மாகாணசபைகளுக்கு முழு அளவிலான காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்கும் வகையில் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் உயர்நிலைப் பிரதிநிதிகள் குழு சிறிலங்கா வரும்போது இதனை வலியுறுத்தவுள்ளதாகவும் அந்த வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு கொழும்பு வரும்போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்வையும் சந்திக்கவுள்ளது.
இந்தப் பிரதிநிதிகள் குழு கடந்த வெள்ளியன்று கொழும்பு வரவிருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் இவர்களின் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக கொழும்புக்கு புதுடெல்லி அறிவித்திருந்தது.
பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையில் எழுந்துள்ள பதற்றத்தினால் தான் இவர்களின் பயணம் பிற்போடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் எதிர்வரும் 26ம் நாள் அல்லது ஜுன் தொடக்கத்தில் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ளனர். எனினும் சரியான நாள் இன்னமும் உறுதியாகவில்லை.
நேற்று முன்தினம் புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவுடன் கலந்தாடிய பின்னரே இந்தியக் குழுவின் வருகை பற்றித் தீர்மானிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே, நாளை புதுடெல்லி செல்லவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசின் பயணம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காகவே, இந்தியத்தூதுவர் அசோக் கே காந்தா புதுடெல்லி பயணமாகியுள்ளார்.
இந்தியப் பயணத்தின் போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையில், போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளதற்கு எதிரான அறிக்கை ஒன்றை இந்தியாவின் மூலம் வெளியிட வைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தே, பீரிஸ் கலந்துரையாடவுள்ளார்.
எனினும் சிறிலங்காவின் இந்த வேண்டுகோளை இந்திய புறக்கணித்து விடும் சாத்தியங்கள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
http://www.puthinappalakai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக