வியாழன், 21 ஏப்ரல், 2011

நிபுணர்கள் குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்காகவே தாமதமானது – இன்னர் சிற்றி பிரஸ்

ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கை மார்ச் 31ம் திகதியே தயாரிக்கப்பட்டு விட்டபோதும், சிறிலங்காவுக்காகவே அதை பான் கீ மூனிடம் கையளிப்பது தாமதமாகியது என்று இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

ஐ.நா நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் ஸ்கான் செய்யப்பட்ட பிரதியின் பகுதி இன்னர்சிற்றி பிரசுக்கு கிடைத்துள்ளது.

அதில் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள மூவரும் மார்ச் 31ம் திகதியிட்டு ஒப்பமிட்டுள்ளனர். ஆனால் அந்த அறிக்கை ஏப்ரல் 12ம் திகதியே பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதி ஏப்ரல் 13ம் திகதி ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.

இன்னர் சிற்றி பிரஸ் கடந்த 19ம் திகதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடனும் பாலித கொஹன்னவுடனும் கலந்துரையாடியது. பாலித கொஹன்னவின் இல்ல வரவேற்பறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அப்போது, இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் கூறியிருப்பனும், பொதுமக்கள் மத்தியில் அது வெளியிடப்படக் கூடாது என்று பாலித கொஹன்ன வாதிட்டார்.

ஐ.நா இந்த அறிகையை இன்னமும் ஏன் வெளியிடவில்லை என்று பாலித கொஹன்னவிடம் கேட்டபோது, இது பொதுமக்களுக்குத் தேவையற்றது என்று கூறினார். இந்த அறிக்கை ஐ.நா பொதுச்செயலருக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நாவுக்கு பதிலளிப்பதற்கு சிறிலங்கா 36 மணி நேரம் காலஅவகாசம் கோரிய போதும் இதுவரை பதிலளிக்காதது ஏன் என்று பாலித கொஹன்னவிடம் கேட்டபோது, “195 பக்கங்கள் கொண்ட அறிக்கைக்கு 36 மணி நேரத்தில் எவ்வாறு பதிலளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

கடந்தவாரம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர், புதன்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை சிறிலங்காவில் விடுமுறை நாட்கள்.
அதன் பின்னர் கடந்த திங்களன்று பூரணை நாள் விடுமுறை“ என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னர் சிற்றி பிரஸ் பாலித கொஹன்னவை அவரது வதிவிடத்தில் சந்திக்க முன்னர், எகிப்தின் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பரதிநிதி மஜெட் அப்டிலாசிஸ் அங்கு சென்று கொஹன்னவுடனும், சவீந்திர சில்வாவுடனும் கலந்துரையாடியுள்ளார்.

எகிப்பது தான் பொதுநலவாய நாடுகளுக்குத் தலைமை வகிக்கிறது.

சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலரின் முயற்சிகளுக்கு எதிராக அழுத்தங்கள் கொடுப்பது பற்றியே இவர்கள் பேசியுள்ளதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: