சிறிலங்காவில் உள்ள ஐ.நா பணியாளர்கள் மற்றும் சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கே உள்ளது என்று ஐ.நா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மே 1ம் நாள் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள பேரணிகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே ஐ.நா பொதுசெயலரின் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் இவ்வாறு கூறியுள்ளார்.
“ ஐ.நா பணியாளர்களின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளது. எனினும் ஐ.நாவின் சொத்துகள், பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை சிறிலங்கா அரசுக்கு ஐ.நா மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, சிறிலங்காவின் அமைச்சர்கள் இருவர் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான பேரணிகள் தொடர்பாக குழப்பமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, ஐ.நாவின் அறிக்கைக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
ஆனால் நேற்று கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரிஸ், ஐ.நாவின் அறிக்கைக்கு எதிரான பேரணிகளை நடத்தும் திட்டம் ஏதும் அரசாங்கத்துக்குக் கிடையாது என்று கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் இருவர் ஒரே நாளில் கூறியுள்ள முரண்பாடாக கருத்துகள் இராஜதந்திர வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக