போர் முடிவுக்கு வந்து 2 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.. ஆனால் வடக்கு கிழக்கில் இன்னமும் தொடர்ச்சியாக பல்லாயிரம் பேர் முகாம்களில் வாழ்கின்றனர். இளைஞர்கள் கடத்தப்படுவதும் - காணாமல் போவதும் தொடர்கின்றன. முன்னாள் போராளிகள் கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என நோர்வேயின் அனைத்துலக உதவிகள் தொடர்பான 'Bistandsaktuelt' எனும் மாத இதழின் அண்மைய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான இதழில் 'போர் முடிவுற்றுள்ளது. அவலங்கள் தொடர்கின்றன' எனும் தலைப்பில் Johan Augustin என்ற கட்டுரையாளர் எழுதியுள்ள அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தினை இங்கு தருகின்றோம்:
போர் முடிவுக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் வடக்கு கிழக்கில் இன்னமும் தொடர்ச்சியாக பல்லாயிரம் பேர் முகாம்களில் வாழ்கின்றனர்.
யாழ் குடாநாட்டில் புதிய பாதை அமைப்பிற்காக புற்கள் பற்றைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் வேர்வை பரவிய நெற்றிகளில் வெப்பம் சுடுகிறது. 35 பாகை வெப்பநிலை உள்ளபோதும், அதற்கு மத்தியிலும் ஆண்களும் பெண்களும் வீதி வெளியாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அருகாமையில் அமைந்துள்ள முகாமைச் சேர்ந்த 10 தமிழர்களைக் கொண்ட குழு இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளியுள்ள மர நிழலில் ஆயுதம் தரித்தவாறு நிற்கும் படையினரால் இவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
பற்றைகள் படர்ந்திருக்கும் அந்தப் பகுதியில் அழிவுற்ற நிலையில், ஒரு காலத்தில் தமிழர்களுக்குச் சொந்தமாகவிருந்த வீடுகளின் எச்சங்களைக் காண முடியும். நீண்ட உள்நாட்டுப் போரினால் குண்டுகளால் துளைக்கப்பட்ட ஓட்டைகள் நிரம்பியதாக வீடுகளின் சுவர்கள் உள்ளன. வீட்டின் எச்சங்கள் இயற்கையால் மூடப்பட்ட நிலையில் உள்ளன.
தமது வாழ்க்கையை நடாத்துவதற்கு ஆண்களும் பெண்களும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து வகை வேலைகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். உறுதியளிக்கப்பட்டபடி தமக்கான நாட்கூலி வழங்கப்படவில்லை என பணியாளர்களில் ஒருவரான சிவா கூறுகின்றார்.
'ஒரு வாரத்தின் பின்னர் கூலி வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது 45 நாட்கள் கடந்து விட்டன. ஒரு ரூபாய்கூட வழங்கப்படவில்லை. நாங்கள் வாக்குறுதியை நம்புகிறோம். அதைத் தவிர வேறொன்றும் எங்களால் செய்ய முடியாது' என்கிறார் அவர்.
ஆட்கடத்தல் - காணாமல் போதல்
சிவா தங்கியிருக்கும் முகாமில் மேலும் 400 குடும்பங்கள் உள்ளன. அம்முகாம் யாழ் புறநகர்ப் பகுதியில் அமைந்தள்ளது. அங்கு தற்காலிக கூடாரங்களே உள்ளன.
இவர்கள் கூரையாகப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கினால் ஆக்கப்பட்ட விரிப்புகளில் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய உதவி நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சில ஆடுகளும் நாய்களும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு நடுவில் உணவு தேடுகின்றன.
இங்கு நாங்கள் பத்மாவதியைச் சந்திக்கின்றோம். அவர் 22 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றார். 60 அகவையுடைய அப்பெண்ணிடம் எதிர்காலம் தொடர்பான எவ்வித நம்பிக்கைகளும் இல்லை.
'1989ஆம் ஆண்டு அரசாங்கம் எங்களை இங்கு தங்க வைத்தது. போர் முடிவுற்றபோது, எமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல எமக்கு அனுமதி வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அரசியல்வாதிகள் மத்தியில் அளவுக்கதிகமாக வெற்றுப் பேச்சு மட்டுமே உள்ளது' என அவர் கூறுகின்றார்.
முகாம்களில் வசிக்கின்ற பெரும்பாலான தமிழர்களுக்கு வேலை இல்லை. ஆனால் புற்கள்- பற்றைகள் அகற்றும் வேலைகள் உள்ளதால் அவர்களின் வாழ்க்கை ஒடுகிறது. முகாம்களில் சுகாதார வசதிகள் மிக மோசமாகவுள்ளதாக பத்மாவதி கூறுகிறார்.
அதேவேளை முகாம்களுக்குள் நடக்கும் மோசமான சம்பவங்களாக ஆட்கடத்தல்கள் இருப்பதை பத்மாவதி சுட்டிக்காட்டுகின்றார். இரவு வேளைகளில் வெள்ளை வான்கள் மூலம் இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் படையினரால் 8 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடத்தப்பட்ட இவர்களின் உடலங்கள் சில நாட்களின் பின்னர் கண்டெடுக்கப்பட்டன.
கொடும் சித்திரவதைகள்
போர் முடிவுற்றுள்ள நிலையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவிக்கின்றார். இலங்கையின் கிழக்கில் அமைந்துள்ள Kanda Kada முகாம் பற்றி அவர் தெரிவிக்கையில், அம்முகாமுக்குள் உதவி நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. படைத்தரப்பைத் தவிர வேறொருவரும் அதற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும், புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேக நபர்களுமே அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறவினர் ஒருவரைச் சந்திக்கச் சென்றபோது, முகாமுக்கு வெளியில் குறுகிய நேரம் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
'மின்சார அதிர்ச்சியூட்டல்' பெற்றோல் நிரப்பப்பட்ட பைகளுக்குள் தலையை அமுக்குதல் போன்ற சித்திரவதைகள் தொடர்பாக உறவினர்கள் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
'அரசாங்கம் சித்திரவதைகளை அங்கீகரித்துள்ளது. ஒருவரையும் இவ்வாறு கொடுமையாக நடத்தக்கூடாது. அவர்கள் மீது பயங்கரவாதிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்ற போதும் கூட.... என்கிறார் அவர்'
சிறிலங்கா படையில் 26 ஆண்டுகள் அதிகாரியாக இருந்தவர் நிசாந்த வாட்ன்கொடாபிதியா. யாழ்ப்பாணத்திலிருந்து குண்டும் குழியுமான பாதைகள் வழியாக நான்கு மணி நேரத்தில் சென்றடையக்கூடிய வவுனியாவில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் இலங்கை வரைபடத்தினை இந்த இராணுவ அதிகாரி காட்டுகின்றார். எவ்வாறு தமது படைகள் 2 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளைச் சுற்றிவளைத்து வீழ்த்தியது என்பதை பெருமையுடன் வரைபடத்தைக் காட்டி அவர் விளக்குகின்றார்.
இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த 13500 விடுதலைப் புலி உறுப்பினர்களில் இன்னும் 3000 பேர் 'புனர்வாழ்வு முகாம்களில்' உள்ளதாக அவர் கூறுகிறார். முகாம்களில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதான கூற்றுத் தொடர்பாக கேட்ட போது அவர், சிரித்தவாறு தனது தலையில் தட்டிக் கொள்கிறார்.
'நாங்கள் அவர்களுக்கு கல்வி வழங்குகின்றோம், வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்கிறோம். அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் அனுமதி வழங்குகின்றோம். நாங்கள் பொறுப்புணர்வு கொண்டவர்கள்' என வலியுறுத்துகிறார்.
உள ரீதியில் சுதந்திரமானவர்களாக இல்லை
யாழ்ப்பாணத்திற்கு சில கிலோ மீற்றர்களுக்கு அப்பால், புளுதி நிறைந்த பாதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேரூந்து 'நவோதயா பாடசாலை' முன்பாக நிறுத்தப்படுகின்றது. வெள்ளை-நீல பாடசாலைச் சீருடைகளுடன் பெண்களும் ஆண்களுமாக பேரூந்திலிருந்து இறங்கி, பாடசாலை வளாகத்திற்குள் ஓடுகின்றனர்.
குண்டுகள் துளைக்கப்பட்ட ஓட்டைகளும் வெடிப்புகளும் நிறைந்துள்ள தமது பாடசாலை எந்நேரமும் உடைந்து சரியலாம் என்ற அச்சமேதுமின்றி மாணவர்கள் பாடசாலைக்குள் நுளைகின்றனர்.
இப்பொழுது போர் முடிவுற்றுள்ள நிலையில் பாடசாலைக் கட்டட புனரமைப்புப் பணிகளுக்காக 4 மில்லியன் ரூபாய்கள் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.
'அந்த நிதித்தொகை போதாது. எல்லாமே பொறிந்து விழும் நிலையில் உள்ளன' என்கிறார் சிறிகணேஸ்.
போருக்கு முன்னர் கல்வியில் முன்னேறிய நிலையில் யாழ்ப்பாணம் இருந்தது. ஆனால் உள்நாட்டுப் போர் கல்வியையும் சமூகத்தின் ஏனைய துறைகளையும் கடுமையாகச் சீரழித்துவிட்டது.
போருக்குப் பின்னான நாளாந்த வாழ்க்கை பற்றி அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
இப்பொழுது போர் இல்லை. ஆனால் நாங்கள் உள ரீதியில் சுதந்திரமானவர்களாக இல்லை. எங்கள்; தொடர்பான அனைத்தையும் அரசாங்கமே தீர்மானிக்கின்றது. அவற்றில் ஒன்றாக, அதிகார பூர்வமற்ற முறையில் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு நாளும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைக் குறிப்பிடுகின்றார். வீதி ரோந்தில் ஈடுபடும் படையினர் இரவு 9 மணிக்கு மேல் வெளியில் நடமாடும் பொதுமக்களை இம்சைப்படுத்துகின்றனர்.
அரசாங்கத்திடமிருந்து பெரிய உதவிகள் இல்லை
சசிகுமாருக்கு அகவை ஐம்பது. முகாமில் தங்கியிருக்கும் ஏனையோரைப் போல, ஐ.நாவினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு மற்றும் வீதியமைப்பு போன்ற வேலைகளைக் கொண்டே சசிகுமார் தனது வாழ்க்கையை நடத்த வேண்டும். போரில் இவரது வீடு அழிக்கப்பட்டு உடமைகள் களவாடப்பட்டன. தற்பொழுது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கூடாரம் ஒன்றில் வசிக்கின்றார்.
'எமது சொந்த அரசாங்கத்திடமிருந்து எமக்கு நிதி உதவிகள் கிடைப்பதில்லை. அனைத்தும் உதவி நிறுவனங்களிடமிருந்து அல்லது இந்திய அரசாங்கத்திடமிருந்தே கிடைக்கின்றன' என்கிறார் சசிகுமார்.
விடுதலைப் புலிகளைப்பற்றி கதைத்த போது, ஒரு கணம் அவரது பார்வை தரையை நோக்கியபின், 20 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் புலிகள் தனது மகளைக் கூட்டிச் சென்றமை பற்றிக் கூறுகின்றார்.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆண் பிள்ளையை அல்லது பெண் பிள்ளையை விடுதலைப் போராட்டத்திற்காக கொடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக அவர்கள் விதித்திருந்தார்கள்.
ஆனால் பொது மக்களாகிய நாங்கள் அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடுவில் சிக்கியிருந்தோம். இப்பொழுது சமாதானம் வந்துள்ளது – ஆனால் எமக்கு என்ன கிடைத்துள்ளது எனக் கேட்கும் சசிகுமார், தனக்கும் தனது அயலவருக்கும் போருக்கு முன் சொந்தமாகவிருந்த வளம் செழித்த நிலங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
'நாங்கள் நெற்செய்கையில் ஈடுபட்டவர்கள். பெரிய தென்னந் தோப்புகள் எமக்கிருந்தன. ஆனால் பதுங்கு குழிகள் அமைப்பதற்காக விடுதலைப் புலிகள் பனைகளைத் தறித்தார்கள். வயல்களில் இப்பொழுதும் மிதிவெடிகள் புதைந்துள்ள என்று கூறும் அவர், வீதியின் மருங்கில் காணப்படும் கறுப்பு மண்டை ஓடு பொறிக்கப்பட்ட சிவப்பு அறிவுறுத்தல் பலகையை நோக்கித் தலையசைத்துக் காட்டுகிறார். அப்பிரதேசத்தில் மிதிவெடிகள் இன்னமும் அகற்றப்படவில்லை என்பதை அந்த அறிவித்தல் காட்டுகின்றது.
இலங்கைத் தீவின் வடக்கில் பணியாற்றும் பல உதவி நிறுவனங்களில் செஞ்சிலுவைச் சங்கமும் ஒன்று. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து பெறப்படும் நன்கொடைகள் மூலம் தமிழ் மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்த எவ்வாறான முயற்சிகளைத் தாம் மேற்கொள்வதாக செஞ்சிலுவைச் சங்கப் பேச்சாளர்களில் ஒருவரான Sugi Hullugalle விளக்குகின்றார்.
'நாங்கள் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குகின்றோம் என்கிறார் அவர்.
சிறிலங்கா அரசாங்கம் இப்பிரதேச மக்களுக்கு ஏதாவது செய்கின்றதா என்ற கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளிக்கின்றார்:
'அரசாங்கம் தமது மக்களுக்கு கழிப்பிட வசதிகளைக் கூட இன்னும் செய்யவில்லை'
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் அபாயம்
போர் முடிவடைந்துள்ள போதும் ஊடக – கருத்துச் சுதந்திர விடயங்களில் சிறிலங்கா இன்னும் நீண்ட பாதையைக் கடக்க வேண்டியுள்ளதாக நாட்டின் ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.
யாழ் உதயன் நாளேட்டின் தலைமை ஆசிரியர் எம்.வி.கானமயில்நாதன் அலுவலக வளாகத்தின் குண்டு துளைக்கப்பட்ட ஓட்டைகளையும், துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டு உடைபட்டுள்ள கணினிகளையும் காட்டுகின்றார்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் மே 2ஆம் நாள் ஒரு மாலை நேரம், ஆயுதம் தரித்த நபர்கள் பத்திரிகை வளாகத்திற்குள் அத்துமீறி நுளைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். கானமயில்நாதன் அச்சமயம் கொழும்பில் தங்கியிருந்ததால் உயிர் தப்பினார்.
'இரண்டு தரப்பும் முன்னர் என்னைக் கொல்ல முயற்சித்துள்ளனர். ஒரு முறை ஒரு ஜீப்பினால் என்னை மோத முயற்சித்தனர். பத்திரிகை வெளிவந்த கடந்த 25 ஆண்டுகளில் நாங்கள் 8 ஊடகப் பணியாளர்களை இழந்திருக்கிறோம்' என்கிறார் கானமயில்நாதன்.
போருக்குப் பின்னர் யாழ் நிலைமைகள் குறிப்பிடத்தக்க அமைதி அடைந்துள்ளதாகக் கூறுகின்றார். ஆனால் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் ஆழமாகச் சிந்தித்த பின்னரே, கட்டுரைகளை அச்சில் ஏற்ற வேண்டியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.
'அரசாங்கத் தரப்பிலிருந்து அழுத்தத்திற்கும், அதேவேளை அவர்களைப் பற்றி விமர்சித்து எழுதும் பட்சத்தில் நாம் கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்படுகின்றோம்'
இலங்கையில் எதிர்காலத்தில் கருத்துச் சுதந்திரம் வெல்லப்படுமா என்ற கேள்விக்கு, அவர் ஆழமான பெருமூச்சை பதிலாகத் தருகின்றார்.
'கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மனித உரிமை தொடர்பாக கருத்துரைத்த பாதிரியார் ஒருவரை படையினர் சுட்டனர். இதுதான் இன்றைய நிலை.'
அவர் இலங்கைத் தீவை 'முன்னைய சொர்க்கமாக' சித்தரிக்கின்றார். சமூக பொருளாதார சிக்கல்களோடும், நலிவுற்றுள்ள கல்வித்துறையுடனுமுள்ள ஒரு நாடாவே தற்போதைய இலங்கை உள்ளதாக அவர் கருதுகின்றார்.
'30 ஆண்டு கால முரண்பாடுகளிலிருந்து நாம் எதையுமே வெற்றி காணவில்லை. போர் முடிவடைந்து விட்டது. ஆனால் அவலங்கள் தொடர்கின்றன'
தமிழில்: ரூபன் சிவராஜா
nanry Pongutamil iniyam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக