செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இலங்கையிடமிருந்து பதிலில்லை - ஃபர்ஹான் ஹக் கவலை

இலங்கைப் யுத்தத்தின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினால் ஐ.நா செயலரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை இந்த வாரத்தில் முறைப்படி வெளியாகும் என்றும் ஐநா தலைமைச் செயலரின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார் என பீபீசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த குழுவின் கசியவிடப்பட்ட சில பகுதிகள் இலங்கை பத்திரிகைகளில் வெளியானமை குறித்தும் ஐநா தலைமைச் செயலரின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐநா குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் பத்திரிகைகளில் கசிந்து வெளியானமை ஐநாவுக்கு கவலையையும் அழுத்தத்தையும் தந்துள்ளதாக கூறிய அவர், அவை ஐநா தரப்பில் இருந்து கசிந்திருக்க முடியாது என்றும் கூறினார்.

அதேவேளை கசிந்த அறிக்கையில் வெளியான விடயங்கள் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா குழுவின் யுத்தகுற்ற அறிக்கையை எதிர்த்து போராட வேண்டும் என்று இலங்கை ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அழைப்பு விடுத்திருப்பது குறித்து கருத்துக் கேட்டதற்குப் பதிலளித்த ஃபர்ஹான் ஹக் , இதற்கான எந்தவிதமான பதில் நடவடிக்கைகளின் போதும், இலங்கையில் உள்ள ஐ.நா பணியாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், அவர்களது பாதுகாப்புக்கான முழுமையான பொறுப்பை இலங்கை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமது அறிக்கை குறித்த இலங்கை அரசாங்கத்தின் கருத்தினை தாம் எதிர்பார்த்திருப்பதாகவும், அது இன்னமும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: