புதன், 20 ஏப்ரல், 2011

பான் கீ மூன் என்ன செய்யப் போகிறார்? - கேள்வி எழுப்புகிறது இன்னர் சிற்றி பிரஸ்

ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் வழங்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் பிரதியே கொழும்பு நாளிதழுக்கு வழங்கப்பட்டதாக இன்னர் சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் குழு தமது 196 பக்க அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கடந்த 12ம் நாள் கையளித்த பின்னர், அதன் வன்பிரதி ஒன்று ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதியும், இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவருமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் வெளியிடவுள்ளதாக அப்போது ஐ.நா தரப்பில் அவரிடம் கூறப்பட்டது.

அதற்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சிறிலங்கா அரசுக்கு கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்படுவதாக கேட்டிருந்தார்.

அதற்கு ஐ.நா 36 மணிநேரம் காலஅவசகாசம் தருவதாகக் கூறியிருந்தது. ஆனால் 36 மணிநேர காலஅவகாசம் முடிவடைந்த போதும் சிறிலங்கா அரசின் பதில் ஐ.நாவுக்குக் கிடைக்கவில்லை.

அந்த 36 மணிநேரத்துக்குள், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அறிக்கையின் வன்பிரதி ‘ஸ்கான்‘ செய்யப்பட்டு, சிறிலங்கா அதிபருடன் இணங்கிப் போகும் ஐலன்ட் நாளிதழுக்கு வழங்கப்பட்டது.

ஐலன்ட் நாளிதழ் இந்த அறிக்கையை வெளியிட்டு 5 நாட்களாகியும், பான் கீ மூன் இந்த அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை.

இந்த அறிக்கைக்கு எதிராக மே 1ம் நாள் பாரிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர் இதற்கு என்ன செய்யப் போகிறார்?

போரை நிறுத்துமாறு அவர் ஏன் கோரவில்லை? நம்பியாரை ஏன் தனது தூதுவராக அனுப்பி வைத்தார்?

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய விஜய் நம்பியாரை அவர் தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது ஏன்?

பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதை ரஸ்யா தடுத்துள்ள நிலையில், ரஸ்யாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தில் போது பான் கீ மூன் எதைப் பற்றிப் பேசப் போகிறார்? என்றெல்லாம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: