வெள்ளி, 10 ஜூன், 2011

ஒரே இடத்தில் சீட் தராததால் சட்டசபையைப் புறக்கணித்தது திமுக

தங்களது உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் சீட் தராததைக் கண்டித்தும், பேசுவதற்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படாததாலும், சட்டசபைக் கூட்டத்தைப் புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

தமிழக சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் 3வது பெரிய கட்சியான திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் உட்கார இடம் தரவில்லை என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று குறை கூறியிருந்தார்.

தங்களது உறுப்பினர்களைப் பிரித்து ஆங்காங்கு உட்கார வைத்திருப்பதாக கூறிய அவர், இதனால் தங்களது உறுப்பினர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், தேமுதிக உறுப்பினர்கள் தங்களது கட்சி உறுப்பினர்களைத் தாக்க முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலை நீடித்தால் கூட்டத் தொடரைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை சட்டசபைக்கு வந்த திமுக உறுப்பினர்கள், ஒரே இடத்தில் தங்களுக்கு இடம் தரப்படாததால் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு வெளியேறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகையில், எங்களுக்கு ஒரே இடத்தில் குழுவாக அமர இடம் தரப்படவில்லை. பேசுவதற்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை. எனவே கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம் என்றார்.

இன்றுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.


http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: