ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும், உள்நாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் கரங்கள் வலுப்பெறுவதற்கே வழிவகுக்கும் என சர்வதேச ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இவ் விவகாரம் தொடர்பில் உறுதியான வெளிவிவகாரக் கொள்கைகள் எதனையும் கொண்டிராத சர்வதேச நாடுகள் சில ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க தயாராகவுள்ள நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடரும் என இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.
உலகின் பல்வேறு இடங்களில் இருந்து நிபுணர்கள் குழுவுக்கு கிடைக்கப் பெற்ற ஆயிரக்கணக்கான சாட்சியங்களில் சில தவறான தகவல்களைக் கொண்டிருந்த அதேவேளையில், நிபுணர்கள் குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் முனைப்பிலும் சாட்சியங்கள் சில அனுப்பப்பட்டுள்ளதாக நம்பகமாகம் தெரிய வருவதாக இவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் Eurasia Review எனும் இணையத் தளத்தில் ஊடகவியலாளர் Nilantha Ilangamuwa என்பவர் எழுதியுள்ள நீண்ட செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அச் செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.
'நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் தேசிய உணர்வை மேலும் அதிகரிக்கவே செய்யும். இதனால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும். இந் நிலையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபை எந்தளவு வெற்றி பெறும் என்பது கேள்விக்குறியே.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லிபியா, ஈராக், சீனா மற்றும் மியான்மார் போன்ற நாடுகளின் கடும்போக்குக் கொண்ட ஆட்சியாளர்களே வழிநடத்துகின்றார்கள். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் மேற்குறிப்பிட்ட நாடுகளின் ஆட்சிப் பண்புகளை அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட போது துட்டகைமுனுவின் மறு அவதாரமே தானென மகிந்த ராஜபக்ச நம்பினார். ஆனால் துட்டகைமுனுவிடமிருந்த நற்பண்புகள் இவரிடம் இருக்கவில்லை.
இலங்கையில் நீண்ட காலமாக இருந்து வந்த பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த தன்னை மக்கள் தொடர்ந்து ஆட்சியில் வைத்திருக்க வேண்டும் என்றே மகிந்த ராஜபக்ச எதிர்பார்க்கின்றார்.
அரசியல் நிலைமைகளை தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதில் மகிந்த ராஜபக்ச மிகவும் திறமைசாலி.
இலங்கை அரசியலில் எதிர்க்கட்சிகள் மிகவும் பலவீனமான நிலையிலேயே இருப்பதுடன், அந் நாட்டின் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பலம்வாய்ந்த மனிதவுரிமை அமைப்புக்களும் அங்கில்லை. இந்தியாவைப் போன்று மக்கள் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஊடகங்களோ, பொதுவமைப்புக்களோ இலங்கையில் காணப்படவில்லை.
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிப் பாணியை ஒத்ததே லிபிய ஜனாதிபதி கேணல் கடாபியின் ஆட்சிப் பாணி. இறுதியில் 30 ஆண்டுகளின் பின்னர் தனக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் மக்கள் கிளர்ச்சியை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரமுடியாத நிலைமைக்கு அவர் உட்பட்டுள்ளார்.
ஆனால், இத்தகைய கிளர்ச்சிகள் இலங்கையில் தற்போது ஏற்படுவதற்கான வாய்ப்புகளோ, வலுவான எதிர்க்கட்சிகளோ அங்கில்லை.
ஐவரி கோஸ்டில் தற்போது காணப்படும் நிலைமைகளைப் போன்று நாட்டின் எதிர்க்கட்சிகள் வலுப்பெறும் நிலையில், மகிந்த ராஜபக்ச தனது அதிகாரங்களை கையளிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கும் நிலைமை ஒன்று இலங்கை அரசியலில் உருவாகுமா?
ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டதைத் போன்று இலங்கையிலும் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமா?
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தேசப்பற்று என்பது அவரின் வார்த்தைகளுக்கு தலையாட்டுவதுதான். இலங்கை மக்களின் சுதந்திரத்தை அவர் தின்று புசித்து ஏப்பமிடுகின்றார்.
ஆனால், மகிந்த ராஜபக்சவின் மாயைகளைக் கொண்ட ஆட்சியின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்படும் வரை இலங்கை மக்கள் தங்களின் தலைவிதியை உணர்ந்து கொள்ளப் போவதில்லை' என அச் செய்திக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக