சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 42 கொமாண்டோக்கள் இந்தியாவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாவே இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா கடற்படைக் கொமாண்டோக்கள் மும்பை அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
எனினும் இதுதொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்தல், சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிரச்சினையை சமாளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயற்படுவதற்காக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளவே சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் இந்தியா சென்றுள்ளனர்.
தமது பயணத்தின் பிரதான நோக்கம் இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையில் பலமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதே என்று மும்பை விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாம் இந்தியாவில் எந்தவொரு கூட்டு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பல முக்கியமான இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மும்பையில் இந்தியக் கடற்படை அதிகாரிகளுடன் சில நாட்களை செலவிட்ட பின்னர், கோவா மற்றும் சென்னைக்குச் செல்லவுள்ளதாகவும், எதிர்காலத்தில் முக்கியமான இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பது பற்றி இதன்போது ஆராயப்படும் என்றும் அந்த கடற்படை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு சிறிலங்கா கடற்படை, எரிபொருள் நிரப்பவும், மீள் ஒழுங்கு செய்யவும் இடமளித்து உதவி வருவதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து இருநாட்டுக் கடற்படைகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக