மு.புஷ்பராஜன்
தமிழ் இனம் சார்ந்தும் அதன் அரசியல் போராட்டம் சார்ந்தும் சிங்கள அரசு, இந்திய அரசு, ஏனைய வல்லாதிக்க சர்வதேச நாடுகள் மேற்கொண்ட அநீதியான நிலைப்பாடும், அதைச் சரியென நம்பவைக்க அவர்கள் தமது ஊடகங்கள் மூலம் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அவர்களது அதிகார ஆணவக் கருத்துக்களும் அவர்கள் தம்மைச் சுற்றிக் கட்டமைக்க முனைந்த புனிதப் பிம்பங்களும் ஒளி வட்டங்களும் சினத்தையும், ஆற்றாமையும் வெப்புசாரத்தையும் ஏற்படுத்துகின்றது. இந்த வெப்புசாரத்தின் நீட்சியேதான் பலவீனமான நாடுகளின்மீது, அநீதமான முறையில் ஆக்கிரமிப்புச் செய்யும் வல்லாதிக்க நாடுகளின்மீதும் பரவியிருக்கிறது.
தேசிய இனப் போராட்டங்கள், அந்த மண்ணின் அரசியல், கலாசார முரண்பாடுகள், சுய கௌரவங்கள், பொது நீதி என்பவைகளுக்கு அப்பால், அம்மண்ணின் மூலவளங்களைச் சுரண்டும் ஆவல்கொண்ட, வல்லாதிக்க நாடுகளின் நலன் அடிப்படையிலேயே நோக்கப்படுகிறது. தீர்வு காணப்படுகிறது. இந்த வல்லாதிக்க நலன்களுக்காக, வகைதொகையின்றிக் காவுகொள்ளப்படும் மனித உயிர்கள் பற்றி இவர்கள் கவலைப்படுவதேயில்லை. ஆனால் 'காவல் சம்மனசுகளாக' தம்மைப் படங்காட்டிக்கொள்ள மட்டும் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை.
இறைவன் உலகைக் காக்க அமெரிக்காவையே தேர்ந்தெடுத்தான் என்ற விதமாக, அமெரிக்க அரசியல் சக்திகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. முன்னர் அணுக்குண்டு வீசி, யப்பானின் இருபெரும் நகரங்களையும் இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்தவர்கள் இவர்கள்தான். நிக்கரகுவாவை நிர்மூலமாக்கி, 10.000க்கு மேற்பட்ட மக்களையும் கொன்றார்கள். இதனால் உலக நீதிமன்றத்தினால் Unlawful use of force எனவும் கண்டிக்கப்பட்டார்கள். சிலியில், பினேசே மூலம் மனிதப் பேரவலத்தையும் நிகழ்த்தினார்கள். இன்று அகண்ட இல்லாமிய கோட்பாட்டின் அச்சத்தால், அரபு நாடுகளை இஸ்ரவேல் மூலம் அழித்தும் வருபவர்கள். ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை அழித்த பின்பும்கூட- சதாம் ஹூசேனால் கொல்லப்பட்ட மக்களைவிட அமெரிக்க கூட்டுப்படைகளால் கொல்லப்பட்ட ஈராக்கிய மக்கள் அதிகம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இருந்துமென்ன? அமெரிக்கா, தானே உலகின் காக்கும் கரங்கள் என்கின்றது.
உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்ற போர்வையை, இந்தியா தன் தோள்மீது சௌகரியமாகப் போர்த்தியுள்ளது. இந்தியாவின் முன்னோர்கள் உலகிற்கு அளித்த வேத உபநிடதங்கள், புராண இதிகாசங்கள் அந்த மண்ணில் அவதரித்த மகத்தான மகான்கள் என யாவும் சேர்ந்து, உருவாக்கிய ஒளிவட்டத்தை, இந்தியா தன் தலையின் பின்னால் சுழல வைத்துள்ளது.
இன்று இந்தியா உலகின் புதிய அமெரிக்காவாக மாறிவருகிறது. அது தமிழீழத்தில் நிகழ்த்திய, காஸ்மீரில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் கோரத் தாண்டவம், அண்டை நாடுகளை தனது வலைப்பின்னலுக்குள் கொண்டுவர அது எடுக்கும் நடவடிக்கைகளும் ஐ.நா.சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட, மனித உரிமை மீறல் வாக்கெடுப்பினை முன்னெடுக்க விடாது, பின்னணியில் இயங்கியமை, அந்நிய முதலீடுகளுக்காக தனது சொந்த மக்கள்மீது அது நிகழ்த்தும் யுத்த சன்னதம், அதிகம் ஏன்? தனது இந்திய தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக, சிந்து வெளியின் திராவிட நாகரீகத்தின் தொன்மையை மறுத்து, ஆரிய நாகரீகத்தை முன்னிறுத்தும் வரலாற்று மோசடியிலும் ஈடுபட்டது. இன்னும் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்திருக்கும் பல தகவல்கள், இந்தியாவுக்கு, அது உரிமைகோரும் சனநாயக பட்டங்களும் பதக்கங்களும் பட்டாடைகளும் இனியும் பொருத்தமாக இருக்காது.
ஈராக்கின் மீதான யுத்தம், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஜோர்ஜ் புஸ், டிக் செனி, கொண்டலீசா ரைஸ் ஆகியோர் உலகின் பெரிய எண்ணெய் கொம்பனிகளின் ’எக்ஸிக்கூட்டிவாக’ இருந்தவர்கள்தான். ஈராக், எண்ணெய் வளமற்ற நாடாக இருந்திருக்குமானால் அமெரிக்கா, ஈராக்கைத் திரும்பியும் பார்த்திருக்காது.
இந்தியாவும் தனது சிறகினுள் வைத்து ஆயுதம், பயிற்சி, பணம் ஆகியவைகள் மூலம் தான் வளர்த்த ஈழத்து இயக்கங்களில் தனக்கு இசைவாக இயங்க மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கவும் தீர்மானித்தது. 1987ல் சமாதானப் படையாக வானிருந்து இறங்கிவந்து, ஆக்கிரமிப்புப் படையாக தமிழீழ மண்ணில் எழுந்த, இந்தியப் படைகளின் நடவடிக்கைகள் குறிப்பாக ஆயுத ஒப்படைப்பிற்குப் பின்னரான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளின் நெருக்கடிகளை முன்னுணர்த்தியது. ரஜீவ் காந்தியின் கொலை இந்திய அரசின் நோக்கை மிக விரைவில் சாத்தியமாக்க உதவியது. தமிழீழத்தின் அழிவையும் அதன்மூலம் நியாயப்படுத்திக் கொண்டது. இப்போது சீனாவின் வல்லாதிக்கப் பின்னணியில் இரு நாடுகளினால் இன்னும் எத்தனை நாடுகள் நாசமாகப் போகப்போகிறதோ!
ஈராக் மீதான அமெரிக்க, பிரிட்டன் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பின்போது எண்ணெய் வயல்களே அவர்களின் அர்ச்சுனன் கண்ணுக்குத் தெரிந்தது. வேறெதுவுமில்லை. கொத்துக் கொத்தாய் மடியப்போகும் ஈராக்கிய மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இருக்கவில்லை. அதனால்தான் போருக்குப் பின்னரான ஈராக்குக்குரிய அரசியல் திட்டம், அந்த மக்கள் சார்ந்த அக்கறை எதுவும் இருக்கவில்லை. உடனடியாக ஒரு பொம்மை அரசை நிறுவியதும் ஒரு உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கியதும்தான் அவர்கள் செய்த வேலை. மக்கள் இன்று எங்கும் கொல்லப்படும் நிலமை தோன்றியுள்ளது. ஆனால் அமெரிக்க, பிரித்தானிய அதிகாரிகள் 'சதாம் இல்லாத உலகு அமைதியானது. ஈராக்கிய மக்களுக்கும்கூடத்தான்' என்ற விதமாக கூறுகிறார்கள்.
உலகம் அமைதியாக இருக்கிறதோ இல்லையோ அவர்கள் அமைதியாக வாசிங்ரனிலும் லண்டனிலும் இருக்கிறார்கள். ஈராக்கிய மக்கள்தான் மடிந்துகொண்டிருக்கிறார்கள். இதேபோன்று விடுதலைப் புலிகளின் அழிவுக்கான யுத்தத்தில் ஆயுதங்கள், ஆலோசனை வழங்கிய ஒளிவட்ட நாடுகள், புலிகளின் அழிவிற்குப் பின்னரான தமிழீழப் பகுதிகளில் மக்கள் நிலை, அவர்கள் வாழ்வு, அரசியற் கோரிக்கைகள் எதுவும் முன்கூட்டிய திட்ட வரையறைகளைக் கொண்டிருக்கவில்லை. அவர்களின் முன்கூட்டிய வரையறையின்படியே இந்திய, சீன முதலீடுகள், தமிழ்மண் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தடையின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்வை இழந்து அழிந்து போனவர்கள் தமிழீழ மக்கள்தான். பொருளாதார வளங்கள் உள்ள நாடுகள் என்றால் அவர்களுக்கு உயிர். அவ் வளங்களை அபகரிக்கையில் இழக்கப்படும் உயிர்களெல்லாம் அவர்களுக்கு மயிர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசுகள் சேர்ந்து ஏற்படுத்தி வைத்துள்ள ஸ்தாபனங்கள், ஒன்றியங்கள், சபைகள் யாவும் நாம் அறிந்து வைத்துள்ள அறநெறி சார்ந்து, நீதிக்காக இயங்குபவை அல்ல. அதன் அங்கத்தவர்கள் தத்தமது நாடுகளின் நலன்களின் அடிப்படையிலேயே இயங்குவதால் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதமாக மாற்றி மாற்றி கருத்துச் சொல்லும் கனவான்களாய் இருப்பார்கள். இருக்கிறார்கள். 'மின்னல் ஒளிகொண்டு அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகளை' கைவசம் வைத்துக்கொண்டு இருப்பார்கள். இந்த மகா உத்தமர்கள் தங்கள் நலன்களிற்கு எதிராக இயங்குபவர்களை 'போட்டுத்தள்ள' கண்டுபிடித்த வார்த்தைதான் 'பயங்கரவாதம்'. அரசுகள் தங்கள் ஆட்சியில் எல்லாப் பயங்கரவாதச் செயல்களை செய்வார்கள். முடிந்தால் நாடுகடந்தும் நிகழ்த்துவார்கள். இவர்கள் தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க வைத்திருக்கும் வார்த்தைகள் 'இறைமையைக் காக்கும் நடவடிக்கை', 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்', 'மனிதாபிமான நடவடிக்கை', 'பூமாலை' இப்படிப் பல.
இந்த அரசுகள், ஒன்றியங்கள், சபைகள் ஆகியவற்றின் ஊடகங்களின் திருப்பணி இவர்களின் போட்டுத்தள்ளும் செயலை தயக்கமின்றி நியாயப்படுத்துவதுதான். இவர்களின் இராஜதந்திரம் என்பது கிராம வழக்கின் போக்கிலித்தனம்தான். கிராமங்களிலும் நகரங்களிலும் அயலவன் ஒருவன், வேறு வீடு நுழைந்து கொள்ளை, கொலைகளில் ஈடுபடுவதுபோன்றுதான் இந்த வல்லாதிக்க நாடுகள் வளமுள்ள நாடுகளைக் கொள்ளையடிக்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் மடித்துக்கட்டிய வேட்டியுடன் செய்வதையே இக் கனவான்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் உட்கார்ந்து, கோட்டும் ரையுமாக, 'தஸ்புஸ்’ இங்கிலீசுமாய் செயற்படுத்துகிறார்கள். ஆனால் முன்வைக்கும் வார்த்தைகள் எல்லாம் மின்னல் ஒளி கொண்டவைதான்.
லிபிய அதிபர் கேணல் கடாபியின் மாளிகையைச் சுற்றி நின்றபோதும் போர் விமானங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள்மீது குண்டுகளை வீசியபோது அமெரிக்காவும் ஐ.நா.சபையும் 'ஆயுதங்கள் இன்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்கள்மீது விமானத் தாக்குதல் நிகழ்த்துவது போர்க்குற்றமாகும்' என்ற கருத்தை வெளியிட்டார்கள். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசு இதைத்தானே செய்தது என நீங்கள் யாராவது கேட்டால் அவர்களுக்கு காது கேட்கவே கேட்காது. முடிந்தால் பதில் அளிக்காமல் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டிருப்பார்கள். அது உங்கள் நாட்டில் எண்ணெய் வயல்கள் உண்டா? என்பதுதான் அக்கேள்வியாகும்.
சிங்கள அரசு, முழு இலங்கையையும் தனக்குரிய நாடாகவே கருதுகிறது. ஆதனால் தமிழருக்கான அரசியல் உரிமை எதனையும் இயல்பாக கொடுக்க முன்வரப்போவதில்லை. அப்படி கொடுக்கும் என நம்பினால் அவர்கள் இலகுவில் ஏமாறக்கூடியவர்களாகவே இருப்பார்கள். மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் கொடுப்பது பற்றிய ஐனாதிபதியின் ஒரு பொன்மொழி இது - 'மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் இருந்தால் தென்பகுதி அரசியல்வாதிகள் யாரும் வடக்கிற்குச் செல்லமுடியாது', இந்த இலட்சணத்தில் நாங்கள் எல்லாம் சகோதரங்கள், இலங்கை மாதாவின் புதல்வர்கள். மேற்கு நாடுகளின் அதே மின்னல் ஒளி கொண்ட வார்த்தைகள்தான் இவையும்.
இனவாதத்தால் இறுகிப்போன இலங்கை அரசை, மிகக் கடுமையான அரசியல், இராணுவ அழுத்தங்களாலேயே வனைவுக்குள் கொண்டுவர முடியும். அது சுயமாகத் தமிழர்களுக்கு எதாவது நன்மை செய்ய, அரசியல் உரிமையை பேருக்கு கொடுக்க முன்வருவதாக இருந்தால், அது தன்மீது வரும் கடுமையான அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க விரும்புகிறது, அல்லது அதன் அதிக பலன்கள் சிங்கள மக்களை நோக்கி திருப்பிவிடப்படவிருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். அப்படி ஏதாவது கொடுத்தாலும், சப்பி சூப்பி எறியும் நிலையில் இருக்கும் மாங்கொட்டையை, முழு மாம்பழம் என்று தரும். உலக அதிகார ஒழுங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த so-called இராஜதந்திரத்தை சிங்கள அரசுகள் மிகத் திறமையாகவே கையாண்டு வருகிறார்கள்.
சுதந்திரம் பெற்ற இந்த 60க்கு மேற்பட்ட ஆண்டுகளில், இந்தியா போன்றதொரு வல்லாதிக்க நாட்டுக்கு அருகில், ஒரு கச்சான் கொட்டை நாடு, தனித்து உயிர்வாழ்கின்றதென்றால் அது அவர்கள் சொல்லுகின்ற அந்த இராஜதந்திரத்தால்தான் எனக் கூறிய எனது நண்பர் ஒருவரின் கூற்றை இங்கு நினைவு கூருகிறேன். உண்மையில் இந்தியா அதன் இராஜதந்திரத்திற்கு முன்னால் மண்டிபோட்டு உட்காரவேண்டும். இன்று போர்க்குற்றம் சார்ந்து ஐ.நா.சபையைச் சுற்றி, ஒரு எதிர்ப்பு வளையத்தையே உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் குழந்தைக்கு நிலாக்காட்டி 'ஆக்காட்டு ஆக்காட்டு' என்பதுபோல், தமிழர்களது நியாயமான உரிமையை இலங்கை கொடுக்கவேண்டும் என இந்தியாவும் ஏனைய நாடுகளும் கெஞ்சவேண்டிய நிலைக்கு வந்தள்ளது. இது 'உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே' யாக முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இலங்கை அரசு தனது 'பெப்பேயை', உலக அரங்கில் முன்வைக்கத் தொடங்கி விட்டது. இஸ்ரவேல் பலஸ்தீனிய பிரச்சனைக்கு கடந்த ஆண்டு சிறிலங்கா தூதரகத்தினால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அனைவரும் ஏற்றுக்கொள்வதைப்போல் இரண்டு தேசங்கள் என்ற யதார்த்தத்தினை ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் கொண்டுவரப்படும் தீர்வு யோசனைதான் பலஸ்தீனப் பிரச்சனைக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வினைத் தரும். இவ்வாறான ஒரு தீர்வு பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரவேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதோடு சுதந்திரமான இறையாண்மைமிக்க நீடித்து நிலைக்கக்கூடிய பலஸ்தீன தாயகம் அமைவதற்கும் வழி செய்யும். தவிரவும் பலஸ்தீன மக்கள் தமக்குரிய உரிமைகளை மீளவும் பெற்றுக்கொள்வார்கள் என்ற அரிய சிந்தனை அதில் பொதிந்திருந்தது. மிகச் சமீபகால இன்னொரு உதாரணம் லிபியாவில் அமெரிக்காவின் தலைமையிலான கூட்டுப்படைகளின் தாக்குதல் ஆரம்பமானவுடன் இந்தத் தாக்குதல்களின்போது பொதுமக்களது இழப்புக் குறித்து கவனம் கொள்ளவேண்டுமென கருணைமிக்க கருத்தொன்றை அந்த அரசு வெளியிட்டது. இதைவிட உலகின் தலையில் மிளகாய் அரைக்க வேறென்ன வேண்டும்?
இங்கு ஒருசில நியாயத்தின் பாற்பட்ட அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்களைத் தவிர ஏனையவர்கள் நிலமை - உலக அளவிலும் உள்நாட்டளவிலும் அரசியல்வாதிகளின் மனோநிலையில்தான் இயங்குகின்றார்கள். சோவியத் யூனியனது உடைவு, நீண்டகாலமாக ஆபிரிக்காவில் தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தின் முடிவு, பேர்லின் சுவர் தகர்ப்பு, அயர்லாந்தின் சமாதான உடன்பாடு ஆகியவைகளைச் சுட்டிக்காட்டி, உலகம் அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் முன்செல்லும் என எதிர்வு கூறினார்கள். ஆனால் அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னால் அமெரிக்கா முன்வைத்த புதிய உலக ஒழுங்கை விளக்கியும் நியாயப்படுத்தியும் தம் ஆய்வுகளை முன்வைக்கத் தொடங்கினார்கள்.
இதே போன்றுதான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னர் புலிகளின் இராணுவ வெற்றிகளையும் அவர்களது, சிங்கள அரசிற்கு இணையான தமிழீழ அரசையும் தமது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விதந்துரைத்துக் கொண்டிருந்தார்கள். இறுதி யுத்த நடவடிக்கையின்போது, பூநகரி இராணுவத்தின் கைகளில் வீழும்வரை, பிரபாகரனின் ஒப்பற்ற இராணுவ தந்திரங்களையும், சிங்கள இராணுவத்தின் அறியாமை பற்றியும், அது இறுதியில் பயங்கரமாக எதிர்கொள்ளப்போகும் தோல்வியையும் எதிர்வு கூறினார்கள். முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்டதன் பின்னர், இவர்கள் ஆராய்ச்சிகளின் முடிவுகள் வேறுவிதமாக வெளிப்பட்டது. விடுதலைப் புலிகளின் அரசுக்குரிய கட்டுமானங்கள், இராணுவம் மரபுப் படையணியாக மாற்றம் பெற்றமை, இராணுவத் தந்திரோபாயமற்ற தவறு, பிரபாகரனுக்கு இராணுவத் தந்திரோபாய திறமையே இல்லை என்ற அரிய உண்மைகளையும் கண்டறிந்தார்கள். ஆனால் மேலைநாட்டு இராணுவ ஆய்வாளர்கள் பிரபாகரனது இராணுவத் திறமையை இன்றுவரை குறைத்து மதிப்பிட்டதில்லை. ஆனால் நமது தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் அவர்களிலும் திறமைசாலிகளாயிருக்கிறார்களே. முன்பு எல்லாம் தெரிந்த இராணுவ மேதை, இன்று ஒன்றும் தெரியாதவராக உருமாற்றப்பட்டுள்ளாரே!
இன்று பல பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகளின் எடுபிடிகளாய் மாறியதுதான் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இதற்கு நிகராக பல இலக்கியவாதிகளும் அரசியல் நிலைசார்ந்து புதிய வழிபாட்டுத் தலைவர்களைத் தேர்ந்து கொண்டுவிட்டார்கள். எல்லாப் பலனும் அதிகாரம் படைத்தவர்க்கே. பணக் கொடுப்பனவுகளும் அரசியல் ஆதாயங்களும் பொதுசன தொடர்புச் சாதனங்கள் வெளிப்படுத்தும் கருத்துகளுக்குப் பின்னால் வலுவாக இயங்குகின்றது. அதிகாரம் வாய்ந்த அரசியல்வாதிகள், தம் காலில் விழும் பக்தர்களுக்காக, வழிபாட்டிற்குரிய தெய்வங்களின் இடத்திற்கு மாறிப்போக, சாதாரண அரசியல்வாதிகள், கொள்ளைகளாலும் கப்பம் கோருதலாலும் தங்கள் இராஜரீக அதிகாரங்களை நிலைநிறுத்த, ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளின் இடத்தை நிரப்புபவர்களாக முண்டியடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குள் நாம் அறிந்த அறநெறிகள் நீதிகள் புதைபொருள் ஆராச்சியாளர்களது பணிக்கு விடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக