ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை –

– விதுல் சிவராஜா

01

இந்த உலகத்திலேயே பெரிய துக்கம் பசியோடிருப்பதுதான். அடுத்த பெரிய துக்கம் என்ன தெரியுமா? படிக்கமுடியாதிருப்பது. கொடிதினிலும் கொடிது வறுமை. அதினிலும் கொடுமை இளமையில் வறுமை. ஓளவையார் இரண்டாயிரம் வருசத்துக்கு முன், இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார். பிறகு, தலைமுறை தலைமுறையாக இந்த உண்மை எல்லோராலும் சொல்லப்பட்டு வந்தாலும் யாரும் இதைப் பெரிதாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

உலகத்தில் இப்போது, இந்தக் குறிப்பை வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கு மக்கள் பசியோடிருக்கிறார்கள். அதைவிட, உலகத்திலிருக்கும் சிறுவர்களில் 30 க்கும் அதிக வீதமானவர்கள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள்.

வறுமையைப் போக்குவதற்காக ஐ.நா அமைப்புகள் இருக்கின்றன. அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் வறுமை ஒழிப்புக்கான சிறப்புத் திட்டங்கள் இருக்கின்றன. அதற்கான நிபுணர்கள் இருக்கிறார்கள். வறுமையை ஒழிப்பதற்கென்றே பெருமளவு காசு செலவழிக்கப்படுகிறது.

அவ்வாறே, சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கவும் சிறுவர்களின் கல்வியை வளப்படுத்தவும் ஐ.நா உள்ளிட்ட பல அமைப்புகள் இருக்கின்றன. நாட்டிலும் வீட்டிலுமாக எத்தனையோ முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கோடிக்கணக்கான பிள்ளைகள் தங்கள் கல்வியை இழந்து கொண்டேயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்னதான் முடிவு? இதற்கான தீர்வு என்ன?

பிள்ளைகளின் படிப்புக்காகவே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குக் குடிபெயர்ந்து கொண்டிருக்கிறார்கள் புலம் பெயர் தமிழர்கள் அநேகர். தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியையோ முழுவதையுமோ கொடுத்து பொருத்தமான, தகுதியான, பெரிய பள்ளிக்கூடங்களில் இடமெடுக்கப் பாடுபடுகிறார்கள் உள்நாட்டிலேயே பல பெற்றோர்.

'ஊனை உருக்கி உன்னை வளர்த்தேன்' என்ற மாதிரி தங்களை உருக்கி, வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டிப் பிள்ளைகளைப் படிக்க வைத்த பாரம்பரியம் தமிழர்களுக்கு உண்டு.

இப்படியெல்லாம் இருக்கும்போது, இப்போது வன்னியில் படிக்கவே வழியற்றுப் பசியோடு அலைந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?

போர்க்காலத்திலும் வன்னி மாணவர்கள் படிப்பதற்குக் கஸ்ரப்பட்டார்கள். அது ஒரு வகையான கஸ்ரம். ஆனால், அந்தக் கஸ்ரங்களின் மத்தியிலும் படித்துத் தேறினார்கள் பலர்.

மின்சாரமில்லை. குப்பி விளக்கு. இருப்பதற்கு கதிரைகள் இல்லை. தரையில், தரப்பாள்களிலும் பாயிலும் இருக்கை. வகுப்பறைகளுக்கு கட்டிடங்களில்லை. மரங்களின் கீழே வகுப்புகள். போக்குவரத்துக்கு ஒழுங்கில்லை. காட்டுவழிகளிலும் புழுதித் தெருக்களிலும் நடந்தும் சைக்கிள்களிலுமாகப் பயணித்து.. தங்களுடைய படிப்பைத் தொடர்ந்து தேறினார்கள்.

இப்படிப் படித்த பிள்ளைகள் போருக்கும் போனார்கள். போர்ப்பணி, போர்க்களத்திலும் வெளியிலும் மருத்துவப்பணி, மக்களுக்கான பணி, விடுதலைப்பணி என்று தங்களுக்குத் தெரிந்ததை, தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை, தங்களுக்குச் சாத்தியப்பட்டதையெல்லாம் அவர்கள் செய்தார்கள்.

பிறகொரு கட்டத்தில் படிப்பை இடையில் நிறுத்தி, போருக்குப் போக வைக்கப்பட்ட நிலை. படித்துத் தேறி, பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்புக் கிடைத்தும் அதற்குப் போகமுடியாத நிலை. இந்த மாதிரிக் காரணங்களால் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகள் இன்று எதையுமே செய்ய முடியாமல், 16, 17, 18, 19, 20, 21, வயதுகளில் இரண்டு மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகவும் தகப்பனாகவும் இருக்கின்றனர்.

வேறு சிலர், கணவனை இழந்து அல்லது மனைவியை இழந்து இந்தச் சின்ன வயதில் கைக்குழந்தையுடன் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி எவ்வளவோ கதைகளுண்டு.

அதற்கு முதல், இங்கே இன்னொரு வகையான கதைகள்.

02

போரிலே தாயும் தந்தையும் பலியாகிப் போனபிறகு, சின்ன வயதிலே தனித்துப் போயிருக்கும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் வன்னியின் ஒவ்வொரு புழுதித் தெருவிலும் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

பல பிள்ளைகளுக்கு ஒழுங்கான சாப்பாடில்லை. சரியான உடுப்புகளில்லை. பல பிள்ளைகள் பள்ளிக்குப் போவதேயில்லை. அப்படிப் போனாலும் அவர்கள் ஒழுங்காகப் போவதில்லை. கேட்கிறதுக்கும் ஒழுங்காக அனுப்புவதற்கும், தேவைப்பட்டதுகளை வாங்கிக் கொடுப்பதற்கும் யார் இருக்கிறார்கள்?

யார் அவர்களைப் பார்க்கிறார்கள், பராமரிக்கிறார்கள் என்று தெரியாது. கொஞ்ச நாளைக்கு யாரோ தெரிந்தவர்களுடன் இருக்கிறார்கள். பிறகு, இன்னொரு தெரிந்தவர். அதற்குப்பிறகு, இன்னொருவர். இப்படியே காலம் போகிறது. கதையும் நீள்கிறது. இவ்வளவுக்கும் ஏழைகளாக இருப்பவர்கள்தான் பல பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள். இதைத்தான் 'பாம்பின் கால் பாம்பறியும்' என்றும் 'இனம் இனத்தைச் சேரும்' என்றும் சொன்னார்களோ!

விதிவிலக்காக, தவிக்கிற முயலை அடிக்கிற மாதிரி, கொஞ்சம் வயதுக்கு வந்த பிள்ளைகள் என்றால், அவர்களின் வயதை வைத்துக் கொண்டே உதவுவதாகக் காட்டித் தங்களுடைய காரியத்தைச் சாதிக்க முயலும் சிலருமுண்டு. என்ன செய்வது? நிலைமை அப்படி. விதி, இப்படி.

03

கடலோரத்தில் இருக்கும் பூநகரி வலைப்பாட்டில், 35 பெண்கள் கணவர்களை இழந்திருக்கிறார்கள். போர் இவர்களைப் பலியிட்டுவிட்டது. நான்கு பெண்களுக்கு தங்களுடைய கணவன்மார் எங்கே என்றே தெரியாது. கடலில் மீன் பிடிக்கப் போனபோது காணாமற் போயிருக்கிறார்கள்.

அப்படிக் காணாமற் போனவர்களை இந்தப் பெண்கள், கையில் பிள்ளைகளை ஏந்திக் கொண்டு, தேடியலைகிறார்கள். சிலர் கொழும்புவரை சென்று, யார் யாரையெல்லாமோ சந்தித்து, யாருக்கெல்லாமோ காசைச் செலவழித்துத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இதைவிட தடுப்பில் இருக்கும் (புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும் போராளிகளை இப்படித்தான் சனங்கள் சொல்கிறார்கள்) கணவன்மாரைப் பார்க்கப் போவதும் வருவதுமாக அலைந்து கொண்டிருக்கின்றனர் 21 பெண்கள். இதில், 20 வயதுக்குட்பட்ட பெண்கள், 16 பேர்.

நான்கு வயதானவர்கள் யாருடைய துணையும் இல்லாமல், தனித்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருப்பதற்கு வீடும் இல்லை. வருமானமும் கிடையாது. உலக உணவுத் திட்டத்தின் மூலமாக கொடுக்கிற நிவாரணமும் அடுத்த மாதத்துடன் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இலங்கையின் மீள்குடியேற்றத்துக்கான உதவிக்குப் பணம் போதாதென்றும், உதவும் நாடுகளின் பங்களிப்புக் கிடைக்கவில்லை என்றும் கடந்த மாதம் ஐ.நா வின் அறிக்கை வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது).

பொதுவாகவே எல்லோருக்கும் நிவாரணம் நிறுத்தப்படவுள்ளது. இப்போது கூட தனியே கோதுமை மாவைத்தான் கொடுக்கிறார்கள். அரிசி கிடையாது. தனியே அந்த மாவை வைத்துக் கொண்டு தங்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் அகதிகள். அந்த மாவும் கொடுக்கப்படாவிட்டால், அடுத்த கதி என்ன?

இந்த மாதிரி ஏராளம் பிரச்சினைகள். அதையெல்லாம் சொல்லியும் முடியாது. கேட்டும் தீராது.

இதேவேளை, சிலர் வீடு கட்டுகிறார்கள். கடையைத் திறந்து நடத்துகிறார்கள். வலை, வள்ளம் என எடுத்து, தொழிலைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு வட்டமும் அங்கேயுண்டு,

ஆனால். அங்கே, வலைப்பாட்டில், தாயும் தந்தையும் இல்லாமல், தவித்துக்கொண்டிருக்கும் எட்டுப் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஆறு பிள்ளைகள். அடுத்ததில் இரண்டு.

ஆறு பிள்ளைகளில் மூத்தது பெண். நிக்கிலஸ் கொலன்ரின் மேரி. 19 வயது. அதற்குக் கீழேதான் மற்றப் பிள்ளைகள். கடைசிப்பிள்ளை (அருட்கீரோசன்) க்கு இப்போது வயது 02. முள்ளிவாய்க்காலில் போனவருசம் தந்தையும் தாயும் எறிகணைக்குப் பலியாகிவிட்டனர். அப்போது அவனுக்கு வயது 01.

கொலன்ரின் மேரிக்கு வேறு யாரும் உதவிகள் இல்லை. அவளுடைய சித்தப்பா, மாமா குடும்பத்திலும் உயிரிழப்புகள். யாரும் அவளை, அவளுடைய இந்தச் சகோதரங்களையும் பார்க்கக்கூடிய நிலையில் இல்லை. ஆகவே அயல் வீட்டுக்காரர்களின் உதவியில் இருக்கிறாள். அவர்கள்தான் இந்தப் பிள்ளைகளுக்கு முறைபோட்டுச் சாப்பாடு கொடுக்கிறார்கள். சின்னப்பிள்ளைக்குப் பால்மா வாங்கிக் கொடுக்கிறார்கள்.

ஆனால், அவர்களும் அகதிகள். உழைப்பில்லாதவர்கள். நிவாரணத்தை நம்பி வாழ்கிறவர்கள். விதவைகள். தடுப்பு முகாம்களில் கணவனையோ பிள்ளையையோ தேடிக் கொண்டிருப்பவர்கள். அல்லது போய்ப்பார்த்து வருகிறவர்கள்.

இந்த நிலைமையில் அவர்களால் தொடர்ந்தும் கொலன்ரின் மேரிக்கு எப்படித்தான் உதவிக்கொண்டிருக்க முடியும்? அதைவிட, அவர்கள் படுகிற பாட்டையெல்லாம் கொன்ரின் மேரி நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதற்குப் பிறகும் அவர்களிடம் அவளால் எப்படித் தொடர்ந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள இயலும்?

ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியாது. யாரிடமோ கையேந்தத்தான் வேணும். இல்லையென்றால் அந்தச் சின்னஞ்சிறுசுகளை அவளால் என்னதான் செய்ய முடியும்? அதுவும் அந்த இரண்டு வயதுப் பாலகன் அழுவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

அம்மாவையும் அப்பாவையும் கொண்டு போன ஷெல் தங்களையும் கொண்டு போயிருக்கலாம் என்று சொல்லி அழுகிறாள் அந்த 19 வயதுடைய பிள்ளை. அவள் படிக்க வேண்டியவள். படிப்பில் கெட்டிக்காரியும்கூட. உயர்வகுப்புப் படிக்கக்கூடிய பெறுபேறும் அவளுக்குண்டு. ஆனால், தனக்குக் கீழே இருக்கின்ற மற்ற ஐந்து சகோதரங்களையும் விட்டுவிட்டு அவளால் எப்படிப் படிக்கமுடியும்?

அவளுடைய அந்தக் கிராமத்தின் மண்தெருவொன்றில், பூவரச மரத்தின் கீழே ஒரு காலைநேரத்தில், அவளைச் சந்தித்தேன். அவள் சொல்கிறாள், 'நான் இனிப் படிக்கப்போவதில்லை. கலியாணமும் கட்டப்போவதில்லை. இதுகளை (சகோதரங்களை) வளர்த்துப் படிப்பித்து, ஆளாக்குவதற்காக வேலை செய்யப்போகிறேன்' என்று.

அப்படிச் சொல்லும்போது அவளுடைய முகம் இறுகி, துக்கத்தினாலும் ஓர்மத்தினாலும் இயலாமையினாலும் கறுத்திருந்தது. மெலிந்து ஒடுங்கியிருந்த அந்த முகத்தை என் வாழ்க்கையில் என்றும் மறக்கவே முடியாது. கலங்கித் தவித்த அந்தக் கண்களை அவள் திருப்பி, எங்கோ வெறித்தாள். குரல் தழும்பிக் குலுங்கியது. உதடுகளைக் கடித்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்தபடி அங்கிருந்து வெளியேறிப் போனாள்.

அங்கே என்ன வேலை செய்யலாம். கடலில் அட்டை பிடிக்கப் போகலாம். அல்லது, கோழி வளர்க்கலாம். அல்லது கருவாடு காயப்போடப் போகலாம். இதில் அவள் ஏதோ ஒன்றைச் செய்யவேணும்.

வலைப்பாடு ஒரு மீனவக்கிராமம். அங்கே இயல்பாகவே ஊர் ஒற்றுமை இருப்பதால், ஏதோ இந்த அளவுக்குச் சமாளித்துக் கொண்டு போகிறாள் கொலன்ரின் மேரி. ஆனால், ஊர்தான் அழிந்து போயிருக்கிறதே.

கொலன்ரின் மேரியின் நிலையைப்போல இன்னும் இரண்டு பிள்ளைகளின் கதையுண்டு. இந்த இரண்டு பிள்ளைகளில் ஒன்றுக்கு வயது 03. மற்றதுக்கு வயது ஒன்றரை.

இந்தப் பிள்ளைகளை வலைப்பாட்டில் இருக்கும் யோ. யூடின்வஸி என்றபெண் பராமரித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு உதவியும் கிடைக்கவில்லை. தங்களால் இயன்ற உதவியைச் செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்கிறாள் யோ. யூடின்வஸி.

இந்தப் பிள்ளைகளுக்கு உதவுவதாகச் சொல்லிக் கொண்டு பலரும் கடிதங்களை வாங்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். சிலர் புகைப்படமெடுத்துக் கொண்டும் போயுள்ளனர். ஆனால், இதுவரையில் யாருடைய உதவியும் கிடைக்கவேயில்லை.

பொதுவாகவே வன்னிக் கிராமங்களில் இந்த மாதிரி, 'உதவிசெய்யும் அமைப்புகள்' எனவும் 'உதவுகிறோம்' என்றும் பல அமைப்புகளும் தனியாட்களும் வந்து படிவங்களை நிரப்புகிறார்கள். புகைப்படங்களை எடுக்கிறார்கள். ஆனால், எவருக்கும் உதவி கிடைத்ததில்லை. ஒரு சில கிராமங்களில் யாரோ சிலருக்கு மட்டும் சிறிய அளவிலான உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.
nanry ponku tamil

கருத்துகள் இல்லை: