உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பக்தர்களைக் கொண்ட சாய்பாபா (85) கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். கடந்த 3 நாட்களாக அவரது உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் குல்வந்த் ஹாலில் வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று காலை முதல் நள்ளிரவு வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
சாய்பாபாவின் உடலுக்கு நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி அம்பிகாசோனி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலை சாய்பாபா வின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அவர் போதனை செய்யும் இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி அங்கு 4 அடி அகலம், 7 அடி நீள அளவில் 9 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் பஸ்பம் என்ற விபூதி, சுகந்த திரவியங்கள் போடப்பட்டன. சர்வமத குருக்கள் சர்வமத உடல் அடக்க பிரார்த்தனை நடத்தினர்.
பின்னர் சாய்பாபாவுக்கு வேத பண்டிதர்கள் தோஷ நிவாரண பூஜை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் நவரத்தினங்கள் வைக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டது. அவரது உடல் மீது கங்கை, நர்மதா, சரஸ்வதி போன்ற புனித நதிகளின் தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன. தெற்கு திசையில் சாய்பாபா தலையை வைத்தபடி உடல் குழிக்குள் இறக்கப்பட்டது.
பின்னர் குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் சாய்பாபா உடல் காலை 9.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. குழி புனித மண் கொண்டு மூடப்பட்டது. அப்போது புட்டபர்த்தி நகரம் முழுவதிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சாய்பாபாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். பல பக்தர்கள் கதறி அழுதனர்.
இந்த உடல் அடக்க நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர் அத்வானி, ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் சாய்பாபாவின் நெருங்கிய உறவினர்கள் 300 பேரும் கலந்து கொண்டனர்.
அடக்கம் நடந்த ஹாலில் இன்று 1500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி முழுவதும் புட்டபர்த்தி நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த ராட்சத டிஜிட்டல் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அடக்க நிகழ்ச்சியை கண்கலங்கியபடி பார்த்து அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.
இன்று நேற்றை விட கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டன. உடல் அடக்கம் நடந்த பிரசாந்தி நிலையத்திற்கு அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆசிரமத்தை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
புட்டபர்த்தி நகர மக்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். அரசு அதிகாரிகளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுத்தனர். புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து 5 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டன. வாகனங்கள் அனைத்தும் புட்டபர்த்தியில் இருந்து 5 கி.மீ. துரத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் அனைவரும் நடந்தே ஆசிரம பகுதிக்கு வந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக