ஞாயிறு, 12 ஜூன், 2011

ஜெயலலிதா சொன்னது குறித்து ராஜபக்சேவுடன் விவாதிக்கவில்லை-எஸ்.எஸ்.மேனன்

முதல்வர் ஜெயலலிதாவை தான் சந்தித்தபோது அவர் தெரிவித்த சில விஷயங்கள் குறித்து நான் ராஜபக்சேவுடன் விவாதிக்கவில்லை என்று கூறியுள்ளார் ராஜபக்சேவை சந்தித்துப் பேச்சு நடத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன்.

இலங்கைக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் சென்றனர். நேற்று ராஜபக்சேவை இந்தக் குழு சந்தித்துப் பேசியது. அப்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸும் உடன் இருந்தார்.

கொழும்பு புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை மேனன் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் பல விஷயங்களை குறிப்பிட்டுக் கூறி இதுகுறித்து ராஜபக்சேவுடன் விவாதிக்குமாறு ஜெயலலிதா வலியுறுத்தியதாக தெரிகிறது. இதைக் கேட்டுக் கொண்டு சென்ற மேனன் தற்போது ஜெயலலிதா குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து ராஜபக்சேவுடன் விவாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அவை என்ன விஷயங்கள் என்பது குறித்து அவர் விளக்கவில்லை. அதேசமயம், அதுகுறித்து தான் ராஜபக்சேவுடன் பேசவில்லை என்று கூறியுள்ளார் மேனன். இருப்பினும் அது கச்சத்தீவு பிரச்சினை குறித்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ராஜபக்சேவை சந்தித்த பின்னர் மேனன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழர்களுடன் அதிகாரப்பகிர்வு, அரசியல் தீர்வு காண்பதே பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு உதவும். இதை செய்ய இலங்கை அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இந்திய-இலங்கை அமைதி உடன்பாட்டிலும் இக்கருத்து எட்டப்பட்டது. ஆனால் தனித் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையால் இது கைவிடப்பட்டது. இப்போது முந்தைய உடன்படிக்கையை மேம்படுத்தி அமல்படுத்தும் என நம்புவதாக கூறினார்.

தமிழக மீனவர்கள் குறித்து கோத்தபயாவுடன் ஆலோசனை

இதேபோல கோத்தபயா ராஜபக்சே, ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோருடனும் மேனன், ராவ் குழுவினர் பேசினர்.

அப்போது தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து இருவரும் கோத்தபயா, வீரதுங்காவுடன் பேசினர். அப்போது இரு நாட்டு மீனவர் சங்கங்களின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கோத்தபயா, வீரதுங்கா கூறியதாக தெரிகிறது.

இனப்படுகொலை குறித்து பேச்சே இல்லை

இந்திய, இலங்கை சந்திப்பின்போது ஈழப் போரின்போது நடைபெற்ற படுகொலைகள், இன அழிப்பு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.

இலங்கை போகிறார் மன்மோகன் சிங்

இதற்கிடையே, இலங்கை வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். இதை பிரதமர் உடனடியாக ஏற்றுக் கொண்டு விட்டார். இதை இலங்கை அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் பந்துலா ஜெயசகேர தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2008ம் ஆண்டு இலங்கை போயிருந்தார். தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கைக்கு முதல் முறையாக அவர் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இலங்கையின் மீது போர்க்குற்றம் புரிந்த நாடு, இன ஒழிப்பை மேற்கொண்ட நாடு என்று சர்வதேச அளவில் நெருக்கடிகளும், புகார்களும், குற்றச்சாட்டுக்களும் படிந்துள்ள நிலையில் அந்த நாட்டுக்குப் போக பிரதமர் உடனடியாக சம்மதம் தெரிவித்திருப்பது ஈழத் தமிழர்கள் மத்தியிலும், இலங்கைக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டிருப்போருக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இவர்கள் கைகளிலும் அப்பாவி ஈழத்தமிழரின் இரத்தம் படிந்திருக்கிறது. இவர்கள் எப்படி எமது அவலங்களைப் பற்றி பேசுவார்கள்?தமிழக முதல்வரின் நடவடிக்கைகளினால் மிரண்டு போன சிங்கள காவாலி கொலைவெறியரை அமைதிப்படுத்தவே இவர்கள் அவசர அவசரமாக சிங்கள கொலைவெறியரை சந்தித்து. கைகட்டி வாய் பொத்தி கொடுத்ததை வாங்கிக் கொண்டு செல்ல வந்தவர்களை எமது அவலங்களை போக்க வந்தவர்கள் என்று நாம் நினைத்தால் யார் என்ன செய்ய முடியும்.