ஞாயிறு, 1 மே, 2011

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையின் பின்னால் சிறிலங்காவில் என்ன நடக்கிறது - செய்தித்துளிகள்

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து சிறிலங்காவின் அரசியல் களத்தில் அதற்கு எதிராக வியூகம் வகுக்கும் முயற்சிகள் சூடுபிடித்துள்ளன.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை அடுத்து சிறிலங்காவில் நடக்கின்ற நிகழ்வுகளின் தொகுப்பு இது.

மட்டக்களப்பில் ‘மகளிர் மட்டும்‘ பேரணி

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பில் நேற்றுக்காலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

கல்குடா தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தலைமையில் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

சுமார் இரு மணிநேரம் வரை பல்வேறு வீதிகள் ஊடாகச் சென்ற இந்தப் பேரணியில் இளம்பெண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்களின் கைகளில் சிங்களத்தில் எழுதப்பட்ட சுலோக அட்டைகள் காணப்பட்டன.

மேர்வின் சில்வாவை எதிர்த்த விகாராதிபதி

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக களனி ரஜமகா விகாரைக்குள் இரத்தக் கையெழுத்துப் பெறும் போராட்டத்தை நட்த்துவதற்கு சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

களனி ரஜமகா விகாரையின் பிரதம விகாராதிபதி கொள்ளுப்பிட்டியே மகிந்த சங்கரகித்த தேரரின் எதிர்ப்பை அடுத்தே மேர்வின் சில்வாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

கடந்த 27ம் திகதி மேர்வின் சில்வா களனி ரஜமகா விகாரைக்குள் இரத்தக் கையெழுத்துகளைப் பெறும் போராட்டத்தை நடத்த முயன்றார்.

அதற்கு விகாராதிபதி எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து விகாரைக்கு முன்பாக அவர் இரத்தக் கையெழுத்துப் பெறும் போராட்டத்தை மேற்கொண்டார்.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான அமைச்சர் மேர்வின் சில்வா, அவரது மகன் மலாக்க டி சில்வா, பிரதி அமைச்சர் துலீப் விஜேசேகர, வண. கும்புறுகமுவே வஜிர தேரர், களனி பிரதேசசபை உறுப்பினர்களும் இரத்தக் கையெழுத்திட்டனர்.

கம்பகா மாவட்டம் முழுவதும் இரத்தக் கையெழுத்துகளைப் பெறவும் சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா திட்டமிட்டுள்ளார்.

தீக்குளிக்கப் போகிறாராம் தேரர்

சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தும் நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன் மீளப்பெற்றுக் கொள்ளத் தவறினால், தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பௌத்த பிக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

மாத்தறை போதிருக்கராமய விகாரையின் பிரதம விகாராதிபதியான வண.அத்ததாசி தேரரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தறையில் இன்று காலை ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி ஒன்றின் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான இரத்தக் கெயெழுத்துகளை இட்டதாகவும், ஆளும்கட்சியின் அரசியல்வாதி ஒருவரை மேற்கோள் காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கையெழுத்துப் போடுமாறு மிரட்டப்படும் தமிழர்கள்

கொழும்பில் வசிக்கும் தமிழர்களிடம் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக கட்டாயப்படுத்தி கையெழுத்துகளை பெற்று வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள தமிழ் சமூகத்தினரிடம் இருந்து தமக்கு இதுதொடர்பான பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற பிரச்சினையை கொழும்பிலுள்ள தமிழ் சமூகத்தினர் சிறிலங்கா அரசின் போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் போதும் எதிர்கொள்ள நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை மிரட்டுகிறார் எஸ்.பி

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிராகரிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க மிரட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் தேசியவாதக் கொள்கைகளுக்காக போராட்டம் நடத்தியதாக ஐ.நாநிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தமிழ் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்களைப் படுகொலை செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டாளர்களை படுகொலை செய்த ஒரு அமைப்புக்கு ஆதரவாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

போரில் பொதுமக்கள் பலியாவது வழக்கமானதாம்

போர் ஒன்றில் பொதுமக்கள் கொல்லப்படுவது வழக்கமானது தான் என்று கூறியுள்ளார் சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியூ குணசேகர.

“சிறிலங்காவின் வரலாற்றில் முதலாம், இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போதும், 1971, 1988ம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சிகளின் போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

நான்காம் கட்ட ஈழப்போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை அனைத்துலக சமூகம் தூக்கி பிடித்துக் கொண்டு பிரச்சினையை கிளப்புகிறது.

இப்போது அழுத்தங்களைக் கொடுக்கும் அனைத்துலகமோ, ஐ.நாவோ அல்லது ஊடகங்களோ, 1988-89இல் இடம்பெற்ற மனிதப்படுகொலைகள் இடம்பெற்ற போது வாய் திறக்காமல் மௌனமாக இருந்தது ஏன்?

உலகிலேயே மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ஐ.நா குழுவின் அறிக்கையின் மூலம் மிகவும் கண்ணியமான போராட்ட அமைப்பு என்று நற்பெயர் வழங்கப்பட்டுள்ளது“ என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
NANRY PUTHINAPALAKAI

கருத்துகள் இல்லை: