புதன், 20 ஏப்ரல், 2011

பான் கீ மூனின் 2வது பதவிக் காலத்திற்காக சிறிலங்கா இனப்படுகொலை விசாரணைகள் பலியாகுமா?

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் இனப்படுகொலை மற்றும் போர் மீறல்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர் குழுவினால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் எடுக்கப்படக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பான் கீ மூனின் இரண்டாவது பதவிக் காலத்திற்காக பலிக்கடா ஆக்கப்படுமா என Inner City Press கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் கையளிக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் போர் மீறல்கள் தொடர்பான அறிக்கையும், சிறிலங்கா சார்ந்த விவகாரமும் பாதுகாப்பு அவையின் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் விவாதப் பொருளாக ஐ.நா வெளியுறவு அரசியல் அமைச்சகத் தலைவர் Lynn Pascoe அவர்களால் நேற்று முன்தினம் (18.04.2011) முன்வைக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு பெரும் இரத்தக் களரியை ஏற்படுத்திய இறுதிக் கட்டப் போர் பற்றிய விவாதங்களை ரஸ்யா எதிர்த்து வந்துள்ளது. நேற்று நடைபெற்ற விவாதத்திலும் ரஸ்யா எதிர்ப்பினைத் தெரிவித்திருந்து.
ரஸ்யாவின் எதிர்ப்புகளையும் தாண்டி, Ivory Coast விவகாரத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நடவடிக்கை எடுத்தமை – குறிப்பாக இராணுவ ரீதியிலான நடவடிக்கையினை எடுத்தமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும் என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இப்பொழுது பான் கீ மூன் ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஸ்யாவைச் சாந்தப்படுத்தவும், ஐ.நா பொதுச்செயலாளராக இரண்டாவது முறை தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பை தக்கவைப்பதுமே அவரின் பயணத்தின் நோக்கமாக கருதப்படுகின்றது.
பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்புரிமை கொண்டுள்ள நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான தெரிவைத் தடுக்க முடியும் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நிபுணர் குழுவின் அறிக்கை கசிய விடப்படுவதற்கு முன்னரே இவ்விவகாரம் பாதுகாப்பு அவையின் நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருந்தது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஐலண்ட் நாளேட்டில் வெளிவந்த அறிக்கையின் சுருக்கம், சிறிலங்கா அரசாங்கத்தினால் கசிய விடப்பட்டதாகவே நம்பப்படுகின்றது.
ஆனால் அறிக்கையின் உள்ளடக்கம் கசிந்த பின்னர், பாதுகாப்பு அவைக்குள் முக்கிய பேசுபொருளாக இந்த விவகாரம் ஆகியுள்ளதாக பல்வேறு தரப்பட்ட தகவல்களின் மூலம் அறியவந்துள்ளதாக Inner City Press தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையினைக் கசியவிட்டதாக பாதுபாப்பு அவை மட்டத்தில் நம்பப்படுகின்றது. ஆனபோதும் முழு அறிக்கையினையும் விவாதிப்பதை விடுத்து, வெளிவிடப்பட்டுள்ள அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் விவாதிப்பது பொருத்தமற்றது எனப் பாதுகாப்பு அவையின் பல்வேறு உறுப்பு நாடுகள் கருதுகின்றன.
ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என பரவலாக நம்பப்படுகின்றபோதும் இதுகுறித்து ஐ.நா வட்டாரங்கள் உறுதிபட அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. இருப்பினும் இவ்விடயம் சார்ந்து ஐ.நா மீதும் சிறிலங்கா மீதும் அழுத்தங்கள் அதிகதிரித்து வருவதாகவே சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே பான் கி மூனின் ரஷ்ய பயணமும் சிறிலங்கா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் உதவியை நாட உள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளும் இவ்விடயம் ஐ.நா செயலாளர் நாயகத்தின் இரண்டாவது பதவிக்காலத்திற்காக பலியாகிவிடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: