நிபுணர்குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் மாறாவிடின் இது தொடர்பான ஒரு முழுமையான சர்வதேச விசாரணை தவிர்க்க முடியாதது என தான் நம்புவதாக ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தில் போர்குற்றங்களும் மனிதத்திற்கு எதிரான செயற்பாடுகளும் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரம் உள்ளதாக ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து வெளியிடும்போதே மனிதவுரிமைகள் ஆணையர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த அறிக்கை எமது தார்மீக நியாயப்பாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதோடு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தியுள்ளதென நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா மனிதவுரிமை ஆணையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே நவநீதம்பிள்ளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச மனிதவுரிமை விதிகளையும் யுத்தமீறல்கள் தொடர்பான நடைமுறைகளையும் கடைப்பிடிப்பது என்பது நிபுணர்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல ஒவ்வொரு நாடுகளினதும் தெரிவாக இன்றி ஐ.நா உறுப்பு நாடுகளின் கடமையாகவே இருக்க வேண்டும்.
2009 ம் ஆண்டு மே மாதம், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற யுத்தமீறல்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காகவே ஐ.நா செயலாளர் நாயகத்தால் இந் நிபுணர்குழு அமைக்கப்பட்டது.
இந்த இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் யுத்தத்தின் முடிவில் பெருமளவு மக்கள் அகதிகளாக இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
மக்கள் தங்கியிருந்த முகாம்களை இலக்குவைத்து கனரக ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டமை, மக்களுக்கான மனிதாபிமான உதவிகளைத் தடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசு மீது நிபுணர்குழு ஆதாரத்துடன் முன்வைத்துள்ளது. அதேவேளை மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை மற்றும் தப்பிச்செல்ல முயன்ற மக்களைக் சுட்டுக்கொன்றமை போன்ற குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீதும் நிபுணர்குழு முன்வைத்துள்ளது.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகளை மேற்கொண்டு இதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென நிபுணர்குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள நேரடி சாட்சியங்களும் நம்பிக்கையான தகவல்களும் ஒரு வெளிப்படையானதும் முறையானதுமான விசாரணையை வலியுறுத்துவதாக மனிதவுரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கும் நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் மாறாவிடின் இது தொடர்பான ஒரு முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என தான் நம்புவதாக நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதில்கூறும் விடயத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் ஐ.நா சபையின் எதிர்பார்ப்பை திருப்திப்படுத்தும் விதமாக அமையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை முற்றாக நீக்குதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல், காணாமற் போனவர்கள் விடயத்திற்கு தீர்வு காணுதல், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் விடயத்திற்கு தீர்வு காணுதல் போன்ற நிபுணர்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை முற்றாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அவர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீண்டகால பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வினை வழங்குவதே உண்மையான நல்லிணக்கத்திற்கு அவசியம் எனத் தெரிவித்த அவர், நிபுணர்குழுவின் அறிக்கை வெளியானபின் சிறிலங்காவில் ஊடகவியலாளரின் பாதுகாப்பு, சாட்சிகளின் பாதுகாப்பு, சிவில் சமூக உறுப்பினர்களின் பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்துவதில் தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக