நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கை குறித்து சிறிலங்காவின் அரசியல் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளின் தொகுப்பு இது.
ஐ.தே.கவின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச:
சிறிலங்காப் படையினர் அனைத்துலக நீதிமன்றில் நிறுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த அறிக்கை சிறிலங்கா படைவீரர்களுக்கு எதிரானதாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக இணைந்து செயற்பட வேண்டும்.
நிபுணர்கள் குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் குறுகிய கால அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கைகளைப் பின்பற்றியதன் விளைவை இன்று அனுபவிக்க நேரிட்டுள்ளது.
அஸ்கிரிய பீடாதிபதி உடுகம சிறி புத்தரகித்த தேரர்:
உலகில் பல நாடுகள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக போரில் ஈடுபட்டன. ஆனால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டது மனிதாபிமான மீட்பு முயற்சியே. நாட்டு மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் நடத்திய போரை மனிதஉரிமை மீறல்களாகக் கருத முடியாது.
பயங்கரவாதப் பிரச்சினைகளின் போது எந்தவொரு நாடும் எடுக்கக் கூடிய நடவடிக்கையே சிறிலங்கா அரசாங்கமும் எடுத்தது. மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது சிறிலங்கா அரசாங்கம் அப்பாவித் தமிழர்களுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தவில்லை.
நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் முயற்சிகளை இனியும் அனுமதிக்க முடியாது.
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க:
இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது இப்படியான கருத்துக்களை வெளியிடுவதற்காக அல்ல. இந்தக் குழு ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டது. சாட்சிகளை விசாரணைக்கு உட்படுத்தும் போதும், தீவிரவாதிகளுக்கு எதிராக செயற்படும் போதும், சிறிலங்காப் படையினர் நேர்மையான முறையிலேயே நடந்து கொண்டனர்.
சட்டத்தரணி கோமின் தயாசிறி:
ஐ.நா நிபுணர்கள் குழு சிறிலங்காவுடன் கலந்தாலோசிக்காமல் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. சிறிலங்காவுக்கும் சிறிலங்காப் படைகளுக்கும் உள்ள நற்பெயரைக் கெடுக்கும் நோக்கிலேயே இந்த அறிக்கையை அவர்கள் தயாரித்துள்ளனர்.
சிறிலங்கா தொடர்பாக ஒருதலைப்பட்சமான முறையிலும்- பக்கசார்பான வகையிலும் இந்த அறிக்கை இது தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசப்பற்று தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர:
சிறிலங்காவுக்கு எதிராக சில மேற்கு நாடுகள் செய்யும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்காவைச் சேர்ந்த அனைவரும் இந்த அறிக்கைக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும்.
புலிகள் ஆதரவு சக்திகளுக்கு மீளவும் உயிர் கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் றொகான் குணரட்ண:
சிறிலங்கா தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழுவொன்றை நியமிக்கும் சட்டரீதியான அதிகாரம் ஐ.நா பொதுச்செயலருக்கு கிடையாது.
அமெரிக்க, பிரித்தானிய படைகளால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொல்லப்பட்ட பலநூறாயிரம் பொதுமக்கள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் ஏன் விசாரணைக் குழுக்களை அமைக்கவில்லை.
சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் வண.கும்புறுகமுவே வஜிர தேரர்:
எந்தவொரு வெளிநாட்டுப் படைகளும் இறைமையுள்ள நாடான சிறிலங்கா மீது அழுத்தம் கொடுக்க முடியாது. எந்தவொரு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அவர்கள் முறைபாடு செய்யலாம்.
அனுராதபுர பல்கலைக்கழக பௌத்த கல்விப் பிரிவின் பேராசிரியர் வண.பத்தேகம ஞானேஸ்வர தேரர்:
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது. அனைத்து மக்களும் இந்த அறிக்கையை நிராகரிக்கிறார்கள்.
வணபிதா.சரத் ஹெற்றியாராச்சி:
மக்கள் அனைவரும் இப்போது அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்கிறார்கள். புலிகள் ஆதரவு சக்திகள் இந்த சுதந்திரத்தைக் கெடுக்க முனைகிறார்கள். நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு எதிராக சிறிலங்காவைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மூத்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண:
ஐ.நா நிபுணர்கள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை சிறிலங்காவின் இறையாண்மைக்கு எதிரானது. விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் வழங்கிய பொய்யான செய்திகளை ஆதாரமாகக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் புரிந்ததாக சிறிலங்காவை அனைத்துலக நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வதே ஐ.நா நிபுணர் குழுவின் இந்த அறிக்கையின் நோக்கம். சிறிலங்காவின் உள்விவகாரங்களில் ஐ.நாவைத் தலையிட வைக்கும் வகையிலான இந்த அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறோம்.
ஐ.தேக பிரதித்தலைவர் கரு ஜெயசூரிய:
நிபுணர்கள் குழுவின் அறிக்கையை நாம் படிக்கவில்லை. அதைப் படிக்காமல் கருத்து எதையும் வெளியிட முடியாது. நாளை ஐதேக இதுபற்றிய நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்காக கூடி ஆராயவுள்ளது.
ஐ.தேகவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன:
இதுபற்றி கருத்து வெளியிடுவதற்கு முன்னர் அறிக்கையை நாம் படிக்க வேண்டும். ஆனால் நாம் ஒரு சுதந்திரமான இறையாண்மை உள்ள அரசு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அறிக்கையில் எந்தவொரு அந்நியத் தலையீட்டுக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தால் நாம் அனைவரும் எமது நாட்டுடனும் படைகளுடனும் இணைந்து நிற்க வேண்டும்.
ஐதேகவின் மொனராகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார:
சிறிலங்கா மீது அனைத்துலக தலையீடுகளை மேற்கொள்ள எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.
nanry puthinapalakai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக