2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் கோரிக்கை மீதான தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால பெஞ்ச் வழங்கவுள்ளது.
இதையடுத்து திமுக முன்னணித் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட ரூ. 200 கோடி பணம் தொடர்பான சிக்கலில் கனமொவி மாட்டியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலால் கிடைத்த லஞ்சப் பணம்தான் சினியுக் நிறுவனம் மூலம் கடன் தொகை என்ற பெயரில் கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது சிபிஐயின் வாதமாகும்.
இந்த வழக்கில் கலைஞர் டிவியில் பங்குகள் வைத்துள்ள கனிமொழியும், அதன் நிர்வாக இயக்குநர் ரெட்டியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக இருவரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இருவரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, இருவரும் குற்றம் செய்திருக்கலாம், ஊழலில் பலனடைந்திருக்கலாம் என்பதற்கான பூர்வாங்கம் இருப்பதால் இருவரையும் வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கக் கூடும் என்பதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் கூறி விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை இருவரும் நாடினர். இது விடுமுறைக் கால பெஞ்ச்சில் விசாரணைக்கு இன்று வருகிறது. நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று மனுவை விசாரித்து உடனடியாக தீர்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வழக்குகள் பட்டியலில் 16வது வழக்காக கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
http://thatstamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக