செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்த வல்லுநர் குழுவின் அறிக்கை: பகுதி-02

நாட்டிலுள்ள ஏனைய பொறிமுறைகள்

சிறிலங்காவில் அமைக்கப்பட்டிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடு மற்றும் அதனது செயற்பாடுகள் தந்த விளைவுகள் ஆகியன தொடர்பாகக் கருத்திலெடுக்காது, சிறிலங்காவில் முன்னெடுக்கவேண்டிய பொறுப்புச்சொல்லும் செயல்முறை தொடர்பாக நாட்டினது நீதி முறைமை முதன்மைப் பங்கினை வகிக்கவேண்டும்.

எவ்வாறிருப்பினும் சிறிலங்காவினது நீதிமுறைமையின் கடந்தகாலச் செயற்பாடுகளை அவதானிக்கும் போது இன்றைய அரசியல் சூiமைவில் சிறிலங்காவினது நீதித்துறையானது உண்மையான நீதியினை வழங்கும் என்ற நம்பிக்கை வல்லுநர்கள் குழுவிடம் இல்லை. அது அதனிடம் செயற்படுதிறன் இல்லை எனப் பொருட்படாது.

மாறாக, சிறிலங்காவினது நீதித் துறையினைப் பொறுத்தவரையில் அதனிடம் முறையாகச் செயற்படுவதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லை என்றே கூறவேண்டும்.

குறிப்பாக, அண்மைய வரலாற்றில் நாட்டினது அதிபரிடம் அதிக அதிகாரங்கள் சென்று சேர்ந்திருக்கும் நிலையில் சட்டமா அதிபரது அதிகாரம் குறைவடைந்துவிட்டது. மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருக்க அவசரகாலச்சட்டமும் தொடர்ந்தும் அமுலில் இருப்பது சிறிலங்காவினது நீதித்துறையானது சரியாகச் செயற்படுவதைத் தடுக்கும் ஒரு தடையாக அமைகிறது.

தவிர, மனித உரிமைகளை உறுதிப்படுத்த முடியாததொரு சூழமைவினையும் இது சிறிலங்காவினது நீதித்துறைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோலவே, போரின் இறுதிநாட்களில் மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் இடம்பெற்றதைக் காட்டும் காத்திரமான ஆதாரங்கள் வெளிவந்த நிலையிலும் சிறிலங்காவினது இராணுவ நீதிமன்றமானது வினைத்திறன்கொண்ட பொறுப்புச்சொல்லும் பொறிமுறையாகச் செயற்படவில்லை என்று குழு கருதுகிறது.

பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டில் முதன்மையான பங்கினை வகித்திருக்கக்கூடிய நாட்டினது இதர கட்டமைப்புக்களும் குறிப்பிட்டுக்கூறக்கூடிய வகையில் பலமிழந்திருப்பதாகவே தெரிகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக, சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்து நீதியினை நிலைநாட்டும் வகையில் எண்ணற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த உரிமை மீல்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகளில் சில ஆணைக்குழுக்கள் ஈடுபட்ட அதேநேரம், அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்துமே குறிப்பிட்ட குற்றத்திற்கான பரந்துபட்ட பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டினை முன்னெடுக்கத் தவறிவிட்டன.

இந்த ஆணைக்குழுக்கள் பல தங்களது விசாரணையின் பின்னான பொதுமக்களுக்கான அறிக்கையினையோ அல்லது பரிந்துரைகளையோ வெளிப்படையாக வழங்குவதற்குத் தவறியிருந்தன.

நாட்டில் முன்னெடுக்கவேண்டிய பொறுப்புச்சொல்லும் செயன்முறைக்கு ஆதரவாக சிறிலங்காவினது மனித உரிமைகள் ஆணைக்குழு முக்கிய பங்களிப்பினைச் செய்திருக்க முடியும், ஆனால் காணாமற்போனவர்கள் மற்றும் தடுப்பிலுள்ளவர்களின் நல்வாழ்வு ஆகியன தொடர்பாக சிறிலங்காவினது மனித உரிமை ஆணைக்குழுவானது மேலுமதிக அரசியல் உறுதிப்பாட்டுடனும் தனது வளங்கள் அனைத்தையும் திரட்டிச் செயலாற்றவேண்டும் என வல்லுநர்கள் குழு கருதுகிறது.

பொறுப்புச்சொல்லும் செயல்முறையினை முன்னெடுப்பதிலுள்ள இதர தடைகள்

சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் குறிப்பிட்ட சில சமகால விடயங்களை வல்லுநர்கள் குழு தனது நடவடிக்கையின் போது கண்டுகொண்டது. இந்த விடயங்களுக்குத் தீர்வுகாணப்படாதவிடத்து அது சிறிலங்காவில் உண்மையான பொறுப்சொல்லும் செயன்முறைகள் இடம்பெறுவதையும் நீடித்து நிலைக்கக்கூடிய அமைதி திரும்புவதையும் இல்லாதுசெய்துவிடும். முதன்மையான அந்த அம்சங்கள் வருமாறு:

1.அரச தரப்பிலான வெற்றிக்களிப்பு. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான அர்த்தத்தில் அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்களிப்பானது அரசியல், சுயாட்சி, அங்கீகாரம் போன்ற தமிழர்களின் அபிலாசைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக இது அமைகிறது. தனது இராணுவ தந்திரோபாயத்தின்போது விலையாகக் கொடுக்கப்பட்ட மனித உயிர்களைப் பொருட்படுத்தும் தன்மை மறுக்கப்படுவதாக இந்த வெற்றிமுழக்கம் அமைகிறது.

2. இனத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்களில் குறிப்பிட்டதொரு சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் புறம்தள்ளப்படும் கொள்கைகள்தான் மோதலுக்கான முழுமுதற் காரணங்களாக அமைந்தன.

3. போர்க் கால முனைப்புக்கள் இடைவிடாது தொடர்கின்றன. மேலே குறிப்பிட்டவாறு அவசரகாலத் தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பன தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதற்கு அப்பால், போர் இடம்பெற்ற முன்னாள் பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்படுகிறது. அத்துடன் இந்தப் பிராந்தியங்களில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் தங்கு தடையின்றித் தொடர்கின்றன. இவை அனைத்துமே அச்சம் நிறைந்ததொரு சூழலையும் அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் மலிந்ததொரு நிலைமையினையுமே தோற்றுவித்திருக்கிறது.

4. சனநாயக ஆட்சிப் பண்புகளுக்கு முரண்படும் வகையில் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இதுபோல ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதாகவும் அமைகிறது.

5. புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு. பல பத்தாண்டுகளாக புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தார்மீக மற்றும் பொருள் ஆதரவினை வழங்கி நின்றனர். வன்னிப்பிராந்தியத்தில் அரங்கேறிய மனிதாபிமானப் பேரனர்த்தத்தில் விடுதலைப் புலிகளின் பங்கினை புலம்பெயர் தமிழர்களில் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். இது சிறிலங்காவில் நீடித்து நிலைக்கக்கூடிய அமைதியினையும் பொறுப்புச்சொல்லும் செயல்முறையினையும் ஏற்படுத்துவதில் மேலும் தடையாக அமைகிறது.

நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட விரிவான முறைமைகளை முன்னெடுப்பதுதான் வினைத்திறன்கொண்ட பொறுப்புச் சொல்லும் செயற்முறையினை முன்னெடுப்பதற்கான சூழமைவினை ஏற்படுத்தும்.

இதற்கமைய, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்ட வெளிப்படையான தன்மை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவது அவசியமானது. வெற்றி முழக்கத்தன்மையிலிருந்தும் வெளியேறியதாகவும் இலங்கையின் இன பன்முகத்தன்மையை அடையாளம் காண்பதற்கான அரசியல் தீர்வுக்கான இதயசுத்தியுடனான உறுதிப்பாட்டை மறுக்கும் அரசாங்கத்தின் இன்றைய நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும்.

நாட்டின் எதிர்காலத்திற்கான அத்திவாரமாக தமிழர்கள் உட்பட தனது சகல குடிமக்களதும் கரிசனைகளை உள்ளடக்கிய தீர்வை ஏற்படுத்தவேண்டிய தேவையினை மறுக்கும் நிலை மாறவேண்டும்.

பொதுமக்கள் பாதுகாப்பில் அனைத்துலகத்தின் பங்களிப்பு

போரின் இறுதி நாட்களில் ஐ.நா.வின் அரசியல் அமைப்புகள், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறிவிட்டன. மேலும் பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பாகவும் மருத்துவமனைகள் மீதான எறிகணைத் தாக்குதல்களை நிறுத்துவது குறித்தும் மூத்த அனைத்துலகத அதிகாரிகள் பகிரங்கமாக ஆலோசனையினைத் தெரிவித்த அதேநேரம் தனிப்பட்ட முறையிலும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

வன்னியில் இதுபோல மனிதப் பேரவலம் அரங்கேறிக்கொண்டிருந்தபோது பொதுமக்கள் இழப்புகள் குறித்த தகவல்களை ஐ.நாவோ அன்றில் அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவோ வெளியிட்டிருந்தால் பொதுமக்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற அழைப்பினை மேலும் வலுப்படுத்தியிருக்கமுடியும் என வல்லுநர்கள் குழு நம்புகிறது.

மே 2009ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை சபையானது சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களைக் கொண்டுவந்திருந்தது. ஆனால் இங்கு ஐ.நா மனித உரிமைச் சபையானது போர் தொடர்பான முழுமைபெறாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தனது தீர்மானத்தினைக் கொண்டுவந்திருக்கலாம்.

பரிந்துரைகள்:

இந்தப் புறநிலையில் வல்லுநர்கள் குழுவானது கீழ்காணும் பரிந்துரைகளை முன்வைக்கிறது. பொறுப்புச்சொல்லும் செயல்முறை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கும் ஐ.நாவின் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் தொடரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கான ஒரு திட்டமாக எங்களது இந்தப் பரிந்துரைகள் அமையும் என நம்புகிறோம்.

பொறுப்புச்சொல்லும் செயன்முறையின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில், வல்லுநர்கள் குழு அவசியமானதாகக் கருதும் இந்தப் பரிந்துரைகள் அமைகின்றன. சிறிலங்கா அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய தரப்பினர் இந்தப் பரிந்துரைகளை ஏற்றுச் செயற்படுவது அவசியமானது.

பரிந்துரை 1:

விசாரணைகள்

அ. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மைகொண்டவை என வல்லுநர்கள் குழு கண்டிக்கும் நிலையில், சிறிலங்கா அரசாங்கமானது தனக்கிருக்கும் அனைத்துலக கடப்பாடுகளின் அடிப்படையில் வினைத்திறன்கொண்ட பொறுப்புச் சொல்லும் செயல்முறையினை உள்நாட்டிலேயே ஏற்படுத்தவேண்டும். ஆயுதப் போராட்டத்தில் தொடர்புபட்டிருந்த இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதகாகக் கூறப்படும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையிலான செயற்பாடுகளை இதயசுத்தியுடன் விசாரிப்பதற்கான நடைமுறைகளை உடனடியாகவே அது ஆரம்பிக்கவேண்டும்.

ஆ. சிறிலங்காவில் இடம்பெற்றதாககக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் வகையில் செயலாளர் நாயகம் சுதந்திரமான அனைத்துலக விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை உடனடியாகவே ஏற்படுத்தவேண்டும். இந்த விசாரணைக் கட்டமைப்பினது ஆணை கீழ்கண்ட அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கவேண்டும்:

1. முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முறையாக விசாரித்தல் உள்ளிட்ட தன்னுடைய பொறுப்புச்சொல்லும் செயல்முறையினை சிறிலங்கா அரசாங்கமானது எத்தகைய வினைத்திறனுடன் முன்னெடுக்கிறது என்பதை கண்காணிப்பதோடு நிலைமையினை ஆராய்தல். மற்றும் தனது கண்டறிதல்கள் தொடர்பாக செயலாளர் நாயகத்திற்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆலோசனை வழங்குதல்.

2. இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் தொடர்பாக சுதந்திர விசாரணையினை மேற்கொள்ளுதல் மற்றும் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகள் வினைத்திறன்கொண்டதாகவும் இதயசுத்தியுடன் கூடியதாகவும் இருக்கிறதா என்பதை அவதானித்தல்.

3. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகத் தனக்கு வழங்கப்பட்ட மற்றும் தன்னால் சேகரிக்கப்பட்ட தகவல்களை எதிர்காலத் தேவைகருதிப் பாதுகாத்துவைத்தல். வல்லுநர்கள் குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினது இதர கட்டமைப்புகள் சேகரித்த தகவல்களும் இதற்குள் அடங்கும்.

பரிந்துரை 02:

சிறந்ததொரு பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டுக்கான ஏனைய செயல்முறைகள்

அ. வன்னி பகுதியில் இடம்பெற்ற போரில் உயிர் தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் கௌரவத்தினையும் ஏற்றுக்கொள்ளும் அதேநேரம் கீழ்க்காணும் குறுகியகால செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும்:

1. அரசாங்கம், அதனது துணை அமைப்புக்கள், துணை இராணுவக் குழுக்கள் மற்றும் அரசாங்கம் சகித்துக்கொள்ளும் இதர குழுக்களின் அனைத்து வகையான வன்முறைகளும் முடிவுக்கு வரவேண்டும்.

2. போரின்போது கொல்லப்பட்டவர்களின் மனித எச்சங்களை மீட்டெடுத்து அவற்றை அவர்களது குடும்பங்களுக்கு வழங்குவதற்கும் கலாசார அனுட்டானங்களை மேற்கொள்ளுவதற்குமான வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

3. போரின்போது கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்களுக்கு மரண சாண்றிதழ்களை வழங்கவேண்டும். மரணமடைந்த, காணாமற்போனவர்களது உறவினர்கள் இதுபோன்ற ஆவணங்களைக் கோரும்போது தட்டிக்கழிக்காமல், குற்றச்சாட்டுகள் எதனையும் முன்வைக்காமல், மேலதிக விசாணைகள் மேற்கொள்ளவேண்டும் என அலைக்கழிக்காமல் இந்த ஆவணங்களை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4. போரில் தப்பிப்பிழைத்த அனைவரதும் கலாசார, மரபுசார் விழுமியங்கள் மற்றும் வழமைகளுக்கு மதிப்பளித்து இவர்கள் அனைவருக்கும் சமூக உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் அல்லது அதற்கான வழிவகைகளைச் செய்துகொடுக்கவேண்டும்.

5. தொடர்ந்தும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்களது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

6. மீள்குடியேற்றபட்பட்டிருக்கும் மக்களின் வாழ்வில் இயல்புநிலை தோன்றும் வரைக்கும் அவர்களுக்கான உணவு நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்நதும் மேற்கொள்ளவேண்டும்.

ஆ. கட்டாயக் காணமல்போதலுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்பட்டிருப்பவர்கள் யாரோ அவர்களது விதி மற்றும் அவர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது போன்ற விபரங்களை உடனடி விசாரணைகளை மேற்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்.

இ. தற்போது நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தினை உடனடியாக இல்லாதுசெய்வதோடு அனைத்துலகக் கடப்பாடுகளுக்கு ஏற்ற வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை மாற்றியமைக்கவேண்டும். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களும் மேற்குறித்த இந்தச் சட்ட நடைமுறைகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றித் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களையும் விடுதலை செய்யும் வகையில் கீழ்க்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்:

1. எங்கெங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருப்பர்களின் முழுமையான பெயர் விபரங்களை வெளியிடவேண்டும். அத்துடன் குறிப்பிட்ட எந்தச் சட்டத்தின் அடிப்படையில் இவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவருக்கும் எடுத்துக்கூறவேண்டும்.

2. தடுப்பில் உள்ளவர்களது குடும்ப உறுப்பினர்களும் அவர்களது சட்ட ஆலோசகர்களும் தடுப்பில் உள்ளவர்களைச் சென்று பார்வையிடும் வகையிலான வசதிவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும்.

3. தாங்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தடுப்பில் உள்ளவர்கள் நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு அவர்களை அனுமதிக்கவேண்டும்.

4. கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான காத்திரமான ஆதாரங்கள் எதுவுமற்ற குற்றவாளிகளை உடனடியாக விடுவிப்பதோடு அவர்கள் சமூகத்துடன் மீண்டும் இணைந்துவாழும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

ஈ. நடமாடும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அல்லது இல்லாதுசெய்யும் வகையிலான அனைத்து வன்முறைசார் நடவடிக்கைகளையும், அச்சத்தினைத் தோற்றுவிக்கும் இதர செயற்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும்.

பரிந்துரை 03:

நீண்டகால பொறுப்புச்சொல்லும் செயற்பாட்டுக்கான வழிமுறைகள்

சிறிலங்காவினது வரலாற்றில் கடந்த காலத்தில் இடம்பெற்றது என்ன என்னதை நேர்மையுடன் ஆராய்வதற்குப் பொருத்தமான சூழமைவு இன்று இல்லை. கால ஓட்டத்தில் இதற்கான அரசியல் சூழமைவு திறக்கப்படும்போது, போரின் போது இடம்பெற்ற சம்பவங்களுக்கான பொறுப்புச்சொல்லும் செயல்முறைகளாக கீழ்க்காணும் அம்சங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

அ. இரண்டு தரப்பினரதும் இனத்தின் பாலும் தேசியத்தின் பாலும் அமைந்த தீவிரவாதம் உள்ளிட்ட போரின் அடிப்படைக் காரணங்கள், போர் முன்னெடுக்கப்பட்ட முறைமை, வன்முறையின் வடிவங்கள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய கட்டமைப்புசார் செயற்பாடுகளை ஆராயும் வகையில் மக்கள் அமைப்புகளின் காத்திரமான பங்கெடுப்புடன் சிறிலங்கா ஒரு செயற்பாட்டினை முன்னெடுக்கவேண்டும். ஆனால் இந்தச் செயற்பாடு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது செயற்பாடுகளிலிருந்து விலகியதாக அமையவேண்டும்.

ஆ. போரின் இறுதி நாட்களில் ஏற்பட்ட பொதுமக்களின் பேரிழப்பில் தனது பங்கு மற்றும் பொறுப்பு என்ன என்பதை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இ. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற அனைத்து வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுகு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான செயல்திட்டம் ஒன்றை அனைத்துலக நியமங்கள் மற்றும் தரத்திற்கு அமைவாகச் சிறிலங்கா ஆரம்பிக்கவேண்டும். இந்தச் செயல்முறையானது பாதிக்கப்பட்ட பெண்கள், சிறார்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்படவேண்டும்.

பரிந்துரை 04:

ஐக்கிய நாடுகள் சபை

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதிநாட்களிலும் அதன் பின்னரும் வன்னிப் பிராந்திய மக்களின் பரிதாப நிலைக்கு ஐ.நா கைக்கொண்ட பதில் நடவடிக்கையினைக் கருத்திற்கொண்டு கீழ்க்காணும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன:

அ. மே 2009ம் ஆண்டு ஐ.நாவின் மனித உரிமைச் சபை சிறிலங்கா தொடர்பாக மேற்கொண்ட தீர்மானங்கள் வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கையின் அடிப்படையில் மீள்பிரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

ஆ. சிறிலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் ஐ.நாவினது கட்டமைப்புகள் தமக்கான மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு ஆணைகள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய பரந்துபட்ட மீளாய்வினை செயலாளர் நாயகம் முன்னெடுக்க வேண்டும்.

இ. போரின் நேரடிப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் சிறிலங்காவிலுள்ள மக்கள் அமைப்புகள் என்பன காட்டிநின்ற அதியுச்ச துணிவு மற்றும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் ஆகியன தொடர்பாக வல்லுநர்கள் குழு ஆச்சரியமடைகிறது.

வல்லுநர்கள் குழுவினது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் முறையாகப் பின்பற்றப்படுமெனில், உண்மையான பொறுப்புச்சொல்லும் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதற்கு வழி பிறக்கும். இது சிறிலங்காவில் நீதியும் அமைதியும் கௌரவமும் நிலைபெறுவதற்கான நிலைமையினை ஏற்படுத்தும்.

  • இன்னமு்ம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத, ஐ.நா நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கையின் ஒருபகுதி கொழும்பிலிருந்து வெளியாகும் ‘ஐலன்ட்‘ நாளேட்டில் வெளியாகியிருந்தது. அதனை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

கருத்துகள் இல்லை: