சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் முக்கியமான அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியமான முறையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புற்ரெனிசின் அழைப்பின் பேரிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நெதர்லாந்து, பிரான்ஸ், கனடா, அவுஸ்ரேலியா, ஐ.நா, ஜப்பான், நோர்வே, தென்னாபிரிக்கா, தென்கொரியா, சுவிற்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகள் இந்த இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் உள்ளூர் அரச்சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் முக்கிய பிரமுகர்களும் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், இந்தச் சந்திப்பு தொடர்பாக தகவலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் உறுதிப்படுத்துவோ மறுக்கவோ இல்லை.
அமெரிக்கத் தூதுவரின் சந்திப்புகள் அல்லது அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்பன கொள்கை சார்ந்தவை என்பதால் அதுபற்றி கருத்து வெளியிட முடியாது என்று அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்கத் தூதுவரின் அழைப்பின் பேரிலேயே அதில் தான் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்த அறிக்கையை எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டதாகவும் ஜெகான் பெரேரா தெரிவித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, செரின் சேவியர், வெலியமுன, சுதர்சன குணவர்த்தன, சுனிலா அபேசேகர ஆகியோரும். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக