சனி, 16 ஏப்ரல், 2011

விடுதலைப் புலிகளை உலகம் மட்டுமா கைவிட்டது?


விதுல் சிவராஜா

போராளியாக முன்னர் செயற்பட்ட பெண்ணொருவர் சில நாட்களுக்கு முன்னர் (2011-03-20) எங்களின் வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டு பிள்ளைகளின் தாய். பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுப்பதற்கு வழியில்லை. அரசாங்கம் கொடுத்து வந்த நிவாரணம் ஆறுமாதத் திட்டத்துடன் நிறுத்தப்பட்டு விட்டது. அதனால், சாப்பாட்டுக்கே இப்போது பஞ்சம். பிள்ளைகள் பிட்டு அவித்துத் தரும்படி கேட்டு அழுகிறார்கள். பிள்ளைகள் கேட்பதைக் கொடுப்பதற்கு வழியில்லை. அதனால், கொஞ்சம் கோதுமை மா கடனாக அல்லது உதவியாக வாங்குவதற்காக வந்திருந்தார்.

இந்தப் பெண் போராளி 1988 இல் இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர். 2007 வரை போராளியாகவே செயற்பட்டவர். ஒரு போராளியைத் திருமணம் செய்தபின், இரட்டைக் குழந்தைகள் பிறந்து, அவர்களைப் பராமரிக்க முடியாத காரணத்தினால், இயக்கம் இவரை விடுவித்திருந்தது. இதற்குக் காரணம் இவருடைய வலது கை சீராக இயங்க முடியாததே ஆகும்.

வந்தவர் கணவரைத் தேடுவதைப் பற்றிச் சொன்னார். அது பேரலைச்சல் மிக்க பெரிய சோகக் கதை.

போரின் இறுதி நாட்களில் சரணடைந்திருந்த கணவரைப் பற்றி எந்தத் தகவலுமே இல்லை. அதனால், தேடிக் கொண்டே இருக்கிறார். காணாமற்போன கணவரைத் தேடுவதென்றால் அது சாதாரணமானதல்ல.

ஆனால், வேறு வழியில்லை, தேடத்தான் வேணும். ஐ.ஸி.ஆர்.சி யில் பதிவு, பொலிஸில் பதிவு, வவுனியாவில் உள்ள ஜோசப் காம்பில் பதிவு, கச்சேரியில் பதிவு என்று ஏராளம் பதிவுகள். போதாக்குறைக்கு ஜனாதிபதிக்குக் கருணை மனு, பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்சவுக்குக் கடிதம், புனர்வாழ்வு அமைச்சருக்குக் கடிதம், விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியான கருணா ஆகிய மீள்குடியேற்றத் துணை அமைச்சருக்குக் கடிதம், இப்போது கே.பி என்கிற குமரன் பத்மநாதனுக்கும் கடிதம், டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கடிதம், வன்னிக்கு வரும் நாமல் ராஜபக்சவுக்குக் கடிதம் என்று தொடர்ந்து கடிதங்களும் கருணை மனுக்களும் எழுதிக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கு முடிவேயில்லை.

கடலில் போட்ட சிறு கல்லைப் போல கிடைக்குமா இல்லையா என்று தெரியாமலே இந்தத் தேடுதல் நடந்து கொண்டிருக்கிறது.

இவர் முன்னர் போராளியாகச் செயற்பட்டிருந்தபோது போர்க்களத்தில் கடுமையான காயங்களுக்குள்ளாகி இப்போது வலது கை சீராக இயங்க முடியாத நிலைக்குள்ளாகி விட்டது. கடிதம் கொடுக்கப்போகும் இடங்களில் இந்தக் கையைப் பார்த்து விட்டு 'கையில் என்ன நடந்தது?' என்று கேட்கிறார்கள்.

இதற்கு என்ன பதிலைச் சொல்ல முடியும் இப்போது? ஒருபோது தான் போராளியாக இருந்ததையும் அப்போது தான் செய்த பெரும் சமர்களைப் பற்றியும் அதிலே ஏற்பட்ட விழுப்புண்ணைப் பற்றியும் சொல்ல முடியுமா?

அல்லது, இப்படியெல்லாம் காயப்பட்டு ஒரு போராட்டத்தில் ஈடுபட்ட பின்னும் இப்படி வந்து உங்கள் காலடியில் காணாமற்போன கணவரைப் பற்றி அதிலும் கண்முன்னே சரணடைந்து காணாமற்போன கணவரைப் பற்றி கெஞ்சிக் கேட்கவேண்டியிருக்கிறதே! அப்படிக் கெஞ்சிக் கேட்டபின்னாவது ஒரு சிறு பதில் அல்லது விவரமாவது கிடைக்கிறதா?

எதுவுமே இல்லை. சரணடைந்த கணவர் இருக்கிறாரா இல்லையா என்று எவரும் சொல்ல மாட்டார்கள். பார்க்கிறோம் என்று பொதுவாகச் சொல்லி விடுகிறார்கள். ஐ.ஸி.ஆர்.சி கூட இதற்குப் பதிலளிப்பதில்லை. நாங்கள் விவரங்களைப் பதிகிறோம். மற்றும்படி எதுவும் எங்களால் செய்ய முடியாது' என்பதே ஐ.ஸி.ஆர்.சியின் பதில்.

ஆனாலும் என்ன செய்ய முடியும்? 'அப்பா எப்போது வருவார்?' என்று பிள்ளைகள் கேட்கிறார்கள். எட்டு வயதுப் பிள்ளைகளுக்கு கொஞ்சம் விவரம் தெரியும். அதிலும் தகப்பன் சரணடைந்ததைப் பிள்ளைகள் அறிவார்கள். பிள்ளைகள் அழுது கொண்டிருக்கும்போதே படையினர் தந்தையை அழைத்துப் போனார்கள்.

அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியாத நிலையில் அப்பாவைப் பற்றிக் கேட்கும் பிள்ளைகளுக்கு இந்தப் பெண் என்ன பதிலைச் சொல்லுவாள். அதைவிடப் பசிக்குது, சாப்பாட்டைத் தாருங்கள் என்று கேட்பதையே இப்போது இவளால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. சகித்துக் கொள்ளவும் முடியவில்லை.

எனினும் இந்தப் பெண் இப்போது கூலி வேலைக்குப் போகிறார். அங்கே ஒழுங்காக வேலை செய்ய முடியாத நிலை. காரணம் கை. ஆனால், கையைப் பார்த்தால் வேலை செய்ய முடியாது. வேலை செய்யவில்லை என்றால், பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட முடியாது. அவர்களுடைய பாடசாலைத் தேவைகளை நிறைவேற்ற முடியாது. அதற்காகக் கூலி வேலைக்குப் போகிறாள்.

இவளுக்குக் கூலிவேலை பழக்கமில்லை. படிக்கும் காலத்திலேயே, 17 வயதிலேயே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்துக்குப் போய்விட்டாள். இவளைத் தொடர்ந்து இவளுடைய இன்னொரு தம்பியும் இயக்கத்துக்குப் போனான். பிறகு அக்காவின் மகள். அதற்குப் பின்னர் பெரியண்ணாவின் மகன்கள் இருவர். ஓரு தங்கையின் கணவர். இப்படியே இந்தக் குடும்பம் போராளி குடும்பமாகி, மாவீரர் குடும்பமாகி எல்லோரும் மண்ணுடனேயே இருந்து விட்டார்கள். மட்டுமல்ல, இவர்கள் வன்னிக்கு வெளியே வாழமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டதால், எல்லோருமே அகதிகளாகிவிட்டார்கள்.

போர் முடிந்தபோது இவர்களில் பலர் இறந்து விட்டனர். இவர்களின் குடும்பத்தில் மொத்தமாக எட்டுப்பேர் இந்தப் போரினால் இறந்து விட்டார்கள். ஆறுபேர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். யாரும் யாருக்கும் உதவ முடியாத நிலை. எல்லோருக்கும் உதவிகள் தேவை என்ற நிலை.

ஆகவே இவள் கூலி வேலைக்குப் போகத்தான் வேணும். இயக்கத்தில் இருந்தபோதோ, பின்னர் கணவர் போராளியாக இருந்தபோதோ இவள் பிற வேலைகளுக்குப் போகவேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனாலும் மருத்துவப் பணி செய்யக் கூடியவள். கணக்காய்வு செய்வாள். ஆனால், முறைப்படியான கல்வியைக் கற்றதற்கான சான்றுப் பத்திரங்கள் இல்லை. படிப்பைப் பாதியில் நிறுத்தியவளிடம் அவை எல்லாம் எப்படிக் கிடைக்கும்?

ஆனால், இயக்கத்தில் இவள் இருந்த போது இவளுடைய மருத்துவப் பணியையும் பங்களிப்பையும் பாராட்டிப் பரிசுகள் வழங்கியிருக்கிறார்கள். சான்றுப் பத்திரங்கள் வாங்கியிருக்கிறாள். ஒரு தடவை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமே இவள் பரிசைப் பெற்றிருக்கிறாள்.

அதெல்லாம் இப்பொழுது இவளுக்குப் பயன்படவில்லை. ஏறக்குறைய இருபது ஆண்டுகால போராட்ட வாழ்க்கைக்கு முற்றிலும் வேறான ஒரு யதார்த்தத்தில் இப்பொழுது தான் வந்து நிற்கிறேன் என்பதை இவள் உணர்ந்தபோது அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், பிள்ளைகள் இரண்டுக்காகவும் அவள் உயிர் வாழத்தான் வேணும். கூலி வேலைக்குப் போகத்தான் வேணும். பிச்சைக்கோ, பிறருடைய உதவிக்கோ, தயவுக்கோ அவள் செல்ல வேண்டிய யதார்த்தம்.

முன்னர் - சமாதானக் காலத்தில் அவளுக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் அறிமுகமாகிய சில நண்பர்கள் - போராட்டத்தையும் இயக்கத்தையும் ஆதரிப்பவர்களாக இருந்தார்கள். போர் முடிந்து அவள் தன்னுடைய பிள்ளைகளோடு அகதி முகாமில் இருந்தபோது அவர்களுடைய விவரங்களை மிகக் கஸ்ரப்பட்டுத் தேடித் தொடர்பு கொண்டிருக்கிறாள்.

ஒரேயொருவரைத் தவிர, வேறு யாரும் அவளுக்குப் பதிலளிக்கவும் இல்லை. எந்த விதமான உதவிகளும் செய்யவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவள் தோற்றுப்போன இயக்கமொன்றின் பிரதிநிதி.

ஆகவே இந்த 'முன்னாள்' போராளி (போராளி என்றால் அதில் முன்னாள் - இந்நாள் - பின்னாள் என்ற பேதங்கள் எல்லாம் கிடையாது. ஆனால், சிலர் வசதி கருதி முன்னாள் போராளிகள் - ஓடமுடியாத குதிரைகள் - என்றே கருதுகிறார்கள்) இப்போது இப்படிக் கூலி வேலைக்குப் போகவேண்டியிருக்கிறது. முடியாத போது வேறு வழியில்லாமல் யாரிடமாவது கையேந்த வேண்டியிருக்கிறது.

கூலி வேலைக்குப் போவதொன்றும் வெட்கக்கேடான செயல் அல்ல. ஆனால், இவளுடைய கையும் காயப்பட்ட உடலும் கூலி வேலையை கடினமான வேலையை அனுமதிக்கவில்லை. இதுதான் இப்போது இவளுக்குப் பிரச்சினை.

00

இவரும் ஒரு போராளியே. சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த போது வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். அப்போது இவரை வெளிநாடுகளில் பலரும் விரும்பி வரவேற்றார்கள். மதிப்பளித்தார்கள்.

பின்னர் யுத்தத்தின் இறுதி நாட்களில் இவருடைய ஒரு கால் பாதிக்கப்பட்டு விட்டது. ஆனால், உயிர் தப்பி விட்டார். பிறகு படையினரிடம் சரணடைந்து, அவர்களுடைய விசாரணைகளை எல்லாம் எதிர்கொண்டு, அதன் விளைவாக 20 மாதங்கள் வரையில் சிறையிருந்துவிட்டு அண்மையில் வெளியே வந்திருக்கிறார். வந்தவர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்குப் போனார்.

போனவருக்குக் காத்திருந்தன பல விசயங்கள். பெரும்போரில் சிக்கி, உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்து மீண்டவரை வீட்டிலே வைத்துப் பார்ப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஒன்றிரண்டு நண்பர்கள் வந்து ஒரேயொரு தடவை பார்த்துவிட்டுப் போனர்கள். பிறகு அவர்களுடைய தொடர்பும் இல்லை. வரவும் இல்லை.

சொந்தக்காரர்கள் எல்லாம் கோவிலுக்குப் போகும் இவருடைய அம்மாவிடம் இவரைப் பற்றி விசாரித்தார்கள். பிறகு அம்மாவோடு அவர்கள் கதைப்பதே குறைவாகி விட்டது. நமக்கேன் வீண் வம்பு என்ற நிலையில், எல்லோரும் தூர ஒதுங்கிக் கொள்கிறார்கள். அம்மா கோவிலுக்குப் போகிற நேரம் இப்பொழுது ஆட்கள் வருவது குறைவு.

மட்டுமல்ல, இவருடைய வீட்டுக்கு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து போவதும் குறைந்து விட்டது. அதனால், ஏறக்குறைய இவர்களின் வீடு இப்போது தனிமைப்பட்டுக் கொண்டு வருகிறது.

நண்பர் வெளியே போக நினைத்தார். ஆனால் எங்கே போவது? யாரைச் சந்திப்பது? யாரும் இவரை அழைப்பதற்கோ வரவேற்பதற்கோ தயாரில்லை. அதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டார்.

வந்த புதிதில் சிலர் தொலைபேசியில் கதைத்தார்கள். இப்போது அதுவும் குறைந்து விட்டது. இதைப் பார்த்து விட்டு இவரும் வெளி ஆட்களுடன் தொடர்பு கொள்வதைக் குறைத்து விட்டார்.

ஒரு காலம் விடுதலைக்காகச் சிறகை அசைக்கச் சென்ற இந்தப் பறவை இப்பொழுது நான்கு சுவர்களுக்குள்ளும் நான்கு வேலிகளுக்குள்ளும் சிறைப்பட்டுள்ளது.

வாரத்துக்கு ஒரு தடவை படையினரின் முகாமுக்குச் சென்று பதிவைச் செய்து வருவதற்கு மட்டும் இவர் வெளியே போய்வருகிறார். மற்றும்படி வீடே கதி.

வந்தவருக்கு வெளிச் சூழல் புரியவேயில்லை. எல்லாமே புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது. வெளியுலகுக்கு அதிகமதிகம் செய்திகளைச் சொல்லி வந்த இந்தப் போராளி, இன்று வெளியுலகின் 'நிலவரம்' என்னவாக இருக்கிறது என்று தெரியாத நிலையில் இருக்கிறார்.

இப்படியே எத்தனை காலம்தான் இருக்க முடியும்? இப்படி இருக்க வேண்டும் என்ற விதிக்கு இவர் எப்படி முழுப்பொறுப்பாளியாக முடியும்?

ஒரு தேசமே தன்னுடைய உறவுத் தளம் என்று சொல்லி வந்தவர், ஒரு இனமே தனது உறவுகள் என்று எப்பொழுதும் சொல்லும் இவர் இப்போது வாய் திறப்பது சாப்பிடுவதற்கும் ஏதாவது தன்னுடை அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் மட்டுமே. மற்றும்படி ஒரு நிலவரமும் தெரியவில்லை.

ஆனால் வானம் அப்போதும் விரிந்தே இருந்தது. இப்போதும் அது விரிந்தே இருக்கிறது.

00

இவளுடைய கணவரைப் பற்றிய எந்தத் தகவலுமே இல்லை. அவர் ஒரு போராளியாகவே செயற்பட்டவர். முள்ளிவாய்க்கால் பகுதியும் படையினரிடம் வீழ்ச்சியடைந்த பிறகு இவர்கள் தங்களுடைய இரண்டு பிள்ளைகளுடன் சனங்களோடு இணைந்து படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

ஓமந்தை வரை பஸ்வண்டியில் கொண்டு வரப்பட்ட இவர்கள் பின்னர் அடையாளங்காணப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் பிள்ளைகளும் இவளும் கதறி அழுது கொண்டிருக்கும்போதே படையினர் கணவரைப் பிடித்துச் சென்றனர். அதற்குப் பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. தொடர்புகளும் இல்லை.

படையினரிடம் சரணடைய விரும்பாத அப்படிச் சரணடைந்தாலும் அவர்கள் தன்னையோ தன்னுடைய குடும்பத்தினரையோ சும்மா விட்டு வைக்கப்போவதில்லை என்று கருதிய அந்தப் போராளி எல்லோரும் ஒன்றாகவே செத்து மடியலாம் என்று முள்ளிவாய்க்காலில் தன்னுடைய மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால், மூன்று பிள்ளைகளையும் இந்த முடிவுக்குட்படுத்த இந்தப் பெண் - அவருடைய மனைவி விரும்பவேயில்லை. மட்டுமல்ல, மரண அபாயங்கள் நிறைந்திருந்த சூழலில் 70 வயதிலும் தங்களுக்காகவே காத்துக் கொண்டும் தங்களோடேயே அலைந்து கொண்டுமிருந்த இந்தப் பெண்ணின் தந்தையையும் இந்தப் பயங்கரமான முடிவுக்குக் கொண்டு போக இவள் விரும்பவேயில்லை.

'நாங்கள் செத்துப் போகலாம். ஆனால், பிள்ளைகளையும் வயதான தந்தையையும் எதற்காக தாங்கள் மரணத்துக்குத் தள்ள வேணும்?' என்ற கேள்வியை இவள் கணவனிடம் கேட்டு அவரை வற்புறுத்தி அந்தப் பயங்கரமான முடிவிலிருந்து மீட்டாள்.

ஆனாலும் படையினரிடமிருந்து தன்னுடைய கணவரை இவளால் மீட்க முடியாமற் போய்விட்டது. அவர்கள் அவரைக் கைது செய்து கொண்டு போகும்போது பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவரைப் போல வேறு ஆட்களும் அப்படி அடையாளங் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அப்படிக் கைது செய்து கொண்டு போன எவரைப்பற்றியும் இதுவரை அந்தக் குடும்பங்களால் அறிய முடியவில்லை.

காணாமற்போய்விட்ட நிலையில் இருக்கும் தன்னுடைய கணவரைத் தேடி இவள் பல படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறாள். போக நினைத்திராத இடங்களுக்கெல்லாம் போய்வந்து கொண்டிருக்கிறாள்.

எட்டு வயதுடைய மூத்த பிள்ளை அப்பா வந்த பிறகு நாங்கள் 'தோசை சுட்டுச் சாப்பிடுவம் அம்மா. அதுக்குப் பிறகு ஐஸ்கிறீம் நீங்கள் வாங்கித் தாங்கோ' என்று சொல்கிறான்.

ஒரு நாள் கடையில் பாண் வாங்குவதற்காக இந்தப் பெண் - தாய் - கடைக்குப் போனபோது அங்கே இருந்த பூந்தியைப் பார்த்து விட்டு 'அது என்னம்மா? அதை வாங்கித் தாங்கோ எண்டு நான் கேட்கயில்லை அம்மா, ஆனா, அது என்னம்மா?' என்று கேட்டிருக்கிறான்.

இந்த வார்த்தைகளைக் கேட்டபோது இவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. காலம் இவளைக் கிழித்தெறிந்திருக்கிறது.

அப்பா (இவளுடைய கணவர்) இருந்த காலத்தில்....

போராட்ட வாழ்வின் நெருக்கடிகளும் சுமைகளும் இருந்தபோதும் இப்படியெல்லாம் இவள் வேதனைப்பட்டதில்லை. ஏன், யுத்தம் தீவிரமடைந்து, கணவர் போர்க்களத்தில் நின்றபோது, தன்னுடைய மூன்று மாதக் கைக்குழந்தையோடு, பதுங்கு குழியை அமைப்பதற்கே முடியாதிருந்த அந்த நெருக்கடி நிலையிற்கூட இவள் இப்படிக் கலங்கியதில்லை.

ஆனால், இன்றைக்கு நிலைமை இப்படி ஆகியிருக்கிறது.

'அம்மா நான் பள்ளிக்கூடத்தில தாற சோத்தைச் சாப்பிடுவனம்மா. எனக்கொண்டும் வேண்டாமம்மா. எங்கட ரீச்சர் நல்லவா. அவ எனக்குக் கொப்பியெல்லாம் வாங்கித்தருவா அம்மா. அப்பா வரேக்க நான் நல்லாப் படிச்சுப் பாஸ் பண்ணியிருப்பன் அம்மா' என்று அந்த எட்டுவயது மகன் தாயை ஆறுதற் படுத்துகிறான். ஆனால், அவனின் இந்தக் கதையைக் கேட்டுத் தாயால் ஆறுதலடைய முடியவில்லை. பதிலாக இன்னும் வேதனையே பெருகுகிறது.

மூன்று பிள்ளைகளைக் காப்பாற்றவேணும். கைது செய்யப்பட்ட கணவரைப் பற்றிய தகவலை அறிய வேணும். அவரை எப்படியாவது மீட்டுவிட வேணும். கஞ்சியோ கூழோ அல்லது கொட்டிலோ குடிசையோ எது கிடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், எல்லாரும் ஒண்டாக இருக்கும் ஒரு நாள் வரவேணும்... என்று அழுகின்றாள் இந்தப் பெண்.

ஒரு இயக்கத்தின் வீழ்ச்சி என்பது எத்தனை விதமான நிலைமைகளையெல்லாம் உருவாக்கி விட்டிருக்கிறது?

00

'அண்ணை எப்பிடியிருக்கிறியள்? உங்களைச் செத்துப் போச்சுதெண்டு சொன்னாங்கள். பிறகுதான் கேள்விப்பட்டன் நீங்கள் தப்பியிருக்கிறியள் எண்டு' எனச் சொல்லிக் கொண்டு வந்தார் ஒரு போராளி. முன்னர் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்தவர். அதற்கு முன்னும் பின்னும் பெரும் சமர்களில் எல்லாம் பங்கெடுத்துப் பேரெடுத்தவர்.

முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டு, படையினரால் கைது செய்யப்பட்டு, சிறை, புனர்வாழ்வு என்ற தடுப்பு முகாம் வாழ்க்கை எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு இப்போது வெளியே விடுதலையாகி வந்திருக்கிறார்.

வெளியே வந்தவருக்குத் தொழில் இல்லை. வருமானம் இல்லை. சொந்தக்காரர்களின் உதவியோ ஆதரவோ பெரிதாகக் கிடையாது. அவருக்குத் தெரிந்திருந்தது 'ட்றைவிங்' (வாகனங்களை ஓட்டுவது) மட்டும்தான். ஆனால், அதற்கும் சாரதி அனுமதிப்பத்திரம் அவரிடமிருக்கவில்லை. முன்னர் அதற்கான அவசியம் இருக்கவும் இல்லை. அதனால் அவர் அதனை எடுத்திருக்கவில்லை.

இப்போது அதை எடுத்தால் ஏதாவது செய்யலாம் என்பதால், சாரதிப் பயிற்சிக்குப் போய் அனுமதிப் பத்திரத்தை எடுத்து, டிப்பர் என்ற கனரக வாகனம் ஒன்றை ஓட்டுகிறார். சுமாரான வருமானம். ஆனால், இந்தத் தொழிலைத் தொடர்ச்சியாக இவரால் செய்ய முடியவில்லை. முதுகில் - முள்ளந்தண்டோடு சேர்ந்திருக்கும் துப்பாக்கிக் குண்டொன்று வண்டியை ஓட்டுவதற்கு அனுமதிக்கவில்லை. அது வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால், வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டியிருக்கிறது.

மட்டுமல்ல, இந்த வேலையை இவரால் தொடர்ந்து செய்ய முடியும் என்றும் தோன்றவில்லை.

எனவே வங்கியொன்றில் கடனொன்றை வாங்கி, ஏதாவது தொழிலொன்றைச் செய்வதைப் பற்றிச் சிந்திக்கிறார். வங்கியும் கடன் கொடுப்பதற்குத் தயார். ஆனால், கடனைப் பெறுவதற்கு இரண்டு பேருடைய பிணைகள் வேணும்.

தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் சென்று கேட்டிருக்கிறார். எல்லோரும் ஒவ்வொரு சாட்டுகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்கிறார்கள். காரணம், தாங்கள் சாட்சிக்குக் கையெழுத்துப் போட்டால், படையினரின் புலனாய்வாளர்கள் வந்து, 'இவரை உங்களுக்கு எப்படித் தெரியும்? அப்படியென்றால், எவ்வளவு காலமாகத் தெரியும்? உங்களுக்கும் இவருக்கும் என்ன உறவு?' என்ற மாதிரிக் கேள்விகளைக் கேட்டு தங்களையும் இவரையும் தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள் என்ற பயமே.

இதைவிட, இவருக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால், இவர் கைது செய்யப்பட வேண்டியிருந்தாலோ அல்லது, திடீரென இவர் வெளியே எங்காவது போய்விடுவாரோ என்ற சந்தேகத்தினாலும் பலரும் தயங்குகிறார்கள்.

இந்த நிலையில் தன்னை நன்றாகவே தெரிந்த, தான் பொறுப்பில் இருந்தபோது தன்னிடம் வந்து உதவிகளைப் பெற்ற ஒரு உயர் அதிகாரியிடம் போய் தன்னுடைய நிலைமையைச் சொல்லியிருக்கிறார். அவர் இவரையே தெரியாது என்று சொல்லிவிட்டார்.

இந்தக் கதையை என்னிடம் சொன்ன இவர், 'அண்ணை நாங்கள் சாகாமல் விட்டதுதான் பிழையண்ணை. செத்திருந்தால் இப்ப இப்பிடியெல்லாம் கிடந்து அவதிப்படவும் அவமானப்படவும் வேண்டியதில்லை. அவர் எனக்கு உதவி செய்யாமல் விட்டதை நான் குறையாக நினைக்கயில்லை. ஆனால், இப்பிடியெல்லாம் பழகிப் போட்டு என்னையே தெரியேல்லை எண்டதை நினைக்கத்தான் எனக்கு வேதனையாக் கிடக்கு. நாங்கள் இப்ப வேதனையாலும் அவமானத்தாலும் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறமண்ணை' என்றார்.

இப்போது சொல்லுங்கள்.. விடுதலைப் புலிகளை உலகம் மட்டுமா கைவிட்டது?

00

nanry PONGUTAMIL INAIYAM

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஐயோ நெஞ்சு பொறுக்குதில்லை அண்ணை
சேரமான் என்ற பிணிந்தின்னி மிருகமும் அதன் கூட்டாளிகளும் பிழைப்பு நடத்தவா எங்கடை மாவீரச் செல்வங்களும் பேராளிகளும் தங்களை அழித்தார்கள்……
ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே

பொ.முருகன் சொன்னது…

கண்ணில் நீர் பெருகுகிறது,இவர்கள் அனைவரும் மீதியிருக்கும் நாட்களில் நலமுடன் வாழ பிரார்த்தித்து இக்கணம் முதல் இன்று ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன்.

பொ.முருகன் சொன்னது…

கண்ணில் நீர் பெருகுகிறது,இவர்கள் அனைவரும் மீதியிருக்கும் நாட்களில் நலமுடன் வாழ பிரார்த்தித்து இக்கணம் முதல் இன்று ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன்.

வானம் சொன்னது…

அலுவலகத்தில் இருக்கும்போதும் என்னால் கண்ணீர் வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை. போராளிகளையும், மக்களையும் கைவிட்டது தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும்தான்.

சிவா சின்னப்பொடி சொன்னது…

உங்கள் அனைவரினதும் உண்மையான ஆதங்கத்தை நானும் உங்களுடன் இணைந்து பகிர்ந்து கொள்கிறேன்.யாரை எதிர்த்து போராடினோமே? அந்த எதிரியிடம் அடிமையாக அவன் போடும் பிச்சையை எதிர்பர்த்து வாழ்வதை விட உலகத்தில் கொடுமையானது வேறொன்றும் இல்லை.நாங்கள் உலகில் இன்று 9 கோடி தமிழர்கள் வாழ்கின்றோம்.ஆனால் ஒன்றரை கோடி சிங்களவர்கள் எங்களை ஆட்டிப்படைக்கிறார்கள். இதற்கு காரணம் எங்களிடைய இருக்கும் அடிமைச் சிந்தனையும் பிழைப்புவாதமுமே. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்தமான ஓருநாள் வருமானம் சிறீலங்கா அரசின் ஓராண்டு வருமானத்தை விட அதிகம்.
உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களின் பொருளாதார பலத்தை ஊடகபலத்தை அறிவுத்திறணை ஒருங்கிணைத்து ஒன்று சேர்ப்போமாக இருந்தால் நாங்கள் இந்த உலகத்தை தீர்மானிக்கிற சக்திகளில் ஒன்றாக இருப்போம்.
கருணாநிதிக்கு தனக்கப்பின் தனது குடும்பம் என்னாகும்? தான் சேர்த்த குடும்பச் சொத்துக்காக தன்னுடைய பிள்ளைகள் வெட்டு குத்து என்ற இறங்கிவிடுவார்களோ? என்ற கவலை
ஜெயலலிதா அம்மையாருக்கோ தமிழ்நாட்டு ஆட்சி நாற்காலியை கைப்பற்றவது எப்படி அதை நிரந்தமாக்குவது எப்படி என்ற கவலை?
ஈழத்தில் உள்ள சேரமான் என்ற முகமுடிக்குள் ஒழிந்திருந்து எழுதும் கும்பலுக்கு எத்தனைநாட்களுக்கு பொய்களையே சொல்லி மக்களை ஏமாற்றலாம் என்ற கவலை

ஜோதிஜி சொன்னது…

எதிரியிடம் அடிமையாக அவன் போடும் பிச்சையை எதிர்பர்த்து வாழ்வதை விட உலகத்தில் கொடுமையானது வேறொன்றும் இல்லை.நாங்கள் உலகில் இன்று 9 கோடி தமிழர்கள் வாழ்கின்றோம்.ஆனால் ஒன்றரை கோடி சிங்களவர்கள் எங்களை ஆட்டிப்படைக்கிறார்கள். இதற்கு காரணம் எங்களிடைய இருக்கும் அடிமைச் சிந்தனையும் பிழைப்புவாதமுமே. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்தமான ஓருநாள் வருமானம் சிறீலங்கா அரசின் ஓராண்டு வருமானத்தை விட அதிகம்.
உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களின் பொருளாதார பலத்தை ஊடகபலத்தை அறிவுத்திறணை ஒருங்கிணைத்து ஒன்று சேர்ப்போமாக இருந்தால் நாங்கள் இந்த உலகத்தை தீர்மானிக்கிற சக்திகளில் ஒன்றாக இருப்போம்.

உங்களை வணங்குகின்றேன்.

சிவா சின்னப்பொடி சொன்னது…

நன்றி நண்பரே