வியாழன், 28 ஏப்ரல், 2011

துல்லியமான இழப்பு விபரங்களைத் திரட்ட முடியவில்லை – ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்

சிறிலங்கா அரசபடைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில், பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக ஐ.நாவினால் துல்லியமான விபரங்களைப் பெறமுடியவில்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி தெரிவித்துள்ளார்.

நேற்றுமாலை நியுயோர்க்கில் அவர் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ பாதுகாப்புக் காரணங்களால், அந்த நேரத்தில் ஐ.நாவின் பணியாளர்களை சிறிலங்காவில் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து நாம் விலக்கிக் கொள்ள நேரிட்டது.

அதனால் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துல்லியமான இழப்பு விபரங்களை எம்மால் திரட்ட முடியாது போனது.

சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா பணியாளர்களுக்கு அங்கே பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முடியாது என்று கூறிவிட்ட நிலையில், இழப்புகள் பற்றிய விபரங்களை அவர்களால் திரட்டக் கூடிய நிலை இருக்கவில்லை.

நிபுணர்குழுவின் அறிக்கையில், கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் விரைவில் தமது மூத்த ஆலோசகர்களுடன் மீளாய்வு செய்யவுள்ளார்“ என்றும் மார்ட்டின் நெர்ஸ்க்கி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: