செவ்வாய், 26 ஏப்ரல், 2011

கனிமொழியை கைவிடுகிறதா கருணாநிதி குடும்பம்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை முதல்வர் கருணாநிதியை தவிர அவரது குடும்பத்தில் கனிமொழிக்கு ஆதரவாக யாரும் இல்லை என்றும்,கனிமொழி குடும்பத்தில் ஓரம்கட்டப்படுவதாகவும் செய்திகள் அலையடிக்க தொடங்கி உள்ளன.

2ஜி வழக்கில் கடந்த 2ஆம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

இந்நிலையில், 2ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி அளிக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான தயாளு அம்மாள், கனிமொழி, மேலாண்மை இயக்குநர் சரத் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த மூவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக திமுக கொடுத்த அழுத்தத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆவது தள்ளிப்போனதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில்,2ஜி வழக்கில் துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.

இந்த துணை குற்றப்பத்திரிகையில் கனிமொழி,சரத் ரெட்டி ஆகியோரது பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. இதில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அதே சமயம் கலைஞர் டி.வி.யில் கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு தலா 20 விழுக்காடு பங்குகளே உள்ள நிலையில், 60 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயர் இடம்பெறாதது பலரது புருவத்தை உயர்த்த வைத்தது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து சிபிஐ, ஒரு விளக்கத்தை அளித்தது.

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாள் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தாலும், நிறுவனத்தின் செயல்பாடுகளிலும், பணிகளிலும் அவருக்கு பங்கில்லை. அதற்கான ஆங்கில அறிவோ அல்லது சட்ட நுணுக்கங்களை படித்து தெரிந்துகொள்ளும் அறிவோ அவருக்கு இல்லை. அவர் ஒரு செயல்படாத பங்குதாரராகவே இருந்திருக்கிறார் என்பதால் அவர் கைது செய்யப்படவில்லை என்றும், அதே சமயம் அவர் விசாரிக்கப்படவேண்டிய சாட்சியாளர் பட்டியலில் உள்ளதாகவும் சிபிஐ தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் வருகிற மே மாதம் 6 ஆம் தேதியன்று நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கனிமொழிக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதற்கான சூழ்நிலை உருவாகி இருப்பதும் மறுப்பதற்கில்லை.

இதனால் கனிமொழிக்கு அடுத்தபடியாக மிகவும் கலக்கம் அடைந்திருப்பது கருணாநிதிதான். இத்தனை ஆண்டு கால தமது அரசியல் அனுபவம் மற்றும் தாம் இப்போதும் முதல்வராக இருந்தும், இவை எதுவும் தமது மகளை காப்பாற்ற உதவவில்லையே என்ற ஆதங்கம் மிகுதியாகவே அவருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தொலைக்காட்சி பெண் நிருபர் ஒருவர், குற்றப்பத்திரிகையில் கனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை கருணாநிதியிடம் கேட்டார்.

உடனே அதற்கு பதிலளித்த கருணாநிதி,"பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் பேசக்கூடாது' என்று ஒரு அபத்தமான பதிலை கூறியதிலிருந்தே அவர் உள்ளுக்குள் எவ்வளவு பதட்டமடைந்துள்ளார் என்பது அம்பலமாகிப்போனது.
அதே சமயம் கனிமொழி விடயத்தில் இந்த அளவு பதட்டமும், கலக்கமும் அடைந்திருப்பது கருணாநிதி மற்றும் தாயார் ராசாத்தி அம்மாள் ஆகியோர் மட்டுமே தவிர, அவரது குடும்பத்தில் வேறு யாரும் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை என்கிறது அறிவாலய தகவல்கள்.

கருணாநிதி குடும்பத்தில் இன்று கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரமிக்கவர்களாக வளைய வருபவர்கள் என்று எடுத்துக் கொண்டால் அழகிரி, ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர்தான் முக்கியமானவர்கள். இதில் தயாநிதி மாறன் மீது கனிமொழிக்கு எவ்வளவு வெறுப்பு உண்டு என்பது நீரா ராடியா டேப் உரையாடலிலேயே தெரிந்துபோனது.

ஸ்டாலினோ எப்போதும் மாறன் சகோதரர்கள் மனம் கோணாமல் நடந்துகொள்ள விரும்புவர். ஏற்கனவே கனிமொழி டெல்லி அரசியலில் லாபி பண்ணுவதை விரும்பாத ஸ்டாலின், தற்போது அவர் மீது கருணை காட்டுவார் எனு எதிர்பார்க்க முடியாது.

மு.க. அழகிரியோ,முன்னர் கனிமொழியுடன் இணக்கமாக இருந்தாலும் 2ஜி குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்து ராசா கைதானதில் இருந்தே, கனிமொழி மீது கசப்புணர்வு கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

செல்வி உட்பட கருணாநிதி குடும்பத்தின் இதர சொந்தங்கள் யாரும் கனிமொழியுடன் அவ்வளவாக உறவு பாராட்டாத நிலையில், அவர்கள் ஆதரவு கனிமொழிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறும் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமான அறிவாலய புள்ளி ஒருவர், கனிமொழி தற்போது கட்சியிலும், குடும்பத்திலும் தனிமைப்பட்டு நிற்கிறார் என்று கூறுகிறார்.

முன்னர் தயாநிதி மாறன் மீது இருந்த கோபத்தில், கனிமொழிக்கு ஆதரவு காட்டிய பல மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட தற்போது விலகி நிற்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அநேகமாக முன்னர் 2ஜி விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடிக்கு சென்றவுடன், ஆ.ராசாவை பலிகடா ஆக்கியதைப்போல,தற்போது கனிமொழியையும் பலிகடா ஆக்க கருணாநிதிக்கு, அவரது குடும்பத்திலும், கட்சியிலும் நெருக்குதல்கள் கொடுக்கப்படலாம்.

இதனால் கனிமொழியை அவர் வகிக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கருணாநிதி கூறவும் வாய்ப்புண்டு.

ஆக மொத்தத்தில் கனிமொழி மற்றும் கருணாநிதியின் தற்போதைய நிலைமை "உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்" என்பது போல ஆகிவிட்டது என்றே கூறலாம்.
nanry webulakam



1 கருத்து:

J.P Josephine Baba சொன்னது…

நல்ல பதிவு!!!!