அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஆதாரங்களும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் உள்ளன. எனவே எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எதையுமே முன்னாடுக்காது இருந்தவாறு, அனைத்துலக சட்டங்களிலும் நியமங்களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது என்ன நியாயமென கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவிற்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ்.
நேர்த்தியாக எழுதப்பட்ட, மிகத் தெளிவான, தீர்மானமான அறிக்கையினை நிபுணர்கள் குழு உருவாக்கியுள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால், ஒரு அனைத்துலக விசாரணையை முன்னெடுப்பதற்கு ஏதுவான முழுமையான நம்பகத் தன்மை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என நோர்வேயின் Aftenposten நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே கோர்டன் வைஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் அவைக்கு இல்லையெனில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நேரடியாக அதற்கான முனைப்பினை மேற்காள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக Aftenposten நாளிதழில் நேற்று (28.04.2011) வெளிவந்துள்ள கட்டுரையின் முழு வடிவத்தினை இங்கே தருகின்றோம்:
சிறிலங்கா அரசாங்கம் போர்க் குற்றங்கள் புரிந்திருப்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை என்கிறார்; சிறிலங்காவிற்கான முன்னாள் ஐ.நா பேச்சாளர் கோர்டன் வைஸ். அண்மைய ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் முடிவுகளும் அவரது கூற்றினை உறுதிப்படுத்துகின்றன.
2009 இன் இறுதி மாதங்களில் போர்க் களத்தில் நடந்தேறியவை தொடர்பான நம்பகமான தகவல்களை ஐ.நா நிபுணர் குழு அறிக்கை கொண்டிருப்பதாக இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற காலம் வரை சிறிலங்காவிற்கான ஐ.நா பேச்சாளராக கடமையாற்றிய கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
பத்து மாதங்களாக ஆவணங்கள் பெறப்பட்டும், சாட்சிகளுடனான நேர்காணல்கள் மூலமாகவும் பெறப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூன்று சுயாதீனமான நீதித்துறை நிபுணர்களினால் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது
சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரான கடுமையான குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் பெருமளவு குற்றச்சாட்டுகள் வெற்றி பெற்ற தரப்பான அரசாங்கத் தரப்பை நோக்கியே முன்வைக்கப்பட்டுள்ளன.
இறுதிக்கட்டப் போரில் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களினாலேயே பெருமெண்ணிக்கையிலான பொது மக்கள் கொல்லப்பட்டனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
330 000 வரையான ஏழைத் தமிழர்கள் வட பிரதேசத்தின் குறுகிய நிலப்பரப்பு ஒன்றுக்குள் ஒதுங்கியிருக்க, அரசாங்கப் படைகள் அவர்கள் மீது கனரக ஆட்லறிகள் மூலம் தாக்குதல்களை நடாத்தியது. அத்தோடு தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் உணவு விநியோகப் பாதைகள் மீதும் அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடாத்தியுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கப் படைகள் பொதுமக்களையும் விடுதலைப் புலிப் போராளிகளையும் படுகொலை செய்துள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ள சிறிலங்கா அரசாங்கம் அதனைக் கண்டித்தும் உள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைமை மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. போர்ப் பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற விடாது புலிகள் தடுத்துள்ளனர். வெளியேற முயற்சித்த மக்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேர்த்தியாக எழுதப்பட்ட, மிகத் தெளிவான, தீர்மானமான அறிக்கையினை நிபுணர்கள் குழு உருவாக்கியுள்ளது. இறுதிக் கட்டப் போரில் நடந்தேறியவை தொடர்பாக நான் எவ்வாறான தீர்மானத்தைக் கொண்டிருந்தேனோ, அதே தீர்மானத்திற்கே நிபுணர் குழுவும் வந்துள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால், ஒரு அனைத்துலக விசாரணையை முன்னெடுப்பதற்கு ஏதுவான முழுமையான நம்பகத் தன்மை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது என கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
விரைவில் இலங்கைத் தீவின் இன முரண்பாடு தொடர்பான தனது நூலை கோர்டன் வைஸ் வெளியிட உள்ளார்.
இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மறைப்பதில் சிறிலங்கா அரசாங்கம் கடந்த 2 ஆண்டுகள் வெற்றி கண்டுள்ளது.
இது சிறிலங்காவின் 'Srebrenica -தருணம்' எனக் கூறும் வைஸ் 1995 இல் அங்கு 8000 பொஸ்னிய மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை மேற்கோள் காட்டுகின்றார்.
இந்த ஒப்பீடு சரியானது. ஏனெனில் பொது மக்களை அழிப்பது தொடர்பான முடிவு இரண்டு இடங்களிலும் (Srebrenica - சிறிலங்கா) மூடிய கதவுகளுக்குள் எடுக்கப்பட்டது. அதே போல இரண்டு இடங்களிலும் அழிவுகளைத் தடுக்க அனைத்துலக சமூகம் தவறிவிட்டது என்கிறார் அவர்.
எனவே தீர்மானமான நடவடிக்கைகளை இப்பொழுது மேற்கொண்டாக வேண்டும். எமக்குத் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் இந்த அறிக்கை தருகின்றது. எதையுமே மேற்கொள்ளாதிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எதையுமே முன்னெடுக்காது இருந்தவாறு, அனைத்துலக சட்டங்களிலும் நியமங்களிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவது எவ்வாறு நியாயமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்புகின்றார் வைஸ்.
அனைத்துலக விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு ஐ.நா அறிக்கை, செயலாளர் நாயகம் பான் கீ மூனை கோரியுள்ளது. அனைத்துலக விசாரணையை முன்னெடுப்பதற்கான அதிகாரம் தம்மிடம் இல்லை என அதற்குப் பதிலளிக்கையில் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
எனவே அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் அதற்கான செயலை முன்னெடுக்க வேண்டுமென வைஸ் தெரிவித்துள்ளார் என 'ஆப்தன்போஸ்தன்' கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
nanry pongutamil inayam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக