வியாழன், 21 ஏப்ரல், 2011

சர்வதேச அரசியலும் நமது நம்பிக்கைகளும்

சர்வதேசத் தலையீடு என்பது நமது அரசியல் சூழலில் அவ்வப்போது பேசப்பட்டுவரும் ஒரு விடயம் ஆகும். இவ்வாறான பார்வைகள் குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவை மையப்படுத்தியதாகவே இருப்பதுண்டு. ஆனால் இவ்வகை அவதானங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமது மக்களை ஒருவகையான மாயைக்குள் அமிழ்த்தி வைக்கப் பயன்பட்டதேயன்றி உண்மைகளைச் சொல்லுவதாக அமைந்திருக்கவில்லை. இறுதியில், இவ்வாறான புரிதல்கள் அமெரிக்கா வந்து விடுதலைப்புலிகளை கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லும் என்று நம்புமளவிற்கு நீண்டு சென்றது. இது குறித்து புலம்பெயர் சூழலில் ஒரு சில வாதப்பிரதிவாதங்களும் சமீபத்தில் இடம்பெற்றன. புலிகளை நம்பவைத்து கழுத்தறுத்த அந்த மர்ம நபர்கள் யார்? என்றவாறான தலைப்புக்களில் சில கட்டுரைகளும் வெளிவந்தன.
ஒரு சில சாதாரண மனிதர்கள் இவ்வளவு பெரியதொரு அமைப்பை ஏமாற்றி அழித்துவிடலாம் என்று எழுதிவருபவர்கள் தங்களது அசட்டுத்தனம் குறித்து யோசிப்பதில்லை. கூடவே அதனை வெளியிட்ட ஊடகங்களும் தங்களது அறியாமை குறித்து கவலைப்படவில்லை. இவ்வாறான எழுத்துக்கள் திகில் திரைப்படங்கள் எடுக்கும் எண்ணமுள்ளோருக்குப் பயன்படக் கூடும். எனினும் அது பற்றிய விசாரணைகளில் நான் ஈடுபட விரும்பவில்லை தேவையேற்படின் பிறிதொரு பத்தியில் இது குறித்துப் பார்க்கலாம். இந்தப் பத்தி நமது ஆய்வுச் சூழலில் சர்வதேச அரசியல் குறித்து நிலவிவரும் மேலோட்டமான பார்வைகள் குறித்தே சிறிது அலச விழைகிறது.
சமீபத்தில் உலகத் தமிழர் பேரவை (GTF) சோனியாகாந்தி மற்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் றொபட் ஓ பிளேக் (United States Assistant Secretary of State for South and Central Asia, Robert Blake) ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியதைத் தொடர்ந்து, மீண்டும் நமது சூழலில் சர்வதேசத் தலையிடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. சோனியா காந்தியைச் சந்தித்த, நால்வர் அடங்கிய உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளே பின்னர் பிளேக்கையும் சந்தித்திருந்தனர், ஆனால் சோனியாவைச் சந்தித்ததை விமர்சித்தவர்கள் பின்னர் பிளேக்குடனான சந்திப்பை சிறந்த அரசியல் காய்நகர்த்தலென பாராட்டினர்.
இதன் தொடர்ச்சியாக, உலகத் தமிழர் பேரவை றோவின் நிகழ்சி நிரலுக்குள் சென்றுவிட்டதாகவும் சில புலம்பெயர் ஊடகங்கள் விமர்சித்திருந்தன. உலகத் தமிழர் பேரவையுடனான சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த பிளேக் இது சாதாரணமான சந்திப்பே என்றும் அமெரிக்கா பிரிவினையை ஆதரிக்கவில்லை, புலம்பெயர் பிரதிநிதிகள் அரசுடன் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டுமென்றும் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து வெளிவந்ததும் அதுவரை சிறந்த காய்நகர்த்தலாகத் தெரிந்த விடயத்தின் மீது தமிழ்நெற் தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
மேற்படி இரண்டு சந்திப்புக்களும் அடிப்படையில் மிகவும் சாதாரணமானவை. ஆனால் இதனை அடியொற்றி வெளிவந்த கருத்துக்கள் சர்வதேச அரசியல் குறித்த நமது அரை குறைப் பார்வைக்கு சிறந்த உதாரணமாகும். எம்மிடம் சர்வதேச அரசியல் குறித்து ஒரு தெளிவான பார்வை இல்லாமையின் விளைவே ஒரு சாதாரணமான சந்திப்பை வைத்துக் கொண்டு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம்.
சர்வதேச அரசியல் குறித்தும் அதன் நகர்வுகள் குறித்தும் தமிழ்ச் சூழலில் போதிய ஆய்வுகள் இதுவரை இடம்பெற்றதில்லை. இதன் காரணமாகவே இது குறித்து அறிவார்ந்த உரையாடல்களும் நம் மத்தியில் நிகழவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் ஒரு மிகச் சிறிய இயக்கமான விடுதலைப்புலிகள் உலகின் பலமான நாடுகளில் ஒன்றான, குறிப்பாக பிராந்திய வல்லரசான இந்தியாவை தோற்கடித்துவிட்டனர், அவர்களை இராணுவ ரீதியில் முறியடித்துவிட்டனர் என்னும் பிரச்சாரம் நமது சூழலில் மிகவும் உணர்சி பூர்வமாகச் சொல்லப்பட்டு வந்தது. 1962ல் இடம்பெற்ற சீன-இந்திய யுத்தத்திற்கு பின்னர் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில்தான் எற்பட்டது என்றவாறான அபிப்பிராயங்களே நம் மத்தியில் இருந்தது. இங்கு ஒரு சம்பவத்தை அடியொற்றி உணர்ச்சிகரமாக சிந்தித்தோமேயன்றி அதனால் நிகழப் போகும் விளைவுகள் என்ன? அது நமது எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்களில் என்னவகையான தாக்கங்களை விளைவிக்கும் என்றவாறெல்லாம் நாம் யோசித்திருக்கவில்லை. இறுதியில் நமது கதை கருங்கற் பாறையில் தலையை முட்டியவன் கதையானது. இது சர்வதேச அரசியல் குறித்து நாம் கொண்டிருந்த அரை குறையான பார்வைக்கு சிறந்த உதாரணமாகும்.
சர்வதேச அரசியல் என்றால் என்ன என்பதற்கு துல்லியமானதொரு வரைவிலக்கணத்தை வழங்குவது சற்று கடினமான ஒன்றாகும். ஆயினும் பொதுவாக சர்வதேச அரசியல் என்பதை, பலம் பொருந்திய நாடுகளுக்கிடையில் நிகழ்ந்துவரும் உறவு- முரண்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பென்று குறிப்பிடலாம். இந்தப் பின்புலத்தில் பார்த்தால் நமது அரசியல் என்பது அடிப்படையிலேயே சர்வதேச அரசியல்தான். அது எங்களுடைய பார்வையில் எங்களுக்கான அரசியலாகத் தெரியும் அதேவேளை அதிகாரத்துவ போட்டியில் தம்மைச் சதா ஈடுபடுத்திக் கொண்டுவரும் சக்திகளின் பார்வையில் அவர்களுக்கான அரசியலாகவே தெரியும். இதற்கு சிறந்த உதாரணமாக இலங்கை பிரச்சனையில் இந்தியா எடுத்துக் கொண்ட அக்கறையை எடுத்து நோக்கலாம்.
தனது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலான அந்நிய சக்திகள் இலங்கையில் காலூன்றுகின்றன என்ற அச்சத்தையே இந்தியா தனது நேரடித் தலையீட்டிற்கான காரணமாகக் காட்டியது. கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே போராளிக் குழுக்களுக்குப் பயிற்சியும் அளித்தது. இது குறித்து இந்தியாவைத் திட்டித் தீர்ப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இந்தியாவை விளங்கிக் கொண்டு நமது அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டும் என்பதுதான் இங்கு அடிக்கோடிட வேண்டிய விடயமாகும். இதனை விளங்கிக் கொண்டு நமது தலைமை செயற்பட்டிருந்தால் தமிழ் மக்கள் இன்றைய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதே சிலரது ஆணித்தரமான வாதமாக இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும், இப்படியானதொரு கருத்தையே சமீபத்தில் எனக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு சிந்தித்தால் அவ்வாறான அபிப்பிராயங்கள் தவறானவை அல்ல என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கும்.
2000இல் நோர்வேயினூடாக இடம்பெற்ற மேற்கின் தலையீடும் இதே போன்ற ஒன்றுதான். நோர்வேயின் தலையீடு இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஒரு சுமூகமான தீர்வைக் காண்பது என்றே சொல்லப்பட்டது எனினும் இதில் மேற்கின் குறிப்பாக அமெரிக்காவின் நலன்சார் அணுகுமுறை என்ன என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் நலனற்ற தலையீடு சாத்தியமற்ற ஒன்றாகும் என்பதைத்தான் இங்கு நாம் குறித்துக் கொள்ள வேண்டும்.
விடுதலைப்புலிகள் ஆனையிறவு (பாலசிங்கத்தின் வார்த்தையில் - அமெரிக்க இராணுவ நிபுணர்களால் வெல்லவே முடியதாதென்று கருதப்பட்ட) படைத்தளத்தை வீழ்த்தி படைவலுச் சமநிலையை பேணிக் கொண்டதாகச் சொல்லப்பட்ட பின்புலத்திலேயே மேற்கின் தலையீடு நிகழ்கிறது. எனினும் பாலசிங்கம், 1998 களிலேயே நோர்வே, செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக தனது சிகிச்சைக்காக உதவி செய்ததாகவும் எனினும் சந்திரிக்கா அரசின் கடுமையான நிபந்தனைகளால் அது பலனளிக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றார் (போரும் சமாதானமும்). அவ்வாறாயின் ஆனையிறவிற்கு முன்னரே நோர்வே புலிகளுடன் உறவினை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.
நோர்வே ஏன் அவ்வாறு முயன்றது? சீன அதிகார மையத்தை நோக்கிய அமெரிக்காவின் கரிசனை, முன்னர் எப்போதுமில்லாத அளவில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஏற்பட்டிருந்த கூட்டு, புலிகள் இராணுவ ரீதியாக வெற்றிகளை பெறுவது குறித்த இந்தியக் கவலை - இந்தப் பின்புலத்திலேயே நோர்வே புலிகளுடன் உறவினை ஏற்படுத்திக் கொள்ள முயல்கின்றது. மேலும் பாலசிங்கத்தின் தொடர்புகள் மூலம் அனுசரணையாளராக வருவதற்கான புலிகளின் சம்மதத்தையும் நோர்வே பெற்றுக் கொள்கின்றது. இவற்றை திரட்டி நோக்கி இவைகள் எல்லாம் ஏன் என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் - இதனைத்தான் நாம் சர்வதேச அரசியல் எனலாம்.. எங்களுக்கு, எங்களுடைய அரசியல் பிரச்சனையாகத் தெரியும் ஒன்று எவ்வாறு சர்வதேச அரசியலாகவும் இருக்கிறது என்பதை இப்போது ஒருவரால் விளங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் நமது சூழலிலோ சர்வதேச அரசியல் குறித்து மிகவும் அப்பாவித்தனமான நம்பிக்கைகளே நிலவிவருகிறது. சர்வதேச அரசியல் நகர்வுகள் குறித்து ஆழ்ந்து அறிந்து கொள்ள முயலாத நமது புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பலர், ஹிலாரி கிளின்டன் தேர்தல் காலத்தில் - புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பார்க்க முடியாது என்று கூறியதைக் கொண்டு அமெரிக்கா புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் என்று அசட்டுத்தனமாக நம்பினர். இதுவே பின்னர் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பாக வளர்ந்து, பின்னர் ஒபாமா வந்து புலிகளைக் காப்பாற்றுவார் என்றவாறான நம்பிக்கைவரை நீண்டு சென்றது.
தேர்தல் காலத்தில் ஒருவர் சாதாரணமாகக் குறிப்பிடும் அபிப்பிராயத்தை வைத்துக் கொண்டு அமெரிக்காவின் கொள்கையை மதிப்பிடும் நிலையில்தான் நமது சர்வதேச அரசியல் குறித்த அறிவு இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. அண்மைய விக்கிலிக்ஸ் தகவலொன்றின்படி, புலிகளுக்கு எதிரான அமெரிக்க-இந்திய கூட்டு நடவடிக்கை 2006இலேயே தொடங்கிவிட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
சமாதான ஒப்பந்த காலத்தில் நம்மவர்கள் அமெரிக்க எதிர்ப்பு அரசியலைத் தூக்கிப் பிடித்தனர். இது பற்றி ஒரு ஆய்வாளர் சொல்லும் போது இவர்கள் சேகுவேராவையும் விழுங்கிவிடுமளவிற்கு அமெரிக்க எதிர்ப்பு அரசியலைப் பேசினர் என்பார். ஆனால் அவ்வாறானவர்களே தோல்வியின் விளிம்பில் நின்றபோது அமெரிக்க உதவியை நாடினர். இவையெல்லாம் நமது புரிதலிலுள்ள குறைபாடே ஒழிய அமெரிக்காவின் பிரச்சனையல்ல. இது குறித்து இந்தியா அல்லது அமெரிக்க எதிர்ப்பு அரசியலை தூக்கிப்பிடிப்பதாலும் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. நாங்கள் எதிர்ப்பதால் அவர்கள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிடப் போவதுமில்லை.
உலக அதிகாரத்தை வசப்படுத்தும் போட்டி என்பது ஒரு முடிவற்ற பயணம் (Endless journey). இதில் நாம் ஒருபோதுமே பங்கு கொள்ள முடியாது. இதில் நாம் செய்யக் கூடியதெல்லாம் அவர்களது காய்நகர்த்தல்களில் நமது அரசியல் எங்கு சந்திக்கின்றது. அவர்களது நலன்கள் என்ன என்பதை விளங்கிக் கொண்டு அவர்களது நலனில் நமது நலனையும் இணைத்துக் கொள்வதுதான். இதனைத்தான் வெளிவிவகாரக் கொள்கையில் நலன்கள் சந்தித்துக் கொள்ளும் புள்ளி (Convergence of interest) என்பர். இதனை விளங்கிக் கொள்ளும் புத்திசாலித்தனம்தான் சர்வதேச அரசியலைக் கையாளுவதற்கான அடிப்படையாகும்.

யதீந்திரா pongutamil inaiyam

கருத்துகள் இல்லை: