திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.
இதில் நேற்றிரவு திருச்சி அருகே லால்குடி காட்டூர்-புளியம்பட்டி இடையே மழையால் மரங்கள் வேரோடு சரிந்து தண்டவாளத்தில் விழுந்தன. இதில் ரயில் பாதையில் மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளும் அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
திருச்சியிலிருந்து செல்லும், திருச்சிக்கு வரும் பல ரயில்கள் நள்ளிரவு முதல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் விடப்பட்டன.
தென் மாவட்டப்பகுதியில் இருந்து கிளம்பிய ரயில்கள் மயிலாடுதுறை மெயின் லைன் வழியாக மாற்றி விடப்பட்டன. இதனால் இந்த ரயில்கள் சென்னை போய்ச்சேர பல மணி நேரம் தாமதமாகும்.
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6.15க்குப் பதிலாக 9 மணிக்கு மதுரை வந்ததடைந்தது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் 3 மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வந்தடைந்தது.
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து கிளம்பி, மினசாரம் துண்டிக்கப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டது. இந்த ரயிலை டீசல் என்ஜின் மூலம் சென்னைக்கு இழுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இது வழக்கமாக காலை 5.30 மணிக்கு சென்னை வந்தடையும். இன்று இந்த ரயில் பிற்பகல் 3 மணிக்குத் தான் சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல விழுப்புரம் குள்ளம்பாடி பகுதியிலும் கன மழையால் ரயில் என்ஜின்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மங்களுர் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்து சேர்ந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மதுரை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.
மேலும் சென்னையில் இருந்து புறப்பட்ட தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.
இரவு முதல் தீவிரமாக பணியாற்றிய ரயில்வே என்ஜினியர்கள் முயற்சியால் காலை 8 மணிக்கு மேல் போக்குவரத்து சீரானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக