சனி, 30 ஏப்ரல், 2011

ஐ.நா நிபுணர்குழு அறிக்கை: சிறிலங்காவினது அதிகாரிகள் 'கைதுசெய்யப்படமுடியும்'

சிறிலங்கா தொடர்பான ஐ.நா வல்லுநர்கள் குழுவினது அறிக்கையின் விளைவாக சிறிலங்காவினது அலுவலர்கள் கைதுசெய்யப்படமுடியும் என சட்ட வல்லுநர் ஒருவர் கூறுகிறார்.

ஐ.நா அறிக்கையின் விளைவாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் சிறிலங்காவினது அதிகாரிகள் கைதுசெய்யப்படவேண்டும் எனக்கோரி அவர்களுக்கு எதிரான பிடியாணையினைப் பெறும் முனைப்புக்களில் தொடர்புடைய தரப்புக்கள் ஈடுபடலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ச கூறுகிறார்.

ஐ.நாவினது அறிக்கை வெளிவந்த பின்னர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் சிறிலங்காவினது தலைவர்களுக்கு எதிரான அந்தந்த நாடுகளில் சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் என அனைத்துலக மன்னிப்புச்சபை கூறியிருக்கிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் குறித்த சில அமைச்சர்கள் அமெரிக்ககக் குடியுரிமையினைக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"ஆம், பிற நாடுகளில் குடியுரிமையினைப் பெற்ற இந்தத் தலைவர்கள் அந்தந்த நாடுகளில் வைத்துக் கைதுசெய்யப்படலாம். ஆனால் அந்தந்த நாடுகளிலுள்ள இராசதந்திர செயன்முறைகளே இதனைத் தீர்மானிக்கும்" என மகிந்தவின் நிர்வாகத்தில் குறுகிய காலம் அமைச்சராக இருந்தவரும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ச கூறுகிறார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையினால் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டமையானது சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் வாதிடுகிறார்.

"இது சட்டத்திற்கு முரணானதாக இருந்தபோதும், வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினை ஐ.நா செயலாளர் நாயகமே வெளியிடும் அளவிற்கு இந்த வல்லுநர்கள் குழு அதிகாரத்தினைக் கொண்டிருக்கிறது" என்கிறார் விஜயதாச ராஜபக்ச.

சிறிலங்காவிற்கு எதிராக மேலதிக நடவடிக்கைகள் எதனையும் எடுக்கும் அதிகாரம் எதுவும் தன்னிடமில்லை என்பதை செயலாளர் நாயகமே ஏற்றுக்கொண்டிருப்பதை விஜயதாச நினைவுபடுத்துகிறார்.

"றோம் சட்டத்தில் சிறிலங்காவும் ஒரு தரப்பாக இல்லை என்பதால் சிறிலங்காவிற்கு எதிரான விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது" என ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தப் நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இவர்களில் அதிகம்பேர் சிறிலங்கா அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் விளைவாகவே பலியானதாகவும் ஐ.நா வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கை கூறுகிறது.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான நம்பத்தகு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில் அனைத்துலக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது என வல்லுநர்கள் குழு விரும்புகிறது.

சிறிலங்காவிற்கு எதிரான நடவடிக்கையினைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டுமெனில் பாதுகாப்பு சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என இந்தப் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்ச கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: