சனி, 23 ஏப்ரல், 2011

நிபுணர்குழுவின் அறிக்கை மீது மத்திய அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ளும்! கருணாநிதி நம்பிக்கை

இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகு மத்திய அரசு கால தாமதம் இல்லாமல் அதைப் பற்றி முறையான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என நம்புவதாக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் தமிழக முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவியுமான ஜெயலலிதா இன்று இந்திய அரசை வலியுறுத்தியுள்ள நிலையில் அவரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாகவே கருணாநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்ற ஐ.நா விசாரணையின் அறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக முழுமையும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று பலரும் அறிக்கைகளை விட்டுக் கொண்டுள்ளார்கள்.
இந்த விசாரணை ஆணையத்தை அமைத்த ஐ.நா. மன்றம் என்ன செய்யப் போகிறது என்றும் தெரியவில்லை. நமது மத்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது என்ற விவரமும் வரவில்லை.
ஆனால் இதிலே அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா வழக்கம் போல தேவையில்லாமல் 2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் உச்ச கட்டத்தில் நடைபெற்ற போது நான் உண்ணாவிரதம் இருந்ததை 'கபட நாடகம்' என்றும், மத்திய அரசின் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இலங்கை சென்று வந்ததை குறைகூறியும் ஒரு அநாகரிகமான, அவருக்கே உரியநடையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் அடுக்கடுக்காகக் கொல்லப்பட்டபோது, ''போர் என்றால் பொது மக்களும் கொல்லப்படுவது சகஜம்தான்'' என்று ஈழத்து இனப் போரினை இழித்தும் பழித்தும் ஜெயலலிதா கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்பது ஜெயலலிதாவின் நினைப்பு!
எது எப்படியோ? வருகிற 25ஆம் தேதியன்று எந்தவிதமான திருத்தமும் இன்றி இலங்கை போர்க்குற்ற அறிக்கை முழுமையாக வெளியிடப்படும் என்று ஐ.நா. சபை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக அந்த அறிக்கை வெளியான பிறகு மத்திய அரசு கால தாமதம் இல்லாமல் அதைப் பற்றி முறையான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன். மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: