வியாழன், 28 ஏப்ரல், 2011

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை : சிறிலங்காவில் இன்று......? – செய்தித்துளிகள்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து சிறிலங்காவின் அரசியல் களத்தில் அதற்கு எதிராக வியூகம் வகுக்கும் முயற்சிகள் சூடுபிடித்துள்ளன.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை அடுத்து சிறிலங்காவில் நடக்கின்ற நிகழ்வுகளின் தொகுப்பு இது.

ஐதேகவின் புதிய தகவல்

ஐ.நா நிபுணர்குழுவின் 31 கேள்விகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்துள்ளதாக ஐதேக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐதேகவின் பிரதித்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல, ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை வெளியிட முன்னர் அதன் 31 கேள்விகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதில்களை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிபுணர்குழுவுடன் ஆரம்பத்தில் ஒத்துழைத்து நடந்து கொண்ட சிறிலங்கா அரசாங்கம் இப்போது நாடகமாடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலும் பேரணிகள்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்ப்புப் பேரணிகளை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இன்று காலை கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா இறைமையுள்ள ஒரு நாடு என்றும், இந்த அறிக்கையின் பொய்மைத்தன்மை குறித்தும் பக்க சார்பு குறித்தும் பொதுநலவாய நாடுகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தம்மை தெரிவித்துக் கொள்ளும் கருத்து தவறானது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல் மற்றும் பல்வேறு சம்பவங்களின் ஊடாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அல்ல என்பதை அரசாங்கம் நிரூபித்து காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தியே வந்தனர். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சிக்கும் நிலையில், ஐ.நா அறிக்கைக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையிட்டு நான் அதிர்ச்சியடையவில்லை, கவலை கொள்வதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தூதுவர்களை அலுக்க வைத்த பீரிஸ்

கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக இன்றுகாலை ஒன்றரை மணிநேரம் விளக்கமளித்துள்ளார்.

இந்த அறிக்கை ஐ.நாவினால் பகிரங்கப்படுத்தப்பட்டது குறித்தும் இதுதொடர்பான சிறிலங்கா அரசின் நிலைப்பாடு குறித்தும் அவர் விளக்கமாக விபரித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் சீனா, ரஸ்யா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இரு மணிநேர உண்ணாவிரத நாடகம்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவகீதா தலைமையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் இன்று இரண்டு மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் 12 மணியளவில் முடிவுக்கு வந்தது.

காலை உணவை முடித்துக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மதிய உணவுக்காக 12 மணியளவில் போராட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஐ.நா மற்றும் பான் கீ மூனுக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

கிழக்கில் சந்திரகாந்தன் கட்சி நழுவல்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான போராட்டங்களில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பங்கேற்பதை தவிர்த்து வருகிறது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டணி வைத்துள்ள இந்தக் கட்சியின் உறுப்பினர்கள், ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய போது சபையில் இருக்கவில்லை.

அத்துடன் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்திலும் பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளை தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் கலந்துக் கொள்ளவில்லை.

இதனால், சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான சிறிலங்கா அரசின் போராட்டங்களில் பங்கேற்காது என்றே கருதப்படுகிறது.

மாற்று ஐ.நாவுக்கு ஆலோசனை

மேற்குலகின் கைப்பொம்மையாக உள்ள ஐ.நாவுக்குப் பதிலாக, நடுநிலை நாடுகளின் துணையுடன் மாற்று ஐ.நா ஒன்றை அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச.

இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக இந்தியாவின் சாதகமான பதிலை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அதேவேளை அமெரிக்கா போன்ற எதிரி நாடுகளுக்கு விளக்கமளிப்பதால் எந்தப் பயனும் கிடையாது.

நடுநிலையான நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற சிறிலங்கா அதிபரும் வெளிவிவகார அமைச்சரும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: