தமிழக அரசு, மக்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ள வெட்கிரைண்டர்களை தயாரிக்க, கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்க திட்டமிட் டுள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளுமே போட்டி போட்டு இலவச திட்டங்களை அறிவித்தன. அ.தி.மு.க., வெற்றி பெற்ற தையடுத்து இலவச திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக வெட்கிரைண்டர், மின்விசிறி, மிக்ஸி, லேப்டாப் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. "லேப்டாப்' கம்ப்யூட்டர்களை மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்க முதல் கட்டமாக சர்வதேச டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் பணிகளை "எல்காட்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அடுத்து மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவைகளை வழங்குவது குறித்து சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இவற்றை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விரைவில் வெளியாக உள்ளது. இவற்றில் வெட்கிரைண்டர் கொள்முதல் செய்ய ஆயத்த பணிகள் நடக்கின்றன. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கூட வெட்கிரைண்டர் உற்பத்தி செய்வதில் கோவை மட்டுமே நிபுணத்துவம் பெற்றுள்ளது. விரைவாக செய்யும் திறனும் கோவையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டுமே உண்டு. எனவே, கோவையில் உள்ள வெட்கிரைண்டர் தயாரிப்பாளர்கள் இணைந்து இலவச வெட்கிரைண்டர்களை அரசுக்கு தயார் செய்து தருவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்டப்பணியாக, "கோயம்புத்தூர் வெட்கிரைண்டர் கூட்டமைப்பு' (கோயம்புத்தூர் வெட்கிரைண்டர் கன்சோர்ஷியம்) ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் இரண்டாவது கூட்டம், கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், இந்த அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் சவுந்தர்குமார் பேசியதாவது: மாநில அரசு வெட்கிரைண்டர்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. அதேசமயம் வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்களிடம் பேச்சு நடத்தி முடிவு செய்யும் என எதிர்பார்க்கிறோம். கோவையில் வெட்கிரைண்டர் உற்பத்தி திறன் மாதத்துக்கு 7,500 முதல் ஒரு லட்சமாக உள்ளது. மாநில அரசு தற்போது மாதத்துக்கு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் கிரைண்டர்களை உற்பத்தி செய்ய முடியுமா என கேட்டுள்ளது. இந்த அளவுக்கு தனி ஒரு நிறுவனமோ, இந்தியாவிலோ எந்த நிறுவனமும் இல்லை. அதேசமயம், கிரைண்டர் உற்பத்தியார்களிடையே பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. பெரும் கிரைண்டர் நிறுவனங்கள் திரைமறைவாக டெண்டரில் பங்கேற்று வென்று விட்டதாகக் கூட கூறுகின்றனர்; ஆனால், இவை உண்மையல்ல. வதந்திகளை நம்ப வேண்டாம். அரசின் தொழில்நுட்ப விளக்கக்கூட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதன் பின்னரே டெண்டர் பற்றியோ, கிரைண்டர் தேவை குறித்தோ சரியான தகவல்கள் தெரிய வரும். இவ்வாறு, நிர்வாக குழு உறுப்பினர் சவுந்தர்குமார் பேசினார்.
கூட்டமைப்பின் நிர்வாகி தேவராஜன் பேசியதாவது: இலவச வெட்கிரைண்டர் வழங்க முதல்கட்டமாக 25 லட்சம் கிரைண்டர்களை கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்துள்ளது. கோவையின் வெட்கிரைண்டர் மாத உற்பத்தியே ஒரு லட்சமாக இருக்கும்போது, ஒரே ஆண்டில் இவ்வளவு வெட்கிரைண்டர்களை உற்பத்தி செய்வது சாத்தியமானதாக இல்லை. மற்ற மின்விசிறி, மிக்ஸி போன்றவைகளை உற்பத்தி செய்வது போன்று எளிதாக கிரைண்டரை உற்பத்தி செய்து விட முடியாது. காரணம், கிரைண்டரில் பயன்படுத்தக் கூடிய கல், பிளாஸ்டிக் புஷ், மோட்டார் டிரம் உள்ளிட்டவைகளை தயாரிக்க கால அவகாசம் தேவை. இந்த நடைமுறைச்சிக்கலை மீறி எந்த நிறுவனமும் எளிதாக கிரைண்டர் தயாரிப்பில் இறங்கி விட முடியாது. ஆள் பற்றாக்குறையும் இருப்பதால், கோவையில் உள்ள கிரைண்டர் தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட்டாலும் கூட கிரைண்டர் தயாரித்து அளிக்க முடியாது. இந்த சூழ்நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழிலாக அதிக அளவில் உள்ள கிரைண்டர் உற்பத்தியாளர்கள், அரசு கோரும் விதிமுறைக்கு உட்பட்டு தகுதி பெறுவதும் கூட எளிதானது அல்ல. அரசு கேட்கும் முன் வைப்பு தொகை, காப்பு தொகை, மத்திய அரசுக்கு உடனடியாக செலுத்த வேண்டிய கலால் வரி போன்றவைகளை சமாளிக்கும் திறன் பெற்ற கிரைண்டர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. எனவே இதையெல்லாம் சமாளித்து, அரசுக்கு கிரைண்டர் உற்பத்தி செய்து கொடுக்க புதிய கூட்டமைப்பு ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் விருப்பம் உள்ள கிரைண்டர் உற்பத்தியாளர் இணைந்து செயல்படலாம்.
குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ஒரு லட்சம் வரையில் பங்குகளை செலுத்தி நிறுவனத்தை உருவாக்கலாம். இந்த நிறுவனத்துக்கு தேர்தல் முறையில் இயக்குனர்களை தேர்வு செய்யலாம். இந்த நிறுவனத்துக்கு வரக் கூடிய ஆடர்களுக்கு ஏற்ப பொருள் தயாரிப்பை பிரித்துக் கொள்ளலாம். பொதுவான பெயரில் கிரைண்டரை அறிமுகம் செய்யலாம்; விளம்பரப்படுத்தலாம். தொடர்ந்து இந்த நிறுவனம் சிறப்பாக செயல்படும் நிலையில், வருங்காலத்தில் பங்குச் சந்தையில் பட்டியிலிடவும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு, வெட்கிரைண்டர் கூட்டமைப்பின் நிர்வாகி தேவராஜன் கூறினார். கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், ஏராளமான வெட்கிரைண்டர் தயாரிப்பாளர்கள், சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
"தரத்துக்கே முக்கியத்துவம்': கடந்த தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச கலர் "டிவி' தரமற்றதாக இருந்ததால், எண்ணற்ற "டிவி'கள் குப்பைத்தொட்டியில் மக்களால் வீசப்பட்டன. அதே போன்ற நிலை ஏற்பட தற்போதைய அரசு அனுமதிக்கக்கூடாது. மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் மின் விசிறி, வெட்கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை தரமுள்ளதாக பெற்று, அதன் தரத்தை பலமுறை ஆராய்ந்த பிறகே மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். தமிழக அரசு, டெண்டர் கோரும்போது விலையை மட்டுமே கருத்தில் கொண்டு உற்பத்திக்கான ஆர்டரை நிறுவனங்களுக்கு வழங்காமல், தரத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதற்கேற்ப, கோவையிலுள்ள வெட்கிரைண்டர் தயாரிப்பாளர்களும் தரமான உற்பத்திக்கு தயாராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது.
http://www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக