சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடந்த 23ம் திகதி திடீரென கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
வெளிநாடு ஒன்றுக்கு அவர் சென்றுள்ள போதும் அவர் எங்கு சென்றார் என்பது பற்றிய குழப்பமான தகவல்கள் வெளியாகின்றன.
முன்னதாக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவலில் அவர் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்றிருப்பதாக கூறியிருந்தது.
ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என்றும் அமெரிக்காவில் தான் தங்கியிருப்பதாகவும் மற்றொரு இணைய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியுள்ளதாகவும், மகனின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துப் பேசுவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது.
ஐ.நாவின் அறிக்கையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இநதப் போரில் முக்கிய பங்கு வகித்த கோத்தாபய ராஜபக்ச முக்கிய போர்க்குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
தன் மீதான நெருக்கடிகள் வலுவடைவதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவே அவர் திடீரென வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அவர் உஸ்பெகிஸ்தானில் தான் தங்கியுள்ளாரா அல்லது அமெரிக்காவில் தான் தங்கியுள்ளரா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது.
கோத்தாபய ராஜபக்ச அமெரிக்கா சென்றிருந்தால், எதற்காக அந்தத் தகவலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மறைக்க முற்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக