாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சபயா தினமும் அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர், சாய்பாபாவின் உறுப்புகள், மருந்துகளை ஏற்று நன்றாக செயல்படுகின்றன. ஆனால் அவர் கவலைக்கிடமாக உள்ளார் என்று கூறினார்.
இது சாய்பாபா பக்தர்களிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 18-ந்தேதி தலித் ஜனசபை அமைப்பு தலைவர் கரம் சந்த் ஆந்திர மனித உரிமை ஆணையத்தில், சாய்பாபாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு சாய்பாபாவுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
இதை விசாரித்த மனித உரிமை ஆணைய தற்காலிக தலைவர் பெத்தபெரிரெட்டி, மாநில அரசு உரிய விளக்கம் அளிக்கும்படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். இதற்கு விளக்கம் அளித்த அரசு, சாய்பாபாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. என்று தெரிவித்தது. இந்நிலையில் சாய்பாபா கடந்த 24-ந்தேதி காலை மரணம் அடைந்தார்.
இதையடுத்து மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சாய்பாபா மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுபற்றி எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதற்கு மாநில அரசு உரிய விளக்கம் அளித்து பொது மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ஆந்திர மாநில தலைமை செயலாளர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் விளக்கம் அளித்தார்.
அதில் சாய்பாபா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே மாநில அரசு அதிகாரிகள் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை நேரடியாக கண்காணித்து வந்தனர். சாய்பாபாவின் மருத்துவ அறிக்கை முழுவதையும் நாங்கள் பார்த்து விசாரணை நடத்தினோம். அவரது சாவில் மர்மம் எதுவும் இல்லை. அவரது மரணம் இயற்கையானதுதான். சில பக்தர்கள் சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையே கூறி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

சாய்பாபா மரண சர்ச்சை: ஏப்ரல் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர் செய்த அறக்கட்டளை!!

சத்ய சாய்பாபா உடல் செய்யப்பட்டு முழுசாக ஒரு நாள் முடிவதற்குள் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.

உண்மையில் அவர் இறந்தது ஏப்ரல் 24-ம் தேதிதானா... அல்லது அதற்கும் முன்பாகவா என்ற சந்தேகத்தை மீடியாக்கள் கிளற ஆரம்பித்துள்ளன.

காரணம், சத்யசாய் அறக்கட்டளை சார்பில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்பே, ரொம்ப காஸ்ட்லியான ஒரு சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து வாங்கியதுதான்.

அறக்கட்டளையின் சக்திவாய்ந்த மற்ற உறுப்பினர்களுக்குக் கூட தெரியாமல் இந்த செயலை செய்துள்ளனர், பாபாவின் உறவினர்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த மார்ச் 28-ம் தேதி சாய்பாபா உடல்நிலை மோசமடைந்து, சாய்பாபா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவரது நிலை குறித்த முழுமையான தகவல்கள் வரவில்லை. உடல்நிலை கவலைக்கிடம் என்று மட்டும் கூறி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு (Freezer box) ஆர்டர் கொடுத்துள்ளது சாய்பாபா அறக்கட்டளை. பெங்களூரில் உள்ள 'குமார் அண்ட் கோ இன்டர்நேஷனல்' என்ற கோவையைச் சேர்ந்த தமிழருக்குச் சொந்தமான சவப்பெட்டி நிறுவனத்தில்தான் இந்த ஆர்டர் தரப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ 1.07 லட்சம் ஆகும். ரூ 57000 அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ராஜேந்திர ரெட்டி என்பவர் இந்தப் பெட்டியை வாங்கி, அல்சூருக்கு அனுப்பியுள்ளார். அங்கிருந்து அந்தப் பெட்டி புட்டபர்த்திக்குச் சென்றுள்ளது!

இத் தகவல்களை சவப்பெட்டி தயாரித்த நிறுவனத்தின் ஊழியர் விஸ்வநாத் விவரமாக மீடியாவிடம் சொல்லிவிட்டார். நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமி கூறுகையில், 'பாபாவுக்காகத்தான் அந்தப் பெட்டியைச் செய்தோம் என்று எங்களுக்கு அப்போது தெரியாது. ஆனால் சாய்பாபா உடல் கிடத்தப்பட்ட அந்தப் பெட்டியை டிவியில் பார்த்ததும் உடனே புரிந்து கொண்டோம், அது எங்களுடைய தயாரிப்புதான் என்பதை. எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது," என்றார்.

சாய்பாபா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள்தான் இந்தப் பெட்டியை வாங்கினர் என்பதும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பெட்டிக்கு ஆர்டர் கொடுத்த ராஜேந்திரநாத் ரெட்டியைத் தொடர்பு கொண்டு அந்நிறுவன ஊழியர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, 'உண்மைதான். ஆனால் இதுபற்றி வெளியில் யாருடனும் பேசாதீர்கள்' என்று எச்சரித்தாராம்.

அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான நாகானந்தைக் கேட்டபோது, "இந்தப் பெட்டிக்கு ஆர்டர் கொடுத்தது சாய்பாபா உறவினர்கள்தான்," என்றார்.

மற்றொரு உறுப்பினரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பிஎன் பகவதி கூறுகையில், "இந்தப் பெட்டிக்கு எப்போது ஆர்டர் கொடுத்தனர் என்ற விவரமே எங்களுக்குத் தெரியாதே," என்றார் அதிர்ச்சியுடன்.

அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் ஜனார்தன் ரெட்டியும் தனக்கு எதுவும் தெரியவில்லை, என்றார். பாபாவின் உடல்நிலை கவலக்கிடமாக உள்ளதாக தகவல் கொடுத்தது ஜனார்தன் ரெட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது!

துல்லியமான இழப்பு விபரங்களைத் திரட்ட முடியவில்லை – ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்

சிறிலங்கா அரசபடைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக ஐ.நாவினால் துல்லியமான விபரங்களைப் பெறமுடியவில்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை நியுயோர்க்கில் அவர் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ பாதுகாப்புக் காரணங்களால், அந்த நேரத்தில் ஐ.நாவின் பணியாளர்களை சிறிலங்காவில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து நாம் விலக்கிக் கொள்ள நேரிட்டது.

அதனால் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துல்லியமான இழப்பு விபரங்களை எம்மால் திரட்ட முடியாது போனது.

சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா பணியாளர்களுக்கு அங்கே பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில், இழப்புகள் பற்றிய விபரங்களை அவர்களால் திரட்டக் கூடிய நிலை இருக்கவில்லை.

நிபுணர்குழுவின் அறிக்கையில், கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் விரைவில் தமது மூத்த ஆலோசகர்களுடன் மீளாய்வு செய்யவுள்ளார்“ என்றும் மார்ட்டின் நெர்ஸ்க்கி மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையால் பதற்றத்தில் சிறிலங்கா அரசு – வெளிநாட்டுத் தூதுவர்களை இன்று மீண்டும் சந்திக்கிறார் பீரிஸ்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான இராஜதந்திரப் போரை முடுக்கி விட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்களை இன்று மீண்டும் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு வருமாறு கொழும்பிலுள்ள அனைத்து நாடுகளினதும் தூதுவர்களுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அவர்களுடன் கலந்துரையாடி, ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை விவகாரத்தில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 21ம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் முக்கிய இராஜதந்திரிகளுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறியிருந்தார்.

அந்தச் சந்திப்பு இடம்பெற்று சரியாக ஒரு வாரம் கழித்து மீண்டும் வெளிநாட்டுத் தூதுவர்ளைச் சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

முன்னைய சந்திப்பின் போது சீனத் தூதுவர் பங்கு கொள்ளாத விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையால் சிறிலங்கா அரசாங்கம் பதற்றமடைந்துள்ளதாகவும் எனவே, வெளிநாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முனைப்புகளில் தீவிரமாக இருப்பதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையை ஒரு தனிப்பட்ட குழுவின் அறிக்கையாக அடையாளப்படுத்தவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.

தருஸ்மான் குழுவின் அறிக்கை என்றே இதை அழைப்பதுடன், இது ஐ.நா அறிக்கையல்ல என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது

நிபுணர் குழு அறிக்கைக்கு பிரித்தானியா முழுமையான ஆதரவு: குறற்ச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கும் வலியுறுத்து

இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்பட வேண்டுமாயின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியா, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை பதிலளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நிபுணர் குழு அறிக்கை சுயாதீனமானதுமான விசாரணைகளை வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதுடன் நிபுணர் குழுவினால் சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியமானதுஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைதொடர்பில் ஐ.நா.பாதுகாப்புச் சபையிடம் பான் கி மூன் விளக்கம்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறி ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையை விவரங்களை ஐ.நா.பாதுகாப்புப் பேரவைக்கு பொதுச் செயலர் பான் கி மூன் விளக்கியுள்ளார்.
கடந்த 12ஆம் தேதி பான் கி மூனிடம் ஐ.நா.நிபுணர் குழு உறுப்பினர்களான மார்சுகி தாருஸ்மான், யாஷ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் கொண்ட குழு தங்களது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையை அடுத்த 2 நாட்களில் சிறிலங்க அரசிற்கு அளித்தார் பான் கி மூன். அறிக்கையின் மீதான சிறிலங்க அரசின் கருத்தைப் பெற்று, அதனையும் அறிக்கையுடன் வெளியிடவே பான் கி மூன் விரும்பியதாக ஐ.நா.பொதுச் செயலரின் பேச்சாளர் நெசிர்ஸ்கி கூறியிருந்தார். ஆனால் நிபுணர் குழு அறிக்கை மீதான தனது நிலையை சிறிலங்க அரசு தரவில்லை. இந்த நிலையிலேயே அறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் அதனை ஐ.நா.வின் அதிகாரமிக்க பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்களுக்கு பான் கி மூன் விளக்கியுள்ளார். இரகசியக் கூட்டமாக நடந்த இக்கூட்டத்தில், �இலங்கையில் தேச இணக்கப்பாடும், அமைதியும் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் அறிக்கையின் மீதான அந்நாட்டு அரசின் பதிலை எதிர்பார்த்திருந்தேன்� என்று பான் கி மூன் கூறியுள்ளார்.
அறிக்கை வெளியிடப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய பான் கி மூன், �நடந்த குற்றங்களுக்கான பொறுப்பை நிர்ணயிப்பதும், ஐ.நா.வின் நடவடிக்கைகள் வெளிப்படையானது என்பதை உறுதிசெய்யும் முகத்துடனே அறிக்கை வெளியிடப்பட்டது� என்று கூறியுள்ளார்.
ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையை தான் மிக ஆழமாக படித்துவருவதாகவும், ஐ.நா.பாதுகாப்புப் பேரவை உறுப்பினர்களும் அதனை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் பான் கி மூன் கூறியுள்ளார்

தொண்டுள்ளத்தோடு திமுகவில் பாடுபடுகிறார் கனிமொழி-கருணாநிதி புகழாரம்

கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னையில் இன்று நடந்த திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டுமென்று கருதுகிறவனும் அல்ல.

நானே கைது செய்யப்பட்டபோது கூட என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.

நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 17 ஆயிரத்து 2 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரத்து 77 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர்.

இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப்படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயிலிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்க காத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன் என்றார் கருணாநிதி.

புதன், 27 ஏப்ரல், 2011

சிறீலங்கா அரசு மீது பொருளாதாரத் தடை: ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் சர்வதேச இயக்கம் ஒன்றைத் தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, தேவைப்பட்டால் எதற்கும் அடிபணியாத சிறீலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறீலங்கா அரசின் பொறுப்புடைமை குறித்த ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள் குழுவின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது. “அப்பாவி மக்களுக்கு சேதமின்மை” என்ற கொள்கையின் அடிப்படையில் “மனிதாபிமான மீட்புப் பணி” நடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சிறீலங்கா அரசின் வாதத்தினை 214 பக்கங்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தவிடுபொடி ஆக்கியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த மார்சுகி டாருஸ்மேன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ராட்னர், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய மூன்று நபர் குழு 16.9.2010 அன்று தனது பணியை தொடங்கியது. சிறிலங்கா ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான செப்டம்பர் 2008 முதல் மே 2009 வரையிலான காலத்தையும், அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் இந்தக் குழு தன்னுடைய ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டது.

குண்டு மழை பொழிவிலிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக சிறிலங்கா அரசால் அறிவிக்கப்பட்ட “குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி” மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றின் மீதே சிறிலங்கா அரசின் ராணுவ படைகள் குண்டு மழை பொழிந்ததை நம்பிக்கையூட்டும் ஆதாரங்களுடன் மூன்று நபர் வல்லுநர் குழு கண்டறிந்துள்ளது. மிகப் பெரிய ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் பயன்படுத்த மாட்டோம் என்று சிறிலங்கா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் திட்டமிட்டு குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக சிறிலங்கா ராணுவம் இருந்தது என்று வல்லுநர் குழு முடிவு செய்துள்ளது.
மிகப் பெரிய பீரங்கிகளையும், குண்டுகளையும் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் வட இலங்கையில் உள்ள வன்னி பகுதியைச் சுற்றி மிகப் பெரிய தடையை சிறிலங்கா அரசும் அதன் படைகளும் உருவாக்கின. மயக்க மருந்து அல்லது வலியை இழக்கச் செய்யும் மாத்திரைகள் எதுவும் இல்லாமல், மருத்துவ காரணங்களுக்காக தேக உறுப்புகளை வெட்டி எடுக்கும் மருத்துவமனைகள் மீதும்; மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டதால் மரங்களுக்கு கீழ் அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட பகுதிகளிலும் குறி வைத்து இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது.

உணவு, குடிநீர் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளனர். உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்துப் பொருட்கள் போர்ப் பகுதிக்கு சென்றடையக் கூடாது என்பதற்காகவே, போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்ட அப்பாவி தமிழ் மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்து மதிப்பீடு செய்ததாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்துதல், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல், தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து தப்ப நினைக்கும் அப்பாவி தமிழர்களை கொல்லுதல், கூலி வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துதல் உட்பட பல மனித உரிமை மீறல்களை விடுதலைப்புலிகள் நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், போர் நடந்த கடைசி மாதங்களில், விடுதலைப்புலிகள் மிகவும் குன்றிய நிலையில் இருந்ததாகவும், எனவே, விடுதலைப்புளி‌ன் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி, தன்னுடைய சொந்தக் குடிமக்களான தமிழ் மக்கள் மீது விபரீத அளவு தாக்குதல் நடத்தியதை சிறிலங்கா அரசு நியாயப்படுத்த முடியாது என்றும், இது இனப் படுகொலை தான் என்றும், நாகரிகம் மற்றும் பண்பாடுள்ள மக்கள் இதை இனப் படுகொலை என்று கருத்தில் கொள்வது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளி வராமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் சிறிலங்கா அரசு மேற்கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்பட்டால், தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமரச முயற்சிகளுக்கு தடையாக அமைந்துவிடும் என்ற வாதத்தை சிறிலங்கா அதிபர் ராஜபக்ச முன்வைத்தார்.
ஐ.நா. அறிக்கையை வெளியிடாமல் தடுப்பதற்காக ராஜபக்சவின் சகோதரர் கோத்தபைய ராஜபக்ச அமெரிக்காவிற்கு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. அறிக்கை வெளியிடப்படாமல் இருக்க தன்னால் இயன்ற உதவியை செய்யுமாறு ராஜபக்ச பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசி மூலம் பேசியதை சிறீலங்கா அரசு உறுதி செய்ததாக ஊடகங்களிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தனை நிர்ப்பந்தங்களுக்கு மத்தியில் ஐ.நா. குழுவின் அறிக்கை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையில் இனிமேலும் இந்தியா மவுன பார்வையாளராக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மொழி, மதம், கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, கடலுக்கு அப்பால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது சொந்த நாட்டிலேயே ஆற்றொணா துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது.

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; கண்ணியத்துடன் வாழ அனைவரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய சிறீலங்கா அரசை நிர்ப்பந்திக்கும் வகையில், சர்வதேச இயக்கம் ஒன்றை தொடங்க இந்தியா முன்னின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்படின், எதற்கும் அடிபணியாத சிறீலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையில் அடக்குமுறை என்பது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது, ஒருதலைபட்சமானது என்ற முந்தைய கூற்றினை தகர்த்தெறிந்து, இலங்கையில் மனித உரிமை மீறல்களும், மிருகத்தனமான அடக்குமுறைகளும் நடைபெற்றதை ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது. எனவே, ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள், இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக ராஜபக்ச, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

இதைச் செய்யாமல், தற்போது போல் தொடர்ந்து இந்தியா மவுனம் சாதிக்குமேயானால், கண்ணியத்துடன் வாழ்வதற்குரிய உரிமை உட்பட இலங்கை தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாழும் தமிழர்களை தன்னுடைய நாட்டிலேயே அகதிகளாக மாற்றும் ராஜபக்சவின் கொள்கைக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது என்று தற்போது கூறப்படும் கூற்றிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும். இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

பான் கீ மூன் தமது நிபுணர் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து, சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையில் இணைத்துள்ள 16 செய்மதிப் படங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு, அக்குழு பரிந்துரைத்துள்ள யோசனைகளை பான் கீ மூன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நியூயோர்க்கில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளில் சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ தடங்கலை ஏற்படுத்துவதற்கோ அல்லது தலையிடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது என்றும் கண்காணிப்பகம் கேட்டுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கைப்படி சிறிலங்காபடையினரும் விடுதலைப்புலிகளும் இறுதிப்போரின் போது சர்வதேச மனித உரிமைக்கோட்பாடுகளை மீறினர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் போர் நிறைவடைந்த கடந்த இரண்டு வருடக்காலப்பகுதியில் சிறிலங்கா அதிபர் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கு வழங்கிய உறுதிமொழியையும் நிறைவேற்ற தவறிவிட்டார். அதேநேரம் படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் அதிபர் மகிந்த ராசபக்ச முன்வரவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் ரஸ்யாவும் சீனாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டால், ஏனைய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என்று கண்காணிப்பகம் கோரியுள்ளது. எனவே பான் கீ மூன் தமது நிபுணர் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து, சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய தலைவர் பிரட் அடம்ஸ் கோரியுள்ளார்

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணை தவிர்க்க முடியாதது: நவநீதம்பிள்ளை அறிக்கை

நிபுணர்குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் மாறாவிடின் இது தொடர்பான ஒரு முழுமையான சர்வதேச விசாரணை தவிர்க்க முடியாதது என தான் நம்புவதாக ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தில் போர்குற்றங்களும் மனிதத்திற்கு எதிரான செயற்பாடுகளும் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரம் உள்ளதாக ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து வெளியிடும்போதே மனிதவுரிமைகள் ஆணையர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அறிக்கை எமது தார்மீக நியாயப்பாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதோடு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தியுள்ளதென நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா மனிதவுரிமை ஆணையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே நவநீதம்பிள்ளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச மனிதவுரிமை விதிகளையும் யுத்தமீறல்கள் தொடர்பான நடைமுறைகளையும் கடைப்பிடிப்பது என்பது நிபுணர்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல ஒவ்வொரு நாடுகளினதும் தெரிவாக இன்றி ஐ.நா உறுப்பு நாடுகளின் கடமையாகவே இருக்க வேண்டும்.
2009 ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தமீறல்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காகவே ஐ.நா செயலாளர் நாயகத்தால் இந் நிபுணர்குழு அமைக்கப்பட்டது.
இந்த இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் யுத்தத்தின் முடிவில் பெருமளவு மக்கள் அகதிகளாக இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
மக்கள் தங்கியிருந்த முகாம்களை இலக்குவைத்து கனரக ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டமை, மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசு மீது நிபுணர்குழு ஆதாரத்துடன் முன்வைத்துள்ளது. அதேவேளை மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை மற்றும் தப்பிச்செல்ல முயன்ற மக்களைக் சுட்டுக்கொன்றமை போன்ற குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீதும் நிபுணர்குழு முன்வைத்துள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு இதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிபுணர்குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள நேரடி சாட்சியங்களும் நம்பிக்கையான தகவல்களும் ஒரு வெளிப்படையானதும் முறையானதுமான விசாரணையை வலியுறுத்துவதாக மனிதவுரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் மாறாவிடின் இது தொடர்பான ஒரு முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என தான் நம்புவதாக நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதில்கூறும் விடயத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் ஐ.நா சபையின் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தும் விதமாக அமையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை முற்றாக நீக்குதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல், காணாமற் போனவர்கள் விடயத்திற்கு தீர்வு காணுதல், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் விடயத்திற்கு தீர்வு காணுதல் போன்ற நிபுணர்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை முற்றாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அவர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீண்டகால பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வினை வழங்குவதே உண்மையான நல்லிணக்கத்திற்கு அவசியம் எனத் தெரிவித்த அவர், நிபுணர்குழுவின் அறிக்கை வெளியானபின் சிறிலங்காவில் ஊடகவியலாளரின் பாதுகாப்பு, சாட்சிகளின் பாதுகாப்பு, சிவில் சமூக உறுப்பினர்களின் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துவதில் தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் அடக்கம்

உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பக்தர்களைக் கொண்ட சாய்பாபா (85) கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். கடந்த 3 நாட்களாக அவரது உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் குல்வந்த் ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று காலை முதல் நள்ளிரவு வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

சாய்பாபாவின் உடலுக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி அம்பிகாசோனி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலை சாய்பாபா வின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அவர் போதனை செய்யும் இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதன்படி அங்கு 4 அடி அகலம், 7 அடி நீள அளவில் 9 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் பஸ்பம் என்ற விபூதி, சுகந்த திரவியங்கள் போடப்பட்டன. சர்வமத குருக்கள் சர்வமத உடல் அடக்க பிரார்த்தனை நடத்தினர்.

பின்னர் சாய்பாபாவுக்கு வேத பண்டிதர்கள் தோஷ நிவாரண பூஜை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் நவரத்தினங்கள் வைக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டது. அவரது உடல் மீது கங்கை, நர்மதா, சரஸ்வதி போன்ற புனித நதிகளின் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன. தெற்கு திசையில் சாய்பாபா தலையை வைத்தபடி உடல் குழிக்குள் இறக்கப்பட்டது.

பின்னர் குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் காலை 9.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. குழி புனித மண் கொண்டு மூடப்பட்டது. அப்போது புட்டபர்த்தி நகரம் முழுவதிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பல பக்தர்கள் கதறி அழுதனர்.

இந்த உடல் அடக்க நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர் அத்வானி, ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் சாய்பாபாவின் நெருங்கிய உறவினர்கள் 300 பேரும் கலந்து கொண்டனர்.

அடக்கம் நடந்த ஹாலில் இன்று 1500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி முழுவதும் புட்டபர்த்தி நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த ராட்சத டிஜிட்டல் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அடக்க நிகழ்ச்சியை கண்கலங்கியபடி பார்த்து அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

இன்று நேற்றை விட கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டன. உடல் அடக்கம் நடந்த பிரசாந்தி நிலையத்திற்கு அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆசிரமத்தை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

புட்டபர்த்தி நகர மக்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். அரசு அதிகாரிகளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுத்தனர். புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டன. வாகனங்கள் அனைத்தும் புட்டபர்த்தியில் இருந்து 5 கி.மீ. துரத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் அனைவரும் நடந்தே ஆசிரம பகுதிக்கு வந்தனர்

ஐ.நா அறிக்கையை கவனமாக ஆராய்கிறதாம் இந்தியா

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்று புதுடெல்லியில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“இந்த அறிக்கையை கவனமாகப் படிக்க வேண்டிய தேவையுள்ளது. இது முதலாவது கட்டம்.

அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் விரைவில் இந்தியா தொடர்பு கொண்டு பேசும்“ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த அறிக்கை குறித்து இந்தியா மௌனமாக இருப்பது சிறிலங்காவுக்கு எரிச்சலூட்டியிருப்பதாக சிறிலங்கா அதிகார வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்ட கோத்தாபய எங்கே? – வெளியாகும் முரண்பாடான தகவல்கள்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடந்த 23ம் திகதி திடீரென கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

வெளிநாடு ஒன்றுக்கு அவர் சென்றுள்ள போதும் அவர் எங்கு சென்றார் என்பது பற்றிய குழப்பமான தகவல்கள் வெளியாகின்றன.

முன்னதாக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவலில் அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்றிருப்பதாக கூறியிருந்தது.

ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என்றும் அமெரிக்காவில் தான் தங்கியிருப்பதாகவும் மற்றொரு இணைய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியுள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.

ஐ.நாவின் அறிக்கையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இநதப் போரில் முக்கிய பங்கு வகித்த கோத்தாபய ராஜபக்ச முக்கிய போர்க்குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.

தன் மீதான நெருக்கடிகள் வலுவடைவதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவே அவர் திடீரென வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் அவர் உஸ்பெகிஸ்தானில் தான் தங்கியுள்ளாரா அல்லது அமெரிக்காவில் தான் தங்கியுள்ளரா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது.

கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தால், எதற்காக அந்தத் தகவலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மறைக்க முற்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா விசாரணை நடத்த வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா கண்டிப்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான பணிப்பாளர் சாம் சரிபி, “ பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுக்க, சிறிலங்கா அரசு வெள்ளையடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளை ஐ.நாவின் அறிக்கை போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றங்களை யார் செய்தது, யாருக்கு என்ன செய்தது என்று முடிவு செய்வதற்கும், குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரிய நேரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரின்போது இரண்டு தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க ஐ.நாவின் விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சாம் சரிபி கேட்டுக் கொண்டுள்ளார்.

“ போரின் இறுதிக்கட்த்தில் அதிலிருந்து தப்பிய சாட்சிகள் மிகப் பயங்கரமான காட்சிகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். காயங்கள் அடைந்தும் வாழ்க்கையை இழந்தும் போயுள்ளனர். உணவு, மருத்துவ வசதிகள், குடிநீர் என்பன அவர்களுக்குக் கிடைக்காமல் பிடுங்கிக் கொள்ளப்பட்டன.

போர் வலயத்தில் இருந்து தப்பிய அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத் தடுப்பு முகாம்களுக்குள் பரிதாபகரமான நிலைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தும் பலர் இன்னமும் குற்றச்சாட்டுகள் ஏதும் சுமத்தப்படாமல் தடுப்பில் உள்ளனர். அவர்களுக்கான நீதியை நாம் எப்படி மறுக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளாலும் சிறிலங்கா அரசினாலும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உடனடியாக அனைத்துல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதன்மூலமே சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் நம்பியாரின் பங்கு - கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவினார் பான் கீ மூன்

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விஜய் நம்பியாரின் பங்கு தொடர்பாக பான் கீ மூனிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பிய போது அவர் அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் நழுவிச் சென்றுள்ளார்.

பொதுமக்கள் இழப்புகள் பற்றிய சரியான புள்ளிவிபரங்களைத் திரட்டி, போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு இருந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்தத் தவறியுள்ளதாக நிபுணர்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறித்து ஐ.நா பொதுச்செயலரிடம் இன்னர் சிற்றி பிரஸ் நேற்றுக் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள பான் கீ மூன், ஐ.நா பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க சிறிலங்கா அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

“ போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு நிலைமை நிச்சயமற்றதாக- மிகவும் மோசமானதாக இருந்தது. அங்குள்ள ஐநாவின் பணியகங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியது.

அந்த நேரத்தில் சிறிலங்காவின் ஆலோசனைப்படியே எம்மால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது“ என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் வெள்ளைக்கொடிக் கொலைகள் விவகாரத்தில் வகித்த பங்கு தொடர்பாக இன்னொரு கேள்வியை இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்துள்ள பான் கீ மூன், அந்த நேரத்தில் சிறிலங்காவில் இருந்த ஐ.நா பணியகங்களின் செயற்பாடுகள் தொடர்பாக தாம் மீளாய்வு செய்ய முயற்சிப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தனது மூத்த ஆலோசகர்களுடன் கலந்துரையாடச் செல்லவுள்ளதாகவும் நழுவலான பதிலை அளித்துள்ளார்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை: சிறிலங்காவில் என்ன நடக்கிறது? -செய்தித்துளிகள்

சிறிலங்கா மீதான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று மாகாண முதலமைச்சர்களின் மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.

அகலவத்தையில் உள்ள குகுலேகங்க விடுதியில் மாகாண முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவில் உள்ள எட்டு மாகாண முதலமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டிலேயே சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தும் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டை நிலைப்பாட்டில் சிலகட்சிகள்

சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டும் ஐ.நா அறிக்கை தொடர்பாக சில கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சில கட்சிகள் அரசின் மீது அவப்பழி சுமத்தும் அறிக்கையை நிராகரித்துள்ளதாக கூறியுள்ளபோதும்- விசாரணை நடத்துமாறு கூறுகின்றன.

இந்தக் கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ள நோக்கம் தான் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரவலான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஏற்பாடு

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக சிறிலங்காவில் பரவலான போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வானொலி அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்குப் பகுதி மக்கள் நிபுணர்குழு அறிக்கையை நிராகரித்துள்ளதாகவும், சிறிலங்கா அரசின் மீது போர்க்குற்றம் சுமத்தும் இந்த அறிக்கையைக் கண்டித்து அடுத்த சில நாட்களில், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களில் பேரணிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வானொலி கூறியுள்ளது.

நேற்று முன்தினம் கண்டியில் ஜாதிக ஹெல உறுமயவின் ஏற்பாட்டில் எதிர்ப்புப் பேரணி ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் அத்தனைகல, நிட்டம்புவ, ஹொரண ஆகிய இடங்களிலும் பேரணிகள் நடைபெற்றுள்ளன.

இந்தப் பேரணிகளில் ஐ.நா நிபுணர்குழுவையும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனயும் கேவலப்படுத்தும் வகையிலான முழக்கங்கள் எழுப்பப்படுவதுடன், பான் கீ மூனின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் சகல பகுதிகளிலும் ஐ.நாவின் அறிக்கைக்கு எதிராக பேரணிகளை ஒழுங்கு செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கம் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

உள்ளக அறிக்கையே இது

சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை அதிகாரபூர்வமானதல்ல என்று சிறிலங்காவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி கூறியுள்ளது.

ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இந்த அறிக்கை உள்ளக அறிக்கை மட்டுமே என்றும், இதை தமது கட்சி நிராகரிப்பதாகவும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.

சப்ரகமுவ மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்

சிறிலங்காவின் சப்ரகமுவ மாகாணசபையில் நேற்று ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்ரகமுவ மாகாணசபையின் முதல்வர் ரஞ்சித் பண்டார கொண்டு வந்த இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதுடன், இது விரைவில் ஐ.நாபொதுச் செயலர் பான் கீ மூனுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு ஐதேக, ஜேவிபி போன்ற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தனர்.

அறிக்கையை ஆராய பிரட்மன் தலைமையில் ஐதேக குழு

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை ஆராய பிரட்மன் வீரக்கோன் தலைமையிலான குழுவொன்றை ஐதேக நியமித்துள்ளது. ஐதேகவின் பதில் பொதுச்செயலர் தயா பல்பொல இந்தக் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தக் குழுவின் ஆலோசனையை பெற்ற பின்னரே கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச இந்த அறிக்கையை தவறானது என்று நிராகரித்துள்ளார். ஐ.நா தனது அதிகார வரம்பை மீறிச் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

கனிமொழியை கைவிடுகிறதா கருணாநிதி குடும்பம்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை முதல்வர் கருணாநிதியை தவிர அவரது குடும்பத்தில் கனிமொழிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்றும்,கனிமொழி குடும்பத்தில் ஓரம்கட்டப்படுவதாகவும் செய்திகள் அலையடிக்க தொடங்கி உள்ளன.

2ஜி வழக்கில் கடந்த 2ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

இந்நிலையில், 2ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி, மேலாண்மை இயக்குநர் சரத் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக திமுக கொடுத்த அழுத்தத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆவது தள்ளிப்போனதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில்,2ஜி வழக்கில் துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

இந்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி,சரத் ரெட்டி ஆகியோரது பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. இதில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அதே சமயம் கலைஞர் டி.வி.யில் கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு தலா 20 விழுக்காடு பங்குகளே உள்ள நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயர் இடம்பெறாதது பலரது புருவத்தை உயர்த்த வைத்தது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து சிபிஐ, ஒரு விளக்கத்தை அளித்தது.

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும், பணிகளிலும் அவருக்கு பங்கில்லை. அதற்கான ஆங்கில அறிவோ அல்லது சட்ட நுணுக்கங்களை படித்து தெரிந்துகொள்ளும் அறிவோ அவருக்கு இல்லை. அவர் ஒரு செயல்படாத பங்குதாரராகவே இருந்திருக்கிறார் என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை என்றும், அதே சமயம் அவர் விசாரிக்கப்படவேண்டிய சாட்சியாளர் பட்டியலில் உள்ளதாகவும் சிபிஐ தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் வருகிற மே மாதம் 6 ஆம் தேதியன்று நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கனிமொழிக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதற்கான சூழ்நிலை உருவாகி இருப்பதும் மறுப்பதற்கில்லை.

இதனால் கனிமொழிக்கு அடுத்தபடியாக மிகவும் கலக்கம் அடைந்திருப்பது கருணாநிதிதான். இத்தனை ஆண்டு கால தமது அரசியல் அனுபவம் மற்றும் தாம் இப்போதும் முதல்வராக இருந்தும், இவை எதுவும் தமது மகளை காப்பாற்ற உதவவில்லையே என்ற ஆதங்கம் மிகுதியாகவே அவருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தொலைக்காட்சி பெண் நிருபர் ஒருவர், குற்றப்பத்திரிகையில் கனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை கருணாநிதியிடம் கேட்டார்.

உடனே அதற்கு பதிலளித்த கருணாநிதி,"பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் பேசக்கூடாது' என்று ஒரு அபத்தமான பதிலை கூறியதிலிருந்தே அவர் உள்ளுக்குள் எவ்வளவு பதட்டமடைந்துள்ளார் என்பது அம்பலமாகிப்போனது.
அதே சமயம் கனிமொழி விடயத்தில் இந்த அளவு பதட்டமும், கலக்கமும் அடைந்திருப்பது கருணாநிதி மற்றும் தாயார் ராசாத்தி அம்மாள் ஆகியோர் மட்டுமே தவிர, அவரது குடும்பத்தில் வேறு யாரும் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை என்கிறது அறிவாலய தகவல்கள்.

கருணாநிதி குடும்பத்தில் இன்று கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரமிக்கவர்களாக வளைய வருபவர்கள் என்று எடுத்துக் கொண்டால் அழகிரி, ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர்தான் முக்கியமானவர்கள். இதில் தயாநிதி மாறன் மீது கனிமொழிக்கு எவ்வளவு வெறுப்பு உண்டு என்பது நீரா ராடியா டேப் உரையாடலிலேயே தெரிந்துபோனது.

ஸ்டாலினோ எப்போதும் மாறன் சகோதரர்கள் மனம் கோணாமல் நடந்துகொள்ள விரும்புவர். ஏற்கனவே கனிமொழி டெல்லி அரசியலில் லாபி பண்ணுவதை விரும்பாத ஸ்டாலின், தற்போது அவர் மீது கருணை காட்டுவார் எனு எதிர்பார்க்க முடியாது.

மு.க. அழகிரியோ,முன்னர் கனிமொழியுடன் இணக்கமாக இருந்தாலும் 2ஜி குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்து ராசா கைதானதில் இருந்தே, கனிமொழி மீது கசப்புணர்வு கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

செல்வி உட்பட கருணாநிதி குடும்பத்தின் இதர சொந்தங்கள் யாரும் கனிமொழியுடன் அவ்வளவாக உறவு பாராட்டாத நிலையில், அவர்கள் ஆதரவு கனிமொழிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறும் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமான அறிவாலய புள்ளி ஒருவர், கனிமொழி தற்போது கட்சியிலும், குடும்பத்திலும் தனிமைப்பட்டு நிற்கிறார் என்று கூறுகிறார்.

முன்னர் தயாநிதி மாறன் மீது இருந்த கோபத்தில், கனிமொழிக்கு ஆதரவு காட்டிய பல மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட தற்போது விலகி நிற்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அநேகமாக முன்னர் 2ஜி விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடிக்கு சென்றவுடன், ஆ.ராசாவை பலிகடா ஆக்கியதைப்போல,தற்போது கனிமொழியையும் பலிகடா ஆக்க கருணாநிதிக்கு, அவரது குடும்பத்திலும், கட்சியிலும் நெருக்குதல்கள் கொடுக்கப்படலாம்.

இதனால் கனிமொழியை அவர் வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கருணாநிதி கூறவும் வாய்ப்புண்டு.

ஆக மொத்தத்தில் கனிமொழி மற்றும் கருணாநிதியின் தற்போதைய நிலைமை "உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்" என்பது போல ஆகிவிட்டது என்றே கூறலாம்.
nanry webulakam