2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 20-ம் தேதி ஒத்திவைத்து உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட பெஞ்ச், சிபிஐக்கு சரமாரியான கேள்விகளை விடுத்துள்ளது.
இன்று எப்படியும் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து டெல்லிக்கு வந்த திமுக தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட ரூ. 200 கோடி பணம் தொடர்பான சிக்கலில் கனிமொழி சிக்கியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலால் கிடைத்த லஞ்சப் பணம் தான் சினியுக் நிறுவனம் மூலம் கடன் தொகை என்ற பெயரில் கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது சிபிஐயின் வாதமாகும்.
இந்த வழக்கில் கலைஞர் டிவியில் பங்குகள் வைத்துள்ள கனிமொழியும், அதன் நிர்வாக இயக்குநர் ரெட்டியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இருவரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இருவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, இருவரும் குற்றம் செய்திருக்கலாம், ஊழலில் பலனடைந்திருக்கலாம் என்பதற்கான பூர்வாங்கம் இருப்பதால் இருவரையும் வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கக் கூடும் என்பதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை இருவரும் நாடினர். இது விடுமுறைக் கால பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனு மீதான விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் சிபிஐக்கு பல்வேறு கேள்விகளை விடுத்தனர். கலைஞர் டிவிக்கு கொடுக்கப்பட்ட ரூ. 200 கோடி லஞ்சப் பணம் என்கிறீர்கள். அப்படியானால் அந்தப் பணம் எங்கே?. அதை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதா?.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை ஜூன் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
http://thatstamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக