வியாழன், 28 ஏப்ரல், 2011

ஐ.நா அறிக்கையால் பதற்றத்தில் சிறிலங்கா அரசு – வெளிநாட்டுத் தூதுவர்களை இன்று மீண்டும் சந்திக்கிறார் பீரிஸ்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான இராஜதந்திரப் போரை முடுக்கி விட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்களை இன்று மீண்டும் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு வருமாறு கொழும்பிலுள்ள அனைத்து நாடுகளினதும் தூதுவர்களுக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அவர்களுடன் கலந்துரையாடி, ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை விவகாரத்தில் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 21ம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் முக்கிய இராஜதந்திரிகளுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறியிருந்தார்.

அந்தச் சந்திப்பு இடம்பெற்று சரியாக ஒரு வாரம் கழித்து மீண்டும் வெளிநாட்டுத் தூதுவர்ளைச் சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

முன்னைய சந்திப்பின் போது சீனத் தூதுவர் பங்கு கொள்ளாத விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையால் சிறிலங்கா அரசாங்கம் பதற்றமடைந்துள்ளதாகவும் எனவே, வெளிநாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முனைப்புகளில் தீவிரமாக இருப்பதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையை ஒரு தனிப்பட்ட குழுவின் அறிக்கையாக அடையாளப்படுத்தவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.

தருஸ்மான் குழுவின் அறிக்கை என்றே இதை அழைப்பதுடன், இது ஐ.நா அறிக்கையல்ல என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது

கருத்துகள் இல்லை: