சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுக்கள் நேற்று நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அதிகாரப் பகிர்வு பற்றிய விடயங்கள் பேசப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது மாகாணங்களுக்கான அதிகாரங்களை வரையறுக்கும் பட்டியல் மற்றும் பொதுவான பட்டியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகாரப்பகிர்வு எந்த வகையில் அமைய வேண்டும் என்ற அடிப்படை வரைவு ஒன்று பற்றிப் பேசப்பட்டதுடன் தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை அரசதரப்புப் பிரதிநிதிகள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய அரசுக்கான அதிகாரப்பட்டியல் மற்றும் மாகாணங்களுக்கான அதிகாரப் பட்டியல் என்ற இரண்டு மட்டுமே இருந்தால் போதுமானது என்று இந்தச் சந்திப்பின்போது கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இரண்டு அரசுகளுக்கும் பொதுவான அதிகாரங்களைக் கொண்ட பட்டியல் ஒன்று தேவையில்லை என்ற தமது நிலைப்பாட்டை அரச தரப்புக்குத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், ஆனால் அதை முழுமையாக ஏற்க முடியாது என்று அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவ்வாறாயின், பொதுப் பட்டியலில் அதிக அதிகாரங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் ஒரு சிலவற்றை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதுமானது என்று தாம் கூறியதாகவும், அதற்கு அரசதரப்பு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது இந்த விவகாரம் குறித்து மீண்டும் மே 12ம் நாள் பேசுவதென்று இரு தரப்புகளும் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகளின் விபரங்களை விரைவில் தருவதாக அரசதரப்பு மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், மே 12ம் திகதிக்கு முன்னதாக அது கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும், அரசதரப்பில் அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் பங்கேற்கவில்லை.
கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் மற்றும் சட்டவாளர் கனகஈஸ்வரன் ஆகியோரும், அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜின் வாஸ் குணவர்த்தன, ரஜீவ விஜேசிங்க ஆகியோரும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தும் அரசதரப்புக்குழுவில் இருந்து முன்னாள் பிரதமரும் மூத்த அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசதரப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்புடன் கடைசியாக நடத்தப்பட்ட சந்திப்புகளில் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 கருத்து:
அடுத்த நாடகம்!பெயர் தான் தெரியவில்லை!சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் தான் கேட்க வேண்டும்.வடிவேல் பாஷையில்///இன்னுமா இந்த உலகம் நம்பள நம்புது?////
கருத்துரையிடுக