25 நாட்களுக்கும் மேலாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதால், அவரது இதய செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது. சமீபத்தில் அவரது கல்வீரல் செயல் இழந்தது. இதனால் சாய்பாபா உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கின்ற போதிலும் அவரது உடல் உறுப்புகள் மாற்று மருத்துவ ஏற்பாடுகளுக்கு ஒத்து ழைக்கவில்லை.
கல்லீரலை தொடர்ந்து சிறுநீரகத்தின் செயல்பாடும் செயல் இழந்த படி உள்ளது. இதனால் டாக்டர்கள் நேற்று மிகவும் கவலை அடைந்தனர். சாய்பாபா உடல் நிலை குறித்து தகவல் பரவியதால் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் புட்டபர்த்தியில் திரண்டுள்ளனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சாய் பாபாவின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. அவரது அனைத்து உடல் உறுப்புக்களும் இன்று மிக, மிக குறைந்த அளவுக்கே சிகிச்சைக்கு ஒத்துழைத்தன. இதையடுத்து இன்று காலை சத்யசாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் இருந்து சாய்பாபா உடல்நிலை குறித்து சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சாய்பாபா உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவரது ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்தபடி உள்ளது. இதயத் துடிப்பும் குறைந்து வருகிறது. இதனால் இதயத்தின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த மருத்துவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் சாய்பாபாவுக்கு கோவில் உள்ளது. சிறிய குக்கிராமங்களில் கூட அவருக்கு கோவில் உண்டு. சாய்பாபா உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்ததும் பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். கோவில்கள் முன் அமர்ந்து இடைவிடாது பஜனை செய்து சாய்பாபா உடல் நலம் பெறுவதற்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் முழுவதும் இருந்து சாரை சாரையாக சேவாதள தொண்டர்கள் புட்டபர்த்தி வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. சாய்பாபாவுக்கு என்னமோ நேர்ந்து விட்டது. டிரஸ்ட் நிர்வாகிகள் மறைக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டனர். சாதாரண கிராமமாக இருந்த புட்டபர்த்தி, சகல வசதிகளுடன் வெளிநாட்டு நகரம் போல் மாறி இருக்கிறது. பெரும் புகழ் அடைந்துள்ளது. இது சாய்பாபாவால் தான் முடிந்தது. எனவே அவரை இழக்க மாட்டோம் என்று கண்ணீர் விட்டனர்.
கிராமங்களில் உள்ள கோவில்களில் சாய்பாபா வின் போதனைகளை ஒலிபரப்பிய வண்ணம் இருந்தனர். நீங்கள் செய்யும் பூஜை தான் என்னை காப்பாற்றும் என்று முன்பு ஒரு முறை சாய்பாபா பேசினார். அந்தப் பேச்சை திரும்ப திரும்ப ஒலிபரப்பு செய்கிறார்கள். சாய்பாபா பற்றி அவ்வப் போது வதந்தி பரவுவதால் அவரது பக்தர்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.
சத்ய சாய் அறக்கட்டளைக்கு ரூ.2 1/2 லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளது. இதை அபகரிப்பதற்காக டிரஸ்ட் நிர்வாகிகள் அவரை அடைத்து வைத்து இருப்பதாகவும், ஆசிரமத்துக்கு சொந்தமான தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டதாகவும் உள்ளூர் தொலைக் காட்சிகளில் செய்தி ஒளிபரப்பானது. இதைக் கேட்டு டிரஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம் அடைந்தனர்.
இது தொடர்பாக 2 பக்க விளக்க அறிக்கை வெளியிட்டனர். டிரஸ்ட் சொத்துக்கள் நல்லபடியாக உள்ளது. எந்த தவறும் நடக்கவில்லை சாய்பாபா நலம் பெற்று வருவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். டிரஸ்ட்டுக்கு காணிக்கையாக பணம் மற்றும் செக் மட்டுமே பெறப்படுகிறது. பொருட்கள் எதுவும் வாங்குவதில்லை என்று விளக்க அறிக்கையில் கூறி உள்ளனர்.
சாய்பாபா பற்றி தவறான வதந்தி பரவுவதால் டிரஸ்ட் நிர்வாகிகள் சாய்பாபா உடல் நிலை பற்றி அவ்வப் போது தகவல் வெளியிட வேண்டும், அமைதியாக இருக்க வேண்டாம் என்று ஆந்திர அரசு உத்தரவிட்டு உள்ளது. சாய்பாபாவுக்கு தற்போது 85 வயது ஆகிறது. அவர் 96 வயது வரை உயிருடன் இருப்பார் என்று சாய்பக்தர்கள் சபை அறிவித்து உள்ளது.
சாய்பக்தர்கள் சபையில் முன்னாள் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கூறுகையில், சாய்பாபா உடல் நலம் தற்போது குன்றினாலும் பக்தர்களின் பிரார்த்தனையால் அவர் நலம் பெறுவார். 96 வயது வரை உயிரோடு இருப்பார் என்று தெரிவித்தார். சாய்பாபா தனிப்பட்ட மனிதர் அல்ல. கடவுளின் பிறப்பு என்றும் ஆந்திர மாநில முன்னாள் போலீஸ் அதிகாரி பிரபாகர்ராவ் வர்ணித்தார்.
சாய்பாபா இறந்து 20 நாள் ஆகி விட்டது என்று டி.வி.யில் செய்தி ஒளிபரப்பியதற்கும் கண்டம் தெரிவித்தார். ஆந்திர ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஈஸ்வர பிரசாத் கூறுகையில், தான் சிறு வயதில் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட போது டாக்டர்கள் கைவிட்ட நிலையில் சாய்பாபா தான் தன்னை குணப்படுத்தினார். அவர் என்னை எப்போதும் காப்பாற்றி வந்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆந்திர மாநில வேளாண் விஞ்ஞானியும், வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.வி.ராவ் கூறுகையில், சாய்பாபா உடல் நலம் பெற்று பூரண குணம் அடைவார். அவர் 96 வயது வரை உயிருடன் இருப்பார். சாய்பாபாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் அறிவியல் பூர்வமானது. அவரது சக்தி அற்புதமானது. அவரது சமூக சேவை என்னை கவர்ந்தது என்றார்.
ஆந்திராவின் பிரபல மருத்துவ நிபுணர் மல்லா ரெட்டி கூறுகையில், சாய்பாபாவின் உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் எந்திரங்கள் உதவியுடன் அவர் உயிருடன் இருக்கிறார். இதேபோல் வென்டிலேட்டர் உதவியுடன் பல நோயாளிகள் 25 ஆண்டுகள் வரை உயிருடன் இருந்து இருக்கிறார்கள் என்றார்.சாய்பாபா உடல் நிலையை கவனிக்கும் டாக்டர் அனில் குமார் கூறும்போது, சாய்பாபா கோமா நிலையில் இல்லை. அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன. அவருக்கு உறுப்புகளை தானம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் அவற்றை பொருத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றார்.
1 கருத்து:
என்ன செய்ய மரணம் எல்லோருக்கும் பொதுதானே...
கருத்துரையிடுக