திங்கள், 13 ஜூன், 2011

முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார்-பிரதமரை சந்திக்கிறார்

முதல்வர் பதவியில் அமர்ந்த பிறகு முதல் முறையாக ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். நாளை அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்திப்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார் ஜெயலலிதா. மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதிமுக அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். 2 நாள் பயணமாக செல்லும் அவர் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளார்.

ஜெயலலிதாவின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கப்படுகிறது.

தனது பயணத்தின்போது ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை சோனியா காந்தியுடனான சந்திப்பு குறித்து அதிமுக தரப்பிலோ, முதல்வர் தரப்பிலோ ஒரு வார்த்தை கூட கூறப்படவில்லை.

தேர்தலில் அதிமுக வென்றதும் பிரதமரும், சோனியாவும் ஜெயலலிதாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது டீ பார்ட்டிக்கு வருமாறு ஜெயலலிதாவை, சோனியா அழைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இதை பின்னர் ஜெயலலிதா மறுத்தார்.

திமுகவுடனான காங்கிரஸ் உறவு கசந்து போய் விட்ட நிலையில் இரு கட்சிகளுமே தங்களது சுய நலத்திற்காகத்தான் கூட்டணியை தொடர்நது கொண்டுள்ளன. எனவே வலுவான காரணம் கிடைத்தால், இரு கட்சிகளுமே கூட்டணியிலிருந்து விலகத் தயாராகவே உள்ளன. அப்படி ஒரு நிலை வரும்போது தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் ஆர்வத்துடன் காத்திருப்பதாக தெரிகிறது.

எனவே இன்றைய ஜெயலலிதாவின் டெல்லி பயணம் பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரதமரை சந்திக்கவுள்ள ஜெயலலிதா, தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கவுள்ளார். குறிப்பாக மின்பற்றாக்குறையைப் போக்க கூடுதல் மின்சாரம், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் நிதி, மண்ணெண்ணெய் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பிரதமருடன் ஆலோசிக்கவுள்ளார்.

இதை விட முக்கியமாக இலங்கைப் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல் குறித்தும் பிரதமருடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தவுள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் பிரதமரிடம் வைப்பார் என்று தெரிகிறது.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: