செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பொஸ்னிய போர்க்குற்றங்களுக்கு ஒப்பானவை! முன்னாள் ஐ.நா பேச்சாளர் Gordon Weiss

2009 ம் ஆண்டுக் காலப்பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் போர்க்குற்றங்கள், பொஸ்னியாவில் 1995 ம் ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு ஒப்பானவை என வன்னிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காவில் ஐ.நா சபையின் பேச்சாளராக இருந்த Gordon Weiss தெரிவித்துள்ளார்.
பொஸ்னியாவின் Srebrenica நகரில் சேர்பிய படைகள் மேற்கொண்ட இப்படுகொலையில் 7000 பேர்வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக இலண்டனை மையமாகக் கொண்டிருக்கும் சனல் 4 தொலைக்காட்சிக்கு Gordon Weiss அளித்த செவ்வியில் வன்னிப் போரின்போதான போர்க்குற்றங்களை சிறிலங்காவின் Srebrenica என வர்ணித்துள்ளார்.
ஏற்கனவே ஊடகங்களில் கசிந்துள்ள ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைகளின்படி வன்னி யுத்தத்தின்போது பத்தாயிரக் கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதன்போது அப்பாவி பொதுமக்கள்மீது கண்மூடித்தனமான கனரக தாக்குதல்களை சிறிலங்கா படைகள் திட்டமிட்டரீதியில் மேற்கொண்டதாகவும் வைத்தியசாலைகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நிபுணர்குழுவின் அறிக்கை விடுதலைப் புலிகள் மீதும் - பொதுமக்களை வெளியேற விடாது தடுத்தமை, பாதுகாப்பு அரணாக அவர்களைப் பயன்படுத்தியமை போன்ற - குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வன்னி யுத்த காலத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சி எதுவும் எடுக்கப்படாமை குறித்தும் நிபுணர்குழு தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளதுடன் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பாக ஐ.நா சேகரித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு பகிரங்கப்படுத்துவது படுகொலைகளைத் தடுத்க வேண்டும் என்ற குரலை பலப்படுத்தியிருக்கும் எனவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளதாக நம்பப்படுகிறது.
பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய விடயத்தில் தனது பக்க தவறுக்கான பொறுப்பையும் குற்றச்சாட்டையும் ஏற்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஐ.நா பேச்சாளர், இப் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச போர்க்குற்ற விசாரணை வரும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நடந்த போர்க்குற்ற சம்பவங்களைத் தட்டிக்கழிப்பதற்கு இனி எந்தவொரு பலம்வாய்ந்த நாடாலும் முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: