சனி, 30 ஏப்ரல், 2011

அடுத்த வாரம் பிளேக் கொழும்பு வருகிறார் - மகிந்தவை சந்திக்கும் திட்டமில்லை

தெற்கு, மத்திய ஆசியப் பகுதிகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் அடுத்த வாரம் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.

மாலைதீவு மற்றும் சிறிலங்காவுக்கான பயணத்தை அவர் ஏப்ரல் 30 தொடக்கம் மே 5 வரை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மே 3 ம் நாள் சிறிலங்கா செல்லும் பிளேக் இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார்.

இதன்போது அவர், அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளது.

யுஎஸ் எய்ட் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக றொபேட் ஓ பிளேக் கலந்துரையாடவுள்ளதாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சென்று உள்ளூர்த் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை, கொழும்பு வரும் பிளேக்கை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்துப் பேசுவார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தலைமை தொடர்பாடல் அதிகாரி சரத் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபரை பிளேக் சந்திக்கமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையின் அடிப்படையில் பொறுப்புக்கூறுதல் தொடர்பான முழுஅளவிலான விசாரணை நடத்த இந்த பயணத்தின் போது சிறிலங்கா அரசிடம் பிளேக் வலியுறுத்துவார் என்று அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிளேக் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு இந்தமாத முற்பகுதியிலேயே திட்டமிட்டிருந்தார்.

ஆனால் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வெளிநாட்டில் தங்கியிருப்பதாகக் கூறி அவரது வருகையை சிறிலங்கா அரசு பிற்போடச் செய்திருந்தது.

அதேவேளை, பிளேக்கின் கொழும்பு வருகைக்கு சிறிலங்காவின் அமைச்சர் விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

போர்க்குற்ற அறிக்கையின் பின்னரான சிறிலங்காவின் நிலைமைகளை உளவு பார்க்கவே அவர் கொழும்பு வரவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: