சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ள ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்குப் பதிலளிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் நியமிக்கும் எந்தவொரு குழுவிலும் இடம்பெறப் போவதில்லை என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் அதன் உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சித்தரஞ்சன் டி சில்வா, மற்றும் ஏனைய உறுப்பினர்களான கலாநிதி அம்ரித் றொகான் பெரேரா, பேராசிரியர் முகமட் தாகிர், பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த, சட்டத்தரணிகள் முகமட் ஜிப்ரி, சந்திரபால் சண்முகம், பாலிகக்கார, மனோகரி இராமநாதன் ஆகியோரே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு சுதந்திரமாக இயங்குவதாகவும், அதன் நோக்கமும் ஐ.நா நிபுணர் குழுவுக்குப் பதிலளிக்கும் குழுவின் நோக்கமும் வேறுபட்டது என்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் நிபுணர்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பதிலளிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர்கள் மூவரை உள்ளடக்கிய குழுவில், நல்லிணக்க ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் பாலிகக்காரவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக