வெள்ளி, 10 ஜூன், 2011

தி.மு.க. அவசர உயர்நிலை செயல் திட்டக்குழு இன்று கூடுகிறது

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை‌யி‌ல் இ‌ன்று மாலை நடைபெறு‌கிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்ப‌ா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌திகா‌ர் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி‌யி‌ன் ‌பிணை மனு டெல்லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ‌நிராக‌ரி‌த்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசு பாராமுகமாகவே இருப்பதும் தி.மு.க.வில் பலருக்கு ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இ‌‌ந்த ‌நிலையி‌ல் மத்தியில் செயல்பட வேண்டிய முறைகள் பற்றியும், சட்ட‌ப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மாநிலத்தில் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் இன்று நடக்கும் கட்சியின் அவசர உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் விவரிக்கப்பட்டு, முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்ற விஷயமாக, மத்திய அமைச்சரவையில் தி.மு.க. தொடர்ந்து நீடிக்குமா? அல்லது ஆதரவை விலக்கிக்கொண்டு அமைச்சரவையில் இருந்து விலகுமா? விலகி விட்டு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்குமா? இல்லையென்றால் முழுமையாக கூட்டணியில் இருந்து வெளியே வருமா? என்று அரசியல் நோக்கர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்று மாலை 4.30 மணி அளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுவின் அவசரக்கூட்டத்தின் முடிவில் பதில் கிடைக்கும்.

http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: