யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியிடப்பட்ட இந்த இரகசிய ஆவணத்தை இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தில் முன்னெடுத்த சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறும் கடமைப்பாடுகளை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு இந்தியாதான் மிகுந்த தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பின் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என இந்திய மனித உரிமைக் கழகம் வலியுறுத்தியுள்ளதையும், தி.மு.க போன்ற கட்சிகளின் ஆதரவை இந்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பதையும் குறித்துள்ள மேற்படி அறிக்கை, இவ் விவகாரத்தில் இந்தியா எத்தகையதொரு நிலைபாட்டை எடுக்கும் என்பது கவனத்துக்கு உரியது எனவும் தெரிவித்துள்ளது.
வன்னிப் போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என உறுதிப்படுத்தியுள்ள இந்த ஆவணம், சிறிலங்கா அரசாங்கம் மனித குலத்துக்கு எதிரான மனிதவுரிமை மீறல்கள், போர்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையால் விசேட நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும் எனவும், யூகோஸ்லாவியா, லைபீரியா போன்ற நாடுகளுக்காக உருவாக்கப்பட்டது போன்று இந்த நீதிமன்றம் அமையலாம் என்றும் இவ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் ஒப்பந்தத்தில் சிறிலங்கா கையெழுத்திடாத போதிலும், கொழும்பு மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வகைசெய்யும் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட குறைந்தது நான்கு முக்கியமான சர்வதேச ஒப்பந்தங்களில் சிறிலங்கா கையொப்பமிட்டுள்ளதாகவும் இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை ஆரம்பித்தால் இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகள் நேரடியாக எதிர்க்காது எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பாதுகாப்புப் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா, ரஸ்யா, சீனா ஆகிய நாடுகள் நடந்து கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார கொள்கை தொடர்பான இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் தொடர்பான Article 99 இற்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்ற விவகாரத்தை எடுத்துச் செல்ல செயலாளர் நாயகத்துக்கு அதிகாரம் உண்டு எனவும் இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கடப்பாடு ஐக்கிய நாடுகள் சபைக்கும், செயலாளர் நாயகத்துக்கும் இருப்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதுடன், எதிர்காலத்தில் மற்றைய நாடுகளைக் கையாளும் விதத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த பொறுப்புக் கூறும் பொறிமுறை அவசியமானதெனவும் இந்த ஆவணம் வலியுறுத்தியுள்ளது.
nanry ponguthamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக