சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மத்தியில் அ.தி.மு.க.,வின் கரம் வலுவடைகிறது.
கடந்த 1998ம் ஆண்டு, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க., போட்டியிட்ட போது, வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். அப்போது, அ.தி.மு.க., டில்லியில் செல்வாக்குமிக்க கட்சியாக இருந்தது. பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அ.தி.மு.க., பின்னர் விலக்கி கொண்டதால் நிலைமை மாறியது. 1999ம் ஆண்டு ஏப்ரலில், பா.ஜ., அரசு கவிழ்ந்தது. இதன்பின், 12 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பு அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கவில்லை.
அ.தி.மு.க., விட்டுச்சென்ற இடத்தை பயன்படுத்தி கொண்டு, தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு சென்றது. 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து தி.மு.க., போட்டியிட்டது.பின், காங்கிரஸ் கூட்டணிக்கு மாறிய தி.மு.க., 2004 மற்றும் 2009 தேர்தல்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வெடித்த போது, "மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., அமைச்சர் ராஜாவை உடனடியாக நீக்க வேண்டும். தி.மு.க., அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்ளும் என்ற பயம் மத்திய அரசுக்கு வேண்டாம்.
அ.தி.மு.க.,வின் ஒன்பது எம்.பி.,க்களின் நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரசுக்கு அளிக்கிறோம். இன்னும் பிற கட்சிகளின் ஆதரவையும் பெற்று தர அ.தி.மு.க., தயாராக உள்ளது' என, ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும் அல்ல, மத்தியில் புதிய கூட்டணி மாற்றம் ஏற்படுவதற்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்தியது.ஜெயலலிதாவின் அறிவிப்பால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் துணிச்சலான முடிவுகளை காங்கிரசால் எடுக்க முடிந்தது. மத்திய அமைச்சராக இருந்த ராஜா கைது செய்யப்பட்டார். ஸ்பெக்ட்ரம் பணம் கலைஞர் "டிவி'க்கு கைமாறியது வெளிச்சத்துக்கு வந்தது.இதன், எதிரொலியாக சட்டசபை தேர்தலில் தி.மு.க., பரிதாபமாக தோற்றது. அ.தி.மு.க., சாதனை வெற்றியை பெற்றது.
"தமிழகத்தில் அ.தி.மு.க., பெற்ற வெற்றி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. தேசிய அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்' என, டில்லியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்தியில் புதிய கூட்டணிக்கு அச்சாரம் போடப்பட்டு விட்டதாகவும் தேசிய கட்சிகள் கூறிவருகின்றன. தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வுகளுக்கான தோற்றங்கள் தென்படத் தொடங்கி விட்டன எனவும், அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.,யை அனுப்ப 34 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., 23 எம்.எல்.ஏ.,க்களை தான் பெற்றுள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க., மூன்று எம்.எல்.ஏ.,களையும், காங்கிரஸ் ஐந்து எம்.எல்.ஏ.,க்களையும் கொண்டுள்ளன. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., எம்.எல்.ஏ.,களை சேர்த்தால் கூட ஒரு ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்ய முடியாது.
தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட தி.மு.க.,வை சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகன் மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த இளவரசன், மைத்ரேயன் ஆகியோர் பதவிக்காலம் 2013ல் முடிகிறது.2014ல், தி.மு.க.,வைச் சேர்ந்த அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசை சேர்ந்த வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன் மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த, பால் மனோஜ்பாண்டியன் ஆகியோரது பதவிக்காலம் முடிகிறது.இதற்கான தேர்தல்களில், அ.தி.மு.க., முன்னிறுத்தும் வேட்பாளர்களே வெற்றி பெற முடியும். தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் எவரையும் தனித்து வெற்றி பெறச் செய்ய முடியாது. எனவே, ராஜ்யசபாவிலும் அ.தி.மு.க.,வின் கை ஓங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக