போர் எத்தனை கால்களைத் தின்றிருக்கும்? ஒன்றல்ல இரண்டல்ல. ஆயிரக்கணக்கில். குருதியயாழுக ஒழுக அறுத்தெறியப்பட்ட ஆயிரக்கணக்கான கால்களை என் கண்களால் பார்த்திருக்கிறேன். இப்படியும் ஒரு விதியா என்று என்னை நானே நொந்த கணங்கள் அவை. எந்தக் கிரியைகளும் இல்லாமல் அந்தக் கால்கள் எங்கோ புதைக்கப்பட்டன.
சின்னக் கால்கள் மண்ணில் ஊன்றப்படாமலே பிஞ்சாக பாற்குங்கும நிறத்தில் துண்டிக்கப்பட்ட கால்கள் முதிய கால்கள் உறுதியான கால்கள் தளர்ந்த கால்கள் மெல்லிய கால்கள் உறுதியான கால்கள் நீண்டு பெருத்த கால்கள் குறுகிய கால்கள் இன்னும் எவ்வளவு தூரமானாலும் நடப்பேன் என்று சொல்லும் கால்கள் எவ்வளவு பாரத்தையும் சுமப்பேன் என்ற கால்கள்...விடுதலைப் பாதையில் நடந்த கால்கள் கடற்கரையின் உவர்ப்பில் ஊறிய கால்கள் வயலில் நின்று நீரோடு விளைந்த கால்கள் மணலில் காட்டில் என எங்கும் நடந்த கால்கள் என பலவகையான கால்கள் குருதியயாழுக ஒழுக அறுத்தெறியப்பட்டன.
போர் எல்லாவற்றையும் துண்டித்தது. இனி எந்தச் சுவடும் இல்லை என்பதான வன்மத்தோடு அந்தக் கால்களை போர் நிராகரித்தது.
ஒரு சமூகத்தை முடக்கும் உபாயம் அது. வன்முறையின் மறைவில் சமூக முடக்கத்துக்கான பொறிகளே அதிகம் பெருகியிருக்கின்றன. அந்தப் பொறிகளே ஆயிரக்கணக்கான கால்களையும் தின்றன.
இழக்கப்பட்ட அத்தனை கால்களும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பிறருடைய தயவைக் கோர வேண்டிய ஒரு நிலையை கால்கள் இல்லாத ஒவ்வொருவருக்கும் உருவாக்கியுள்ளன. விடுதலைக்காக சுயாதீனத்துக்காக தனித்துவத்துக்காக என்று போராட உருவாகிய சூழலின் இறுதி விளைவு தந்த யதார்த்தம் இது. ஆனால் இது எதிர்பாராததும் எதிர்பார்த்ததுமான ஒரு நிலையே.
கால்களில்லாதவர்களின் உலகம் எப்படியிருக்கும்? இதற்கு ஒரு எளிய விளக்கத்தை அல்லது புரிதலை மனு"ய புத்திரனின் ?கால்களின் அல்பம்? என்ற கவிதை சொல்லுகிறது.
எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை அல்லது அவலம் தாங்கமுடியாத துயரம் கால்களில்லாதவர்களுடையது. ஒரு தபாலை அனுப்புவதற்கும் ஒரு கிண்ணம் தண்ணீரை எடுப்பதற்கும்கூட பிறரின் தயவு தேவை.
அதிலும் சிறிய வயதில் குழந்தைப் பருவத்தில் கால்களை இழந்த பிள்ளைகளின் உலகம் இன்னும் கொடியது. ?ஓடி விளையாட முடியாது தாத்தா...ஆனாலும் நான் ஓய்திருக்க முடியாது தாத்தா...? என்று ஒரு பிள்ளை தன்னுடைய தாத்தாவைப் பார்த்துப் பாடியதை ஒரு நாள் எதிர்பாராத விதமாகப் பார்த்தேன்.
என்றாலும் அந்தப் பிள்ளையின் இழந்த கால் எல்லாவற்றுக்கும் ஒரு தடையே. அந்தத்தடையை மீறத்துடிக்கும் மன வேகம் அந்தப்பிள்ளையிடம் இருக்கிறது என்பதே அந்தத் துயரத்திலும் ஒரு ஆறுதல்.
ஆனாலும் கால்கள் இல்லாமையால் இழக்கப்படும் உலகம் தவறிப்போகும் வாய்ப்புகள் செய்ய முடியாமற் போகும் காரியங்கள் ஏராளம் ஏராளம். ஒரு சுதா சந்திரன் வெற்றிகரமாக நடனமாடியிருக்கலாம். ஆனால் பொது நிலை அப்படியல்ல. அது அடிவாரங்களைச் சுற்றி வரும் மலையேற்றமே.
இப்படி அடிவாரங்களைச் சுற்றி வரும் பல மலையேறிகளை நாம் எப்போதும் சந்திக்கிறோம். எங்கும் சந்திக்கிறோம். காலம் அளித்த தண்டனையை சிலுவையாகக் காவிக் கொண்டு இந்த மனிதர்கள் நொண்டி நொண்டித் திரிகிறார்கள்.
சிலருக்கு ஒருகால் இல்லை. சிலருக்கு இரண்டு கால்களும் இல்லை. ஆனாலும் அவர்களும் இந்த உலகத்தின் பங்காளிகளே. அவர்கள் எங்களுடன் உறவோடும் வாழவேண்டிய கடப்பாடுகளோடும் இருக்கிறார்கள். நாங்களும் அவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தந்தையும் பிள்ளையுமாக கணவனும் மனைவியுமாக அண்ணனும் தங்கையுமாக தம்பியும் அண்ணனுமாக நண்பர்களாக அயலவர்களாக என்று பல நிலைகளில். அவர்கள் வேறு நாங்கள் வேறில்லை.
என்றாலும் கால்களில்லாதவர்களின் துயரம் வேறு. அது முடிவில்லாமல் நீண்டு செல்வது. எண்ணற்ற வகையில் பல்லாயிரம் துயரிழைகள் கொண்டது. நெருப்பாய் வேர் விடுவது.
ஈழப்போர் பல வகையிலும் பல்லாயிரம் கால்களைப் பசியாறியிருக்கிறது. ஒவ்வொரு காலும் பலியிடப்படும்போது ஆயிரமாயிரம் துயரிழைகள் வேர்விடுகின்றன. வேர்விடும் துயரிழைகள் துயரப் பெருமரமாய் விரிந்து வளர்கின்றன. வளர்ந்து கால்களில்லாதவர்களை துயரத்தால் மூடுகின்றன.
போர்க்களத்தில் இழக்கப்பட்ட கால்கள் கண்ணிவெடி மிதிவெடிகளால் இழக்கப்பட்ட கால்கள் எறிகணைகள் பசியாறிய கால்கள் குண்டு வீச்சு விமானங்கள் தின்ற கால்கள் என எல்லாவற்றுக்கும் தங்கள் கால்களை இழந்து விட்டு இப்போது துயரோடு தெருக்களில் அலைவோர் கடந்த காலத்தைப் பெருஞ்சுமையாகக் காவிக் கொண்டு திரிகின்றனர். நீக்கவே முடியாத கடந்தகாலம் அது. அது ஒருவகையில் அவர்களுடைய தண்டனைக்காலந்தான்.
நிகழ்காலத்தின் வலி எதிர்காலம் பற்றிய அச்சம் எல்லாம் அவர்களுடைய முகங்களில் இருளாகப் படர்ந்திருக்கின்றன. இந்த இயந்திரமயமாகிய உலகில் கருணையும் அன்பும் குறைவடைந்து வரும் உலகில் மற்றவர்களுக்காக இரக்கப்படுதல் பாடுபடுதல் எல்லாம் மறைந்து வருகின்ற உலகத்தில் கால்கள் இல்லாதவர்களின் நிலை சற்றுக் கடினமானதே. ஆகையால்தான் நிகழ்காலத்தின் வலியும் எதிர்காலம் பற்றிய அச்சமும் அவர்களைச் சுற்றி வளைத்திருக்கின்றன.
ஆகக் குறைந்தது இழந்த காலுக்குப் பதிலாக ஒரு மாற்றுக் காலைப் பொருத்துவதற்கே இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். ஏராளம் அலைச்சல்கள். வடக்கில் மட்டும் 20000 க்கும் அதிகமானவர்கள் கால்களை இழந்த நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அதிகமாக உள்ளதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
முறையான கணக்கெடுப்புகள் எதுவும் இல்லாதபோதும் ஏறக்குறைய 20.000 க்கு குறையாமல் இந்த எண்ணிக்கை இருக்கும் என நம்புகிறேன். ஆனால் இந்த எண்ணிக்கையின் அளவுக்கு கால்களை இழந்தோருக்கான சேவை நிலையங்கள் இல்லை. முப்பதாண்டு காலப் போரில் அதுவும் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகிய போரில் கால்களை இழந்தோரின் தொகையும் பிரச்சினையும் எவ்வளவு பாரதூரமாக இருக்கும் என்பதை அதிகம் சொல்லத்தேவையில்லை.
கால்களை இழந்தோருக்கான மாற்றுக் கால்களைப் பொருத்தும் பணிகள் உலகில் சில நாடுகளில் மிகத்திறனாக நடக்கின்றன. நிஜக்காலைப் போலவே மாற்றுக் காலைப் பொருத்தி விடுகிறார்கள். அப்படிப் பொருத்தப்பட்ட மாற்றுக் காலோடு மீண்டும் போர்க்களத்துக்குப் போய்ப் பெரும் சாதனையை நிகழ்த்தியவரைப் பற்றிய உண்மை மனிதனின் கதையை யாரும் எளிதில் மறந்து விடமுடியாது.
மாற்றுக்கால்கள் ஓரளவுக்கு நடமாட்டத்தையும் கணிசமான அளவுக்கு இவர்களின் இயல்பான நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கின்றன. ஆனால் மாற்றுக் கால்களைப் பொருத்துவதில் இப்போது நெருக்கடிகளும் தாமதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
போர் முடிந்து விட்டது. வெற்றி தோல்விக் கணக்கெடுப்புகளும் கொண்டாட்டங்களும் ஏறக்குறைய அடங்கி வருகின்றன. ஆனால் கொதித்துக் கொண்டிருக்கும் உலைமுகமாக இந்தக் கால்களை இழந்தோரின் வாழ்க்கை இருக்கிறது. இவர்களைப் பற்றி யாரும் எந்தவொரு தீர்மானத்தையோ கரிசனையையோ எடுக்கவில்லை.
ஆனால் யாழ்ப்பாணத்தில் ஜெய்ப்பூர் செயற்கைக் கால் உற்பத்தி செய்யும் இடம் இருக்கிறது. இதுதான் இப்போது பலருக்கும் மாற்றுறுப்புகளை வழங்குகிறது என்றபோதும் தேவையான அளவுக்கு விரைவாகவும் தொகையாகவும் மாற்றுறுப்புகளைச் செய்து வழங்கக் கூடிய நிலையில் இந்த மையம் இப்போதில்லை.
இதனால் வன்னியிலிருந்தும் வவுனியாவிலிருந்தும்கூட நீண்ட தூரம் பயணித்து வந்து நாட்கணக்காகக் காத்திருக்கின்றனர் கால்களை இழந்தவர்கள். சிலர் பொருத்தியிருக்கும் மாற்றுக் கால்களைச் சீர்ப்படுத்தவே பல நாட்களாக அலைகிறார்கள். ஆனாலும் தன்னால் முடிந்தளவுக்குத் தொண்டாற்றுகிறது ஜெய்ப்பூர் செயற்கைக் கால் உற்பத்தி மையம்.
இதற்கு மாற்று வழியாக என்ன செய்ய முடியும்? கால்களை இழந்தவர்களுக்கு ஒரு மாற்றுக் காலை அணிவித்து விட்டால் அவர்களுடைய சுயாதீனம் ஓரளவுக்கு பாதுகாக்கப்படும். அவர்களுடைய மனவுறுதி மேலும் பலமடையும். அவர்கள் எதிர்காலத்தினுள் நம்பிக்கையோடு நுழைந்து கொள்வார்கள்.
ஆனால் அதற்கு வழியைக் காணவில்லை. அரசாங்கத்திடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு போகக் கூடியவர் யார்? அப்படிக் கொண்டு போனால் அது புலிப்பிரச்சினையாகிப் போய்விடும் என்று ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் சொல்லியிருக்கிறார். ஆகையால் எந்த வழியுமற்று நடப்பதெல்லாம் நமது விதி என்றபடி நடக்க மாட்டாமல் இருக்கும் இந்தப் பேர்வழிகள் சொல்கிறார்கள்.
முன்னர் வெண்புறா என்ற மாற்று உறுப்புக்கான ஏற்பாட்டு மையம் வன்னியில் இயங்கியது. கிளிநொச்சியிலும் புதுக்குடியிருப்பிலும் மிகத் திறமையாக இந்த மையங்கள் இயங்கின. அதில் வெளிநாடுகளில் உள்ளதற்கு நிகரான பயிற்சி பெற்றிருந்த பணியாளர்கள் இருந்தனர். அதனால் ஆயிரக்கணக்கான கால்கள் அங்கே உற்பத்தி செய்யப்பட்டன.
வெண்புறா நிலையத்தில் தினமும் ஆட்கள் மாற்றுறுப்புகளைப் பொருத்துவதற்காக நின்றாலும் அங்கே விரைவான சேவை நடந்தது. அதுவும் ஆயிரக்கணக்கானோருக்கு. மட்டுமல்ல தொழில் தேர்ச்சியுடையவர்கள் பலர் அதில் வேலை செய்ததனால் கால்களைச் சீராக்குதல் உற்பத்தி செய்தல் போன்றவற்றில் எல்லாம் விரைவும் நேர்த்தியும் இருந்தன.
புதுக்குடியிருப்பில் இயங்கிய வெண்புறா செயற்கைக் கால் நிலையத்தின் மீது இரண்டு தடவை இலங்கை விமானப்படை குண்டுகளை வீசியிருக்கிறது. கிளிநொச்சி வெண்புறா நிலையம் விடுதலைப் புலிகள் கிளிநொச்சியிலிருந்து வெளியேறும் வரையில் இயங்கியது.
சனங்கள் அங்குமிங்கும் நொண்டி நொண்டித் திரிகிறார்கள். எதுவோ நடப்பது நடக்கட்டும் என்ற மாதிரியான ஒரு விட்டேத்தித்தனம். அவர்களுடைய நம்பிக்கைகளின் வீழ்ச்சி அவர்களை அப்படிச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. கிடைப்பது கிடைக்கட்டும். அதற்குள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வோம் என்றமாதிரி நடந்து கொள்கிறார்கள்.
அதை விட அவர்களுக்கு வேறு வழிகளும் தெரிவுகளும் இப்போதில்லை. தொண்டு நிறுவனங்கள் ஏதாவது வந்தால் சில சிறப்பு ஏற்பாடுகள் நடக்கும். ஆனால் அவைகள் வருவதற்கும் ஏகப்பட்ட நெருக்கடிகள்.
உள்ளுரில் இராமகிருஸ்ண மிஸனைச் சேர்ந்த ஆட்கள் கொஞ்ச உதவிகளைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் கால்களை மட்டும் வாங்கிப் பொருத்துகின்றனர். அவ்வளவுதான். அதற்குப் பின்னர் எந்த உதவிகளும் இல்லை. பின்னர் கால்களை இழந்தவர்கள் எல்லாவற்றுக்கும் எல்லோரையும் போல எல்லா இடத்துக்கும் அலைய வேண்டியதுதான்.
கிளிநொச்சியில் உள்ள அந்தப் பெளத்த விகாரையில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் புத்தரின் காலடியில் மண்டியிட்டு வணங்குகிறார்கள். அவர்களில் ஒருவர் தமிழர். இன்னொருவர் சிங்களவர். இரண்டு பேருக்கும் கால்களில்லை.
இந்தப் பூமி உண்மையில் விசித்திரங்களால் ஆனதா அல்லது நம்பமுடியாத நம்பக்கூடிய நம்ப வேண்டிய எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டுதான் சுற்றுகிறதா?
திரும்பிப் பார்த்தால் பலர் தெருவழியே போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் கால்கள் இல்லை. ஆமாம் போர் அந்தக் கால்களைத் தின்றபோதும் அவர்கள் தங்களால் ஆனதையயல்லாம் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.
துயரம் விளைந்த நிலத்தில் துக்கத்தோடு அலையும் மனிதர்கள் இவர்கள்? என்று நண்பர் ஒருவர் தான் எடுத்திருந்த புகைப் படங்களுக்கு அடியில் எழுதியிருந்த வரிகள் இப்போது நினைவில் வருகின்றன.
இந்தக் காலத்தின் வஞ்சனையைக் களைவது யார்?
-விதுல் சிவராஜா
நன்றி பொங்கு தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக